நம்முடைய பழைய மனித சுபாவம் கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் அறையப்பட்டது என்பதை நாம் அறிவோம்; இதனால் பாவத்திற்கு அடிமையாயிருந்த உடல் அதன் வல்லமை இழந்துபோகும்; நாம் இனியொருபோதும் பாவத்திற்கு அடிமை இல்லை.
உங்கள் உடலின் உறுப்புக்களை அநீதியின் கருவிகளாகப், பாவத்துக்கு ஒப்புக்கொடுக்க வேண்டாம். மாறாக, நீங்கள் சாவிலிருந்து வாழ்வு பெற்றவர்களாய், உங்களை இறைவனுக்கு ஒப்புக்கொடுங்கள். உங்கள் உடலின் உறுப்புக்களையும், அவருக்கு நீதியின் கருவிகளாக ஒப்புக்கொடுங்கள்.
ஒருவனுக்கு அடிமையாகக் கீழ்ப்பட்டிருக்கும்படி நீங்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் கீழ்ப்படிகிற அவனுக்கே அடிமைகளாயிருக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? அப்படியே, நீங்கள் மரணத்திற்கு வழிநடத்தும் பாவத்திற்கோ, அல்லது நீதிக்கு வழிநடத்தும் கீழ்ப்படிதலுக்கோ அடிமைகள் ஆகலாம்.
ஒருகாலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாயிருந்தபோதும்கூட, நீங்கள் இறைவனிடமிருந்து பெற்ற போதனைக்கு, உங்கள் முழு இருதயத்தோடும் கீழ்ப்படிந்தபடியால், இறைவனுக்கு நன்றி.
நீங்கள் உங்கள் சுய இயல்பிலே பலவீனர்களாயிருப்பதினால், நான் மக்களின் பேச்சு வழக்கின்படியே, இதைச் சொல்கிறேன். ஒருகாலத்தில் நீங்கள் உங்கள் உடலின் உறுப்புக்களை அசுத்தத்துக்கும் தொடர்ந்து பெருகிக்கொண்டுபோகும் தீமைக்கும் ஒப்புக்கொடுத்தீர்கள். அதேவிதமாக, இப்பொழுது உங்கள் உடல் உறுப்புக்களை பரிசுத்தத்திற்கு வழிநடத்தும் நீதிக்கு அடிமைப்பட்டிருக்க ஒப்புக்கொடுங்கள்.
இப்பொழுது நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை பெற்று, இறைவனுக்கு அடிமைகளாயிருக்கிறீர்களே. அதனால், நீங்கள் பெறும் நன்மை பரிசுத்தத்திற்கு உங்களை வழிநடத்தும், அதன் முடிவோ நித்திய ஜீவன்.