யெகோவாவே, நான் துன்பத்தில் இருப்பதால், என்னில் இரக்கமாயிரும்; துக்கத்தினால் என் கண்கள் பலவீனமடைகின்றன; துயரத்தினால் என் ஆத்துமாவும் உடலும் பெலனில்லாமல் போகின்றன.
என் வாழ்க்கை வேதனையிலேயே கழிந்துபோயிற்று; அழுது புலம்பியே என் வருடங்களும் கடந்துபோயிற்று. என் துன்பத்தினால் [*துன்பத்தினால் அல்லது குற்றம்] என் பெலம் குன்றி, என் எலும்புகளும் பெலனற்றுப் போகின்றன.
என் பகைவர்கள் அனைவரின் நிமித்தம் நான் என் அயலாருக்கு நிந்தையாகிறேன்; என் நண்பர்களுக்கு நான் பயங்கரமானேன்; தெருவில் என்னைக் காண்பவர்கள் என்னைவிட்டு விலகி ஓடிப்போனார்கள்.
அநேகர் என்னை அவதூறாய்ப் பேசுகிறதைக் கேட்கிறேன், “எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம் இருக்கிறது!” அவர்கள் எனக்கு விரோதமாக சூழ்ச்சிசெய்து, என் உயிரை வாங்க சதித்திட்டம் போடுகிறார்கள்.
உமக்குப் பயப்படுகிறவர்களுக்காக நீர் குவித்து வைத்திருக்கும் நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன; உம்மிடத்தில் தஞ்சம் அடைகிறவர்கள்மேல், மனிதர் காணும்படியாக நீர் பொழிகின்ற நன்மைகள் எவ்வளவு பெரிதாயிருக்கின்றன.
யெகோவாவுக்குத் துதி உண்டாவதாக, ஏனெனில் பட்டணம் முற்றுகையிடப்பட்டு நான் சிக்கலில் இருந்தபோது, அவர் தமது உடன்படிக்கை அன்பின் அதிசயத்தை எனக்குக் காண்பித்தார்.
நான் அதிர்ச்சியடைந்து, “உமது பார்வையிலிருந்து அகற்றப்பட்டேன்” என்று சொன்னேன்; ஆனாலும் நான் உதவிவேண்டி உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, இரக்கத்திற்காக நான் கதறி அழுததை நீர் கேட்டீர்.