ஆகையால் நான் அன்பாயிருக்கிற எனக்கு பிரியமானவர்களே, என் நண்பர்களே, அப்படியே நீங்களும் கர்த்தரில் உறுதியாய் நிற்கவேண்டும். நீங்களே நான் காண விரும்புகிற என் மகிழ்ச்சியும், என் கிரீடமுமானவர்கள்.
ஆம், என் உண்மையுள்ள உடன் கூட்டாளியே, உன்னிடமும் கேட்கிறேன். இந்தப் பெண்களுக்கு உதவிசெய். இவர்கள் கிலெமெந்தோடும், மற்ற எனது உடன் ஊழியரோடும் சேர்ந்து, என்னுடன் நற்செய்திக்காக போராடினார்கள். இவர்கள் எல்லோருடைய பெயர்களும் ஜீவப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் எல்லாவற்றிலும் நன்றி செலுத்துவதோடு, உங்கள் விண்ணப்பங்களை, மன்றாட்டினாலும், வேண்டுதலினாலும் இறைவனிடம் அர்ப்பணியுங்கள்.
நீங்கள் என்னிடமிருந்து எவைகளை எல்லாம் கற்றுக்கொண்டீர்களோ, பெற்றுக்கொண்டீர்களோ, கேட்டீர்களோ, அல்லது என் நடத்தையில் கண்டீர்களோ, அவைகளையே கைக்கொள்ளுங்கள். அப்பொழுது சமாதானத்தின் இறைவன் உங்களோடு இருப்பார்.
இப்பொழுதாவது எனக்கு மீண்டும் உதவிசெய்ய உங்களுக்கு முடியுமாயிருப்பதைக்குறித்து கர்த்தரில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் என்னில் அக்கறை கொண்டிருந்தீர்கள் என்பது உண்மை. ஆனால் அதைக் காண்பிப்பதற்கு உங்களுக்குத் தருணம் கிடைக்கவில்லை என்பதும் எனக்குத் தெரியும்.
ஏழ்மையுடன் வாழவும், நிறைவுடன் வாழவும் எனக்குத் தெரியும். வயிறார சாப்பிட்டிருக்கவும், பசியாக இருக்கவும், நிறைவுடனும் தேவையுடனும் வாழவும், எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எப்படி மனநிறைவுடன் வாழ்வது என்பதன் இரகசியத்தையும் நான் கற்றுக்கொண்டுள்ளேன்.
மேலும் பிலிப்பியர்களே, நான் மக்கெதோனியாவைவிட்டுப் புறப்பட்டுவந்து, உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்த ஆரம்ப நாட்களில், உங்களைத்தவிர வேறு எந்த ஒரு திருச்சபையும், கொடுக்கல் வாங்கல் காரியங்களில் என்னுடன் பங்குகொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்;
எனவே நான் எல்லாவற்றையும் முழுமையாகப் பெற்றுக்கொண்டேன். என்னிடம் இப்போது தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. நான் நீங்கள் அனுப்பிய நன்கொடையை எப்பாப்பிராத்துவிடமிருந்து பெற்றுக்கொண்டேன், அவை இறைவனைப் பிரியப்படுத்துகிற நறுமணமுள்ள காணிக்கைகளும், ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய பலியும் ஆகும்.