மோசே ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் ஆயிரம்பேரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆசாரியன் எலெயாசாரின் மகன் பினெகாசுடன் யுத்தத்திற்கு அனுப்பினான். பினெகாஸ் தன்னுடன் பரிசுத்த இடத்திலிருந்த பொருட்களையும், தொனிக்கும் பூரிகைகளையும் செய்வதற்கு எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு போனான்.
அவர்கள் மீதியானியரின் ஐந்து அரசர்களாகிய ஏவி, ரெக்கெம், சூர், ஊர், ரேபா ஆகியோரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகன் பிலேயாமையும் வாளினால் வெட்டிக்கொன்றார்கள்.
இஸ்ரயேலர் மீதியானிய பெண்களையும், குழந்தைகளையும் சிறைப்பிடித்து, அவர்களுடைய ஆட்டு மந்தைகளையும், மாட்டு மந்தைகளையும், அவர்கள் பொருட்களையும் கொள்ளையாக எடுத்துக்கொண்டார்கள்.
அவர்கள் தாங்கள் சிறைபிடித்தவர்களையும், யுத்தத்தில் கைப்பற்றியவைகளையும், கொள்ளைப்பொருட்களையும் மோசே, ஆசாரியன் எலெயாசார் மற்றும் இஸ்ரயேலிய சமுதாயத்தினர் அனைவரிடமும் கொண்டுவந்தார்கள். அப்பொழுது இவர்கள் எரிகோவுக்கு எதிரே யோர்தானுக்கு அருகில் மோவாப் சமவெளியில் முகாமிட்டிருந்தார்கள்.
பிலேயாமின் ஆலோசனையைக் கேட்டு பேயோரில் நடந்த காரியத்தில் இஸ்ரயேலரை யெகோவாவிடமிருந்து வழிவிலகச்செய்ய உடந்தையாக இருந்தவர்கள் அவர்கள் அல்லவா? அதனால்தானே யெகோவாவின் மக்களைக் கொள்ளைநோய் வாதித்தது.
“யாரையாகிலும் கொன்றவனோ அல்லது கொல்லப்பட்ட எவனையாவது தொட்டவனோ ஏழுநாட்களுக்கு முகாமுக்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் நீங்கள் உங்களையும், உங்கள் கைதிகளையும் சுத்திகரிக்கவேண்டும்.
நெருப்பினால் எரிந்துபோகாத வேறு எதையும் நெருப்பிலே போடவேண்டும். அப்பொழுது அது சுத்தமாகும். ஆனால் சுத்திகரிக்கும் தண்ணீரினாலும் அது சுத்திகரிக்கப்பட வேண்டும். அத்துடன் நெருப்பினால் எரியக்கூடிய எதையும் அந்த நீரினால் சுத்திகரிக்கவேண்டும்.
ஏழாம்நாளில் [*முகாமுக்கு வெளியே சிறைவைக்கப்பட்ட ஏழாம்நாளில்.] நீங்கள் உங்கள் உடைகளைத் துவைத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும் சுத்தமாவீர்கள். பின்பு நீங்கள் முகாமுக்குள் வரலாம்” என்றான்.
அத்துடன் யுத்தத்தில் சண்டையிட்ட போர்வீரர்களிடமிருந்து எல்லாவற்றிலும் ஐந்நூறில் ஒரு பங்கை யெகோவாவுக்கான அன்பளிப்பாக வேறுபிரித்து வைக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அவை ஒதுக்கப்படவேண்டும்.
அதேபோல் இஸ்ரயேலருக்குக் கொடுக்கப்பட்ட மற்ற அரைப்பங்கிலிருந்து எல்லாவற்றிலும் ஐம்பதில் ஒரு பங்கைத் தேர்ந்தெடுக்கவேண்டும். அவை மனிதர்களானாலும், மாடுகளானாலும், கழுதைகளானாலும், செம்மறியாடுகளானாலும், வெள்ளாடுகளானாலும் அல்லது வேறுமிருகங்களானாலும் அவற்றிலிருந்து தெரிவு செய்யவேண்டும். அவற்றை யெகோவாவின் இறைசமுகக் கூடாரத்திற்குப் பொறுப்பாயிருக்கும் லேவியர்களுக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
ஆயிரம்பேருக்குத் தளபதிகளிடமிருந்தும், நூறுபேருக்குத் தளபதிகளிடமிருந்தும் மோசேயும் எலெயாசாரும் பெற்றுக்கொண்ட தங்கத்தை அவர்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தார்கள். அதன் நிறை 16,750 சேக்கலாக இருந்தது.
மோசேயும், ஆசாரியன் எலெயாசாரும் ஆயிரம்பேரின் தளபதிகளிடமும், நூறுபேரின் தளபதிகளிடமும் இருந்து தங்கத்தை ஏற்றுக்கொண்டார்கள். அதை யெகோவாவுக்கு முன்பாக இஸ்ரயேலருக்கான ஒரு ஞாபகார்த்தமாக சபைக் கூடாரத்திற்குள் கொண்டுவந்தார்கள்.