மேலும் நீ அவர்களிடம், நீங்கள் யெகோவாவுக்குக் கொடுக்கவேண்டிய, நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கை இதுவே. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக தகன காணிக்கையாக, ஒரு வயதுடைய குறைபாடற்ற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளைச் செலுத்தவேண்டும்.
அவற்றுடன் பத்தில் ஒரு பங்கு எப்பா [*அதாவது, சுமார் 1.6 கிலோகிராம்] அளவான மாவுடன், நான்கில் ஒரு பங்கு ஹின் [†அதாவது, சுமார் 1லிட்டர்] அளவான இடித்துப் பிழிந்த ஒலிவ எண்ணெயைவிட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.
ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும் சேர்த்துச் செலுத்தப்படும் பானகாணிக்கை, நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான திராட்சைரசமாயிருக்க வேண்டும். இந்தப் பானகாணிக்கையைப் பரிசுத்த இடத்தில் யெகோவாவுக்காக ஊற்றுங்கள்.
இரண்டாவது செம்மறியாட்டுக் குட்டியை, காலையில் செலுத்தியதுபோன்று அதேவிதமான தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் பொழுதுபடும் வேளையில் செலுத்துங்கள். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும்.
“ ‘ஓய்வுநாளில் ஒரு வயதுடைய குறைபாடற்ற இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளைக் காணிக்கையாகச் செலுத்துங்கள். அவற்றுடன், அதற்குரிய பானகாணிக்கையையும் செலுத்தி, பத்தில் இரண்டு எப்பா அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த, சிறந்த மாவைக்கொண்ட தானிய காணிக்கையையும் செலுத்துங்கள்.
“ ‘ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளான அமாவாசை தினத்தில், இரண்டு இளங்காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடன் பத்தில் இரண்டு பங்கு எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசையப்பட்ட, தானிய காணிக்கை கொடுக்கவேண்டும்.
ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும், பத்தில் ஒரு பங்கு எப்பா அளவு தரமான மாவில் எண்ணெய்விட்டுப் பிசையப்பட்ட தானிய காணிக்கையையும் செலுத்தவேண்டும். இது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு தகன காணிக்கை.
ஒவ்வொரு காளையுடனும் இரண்டில் ஒரு ஹின் அளவு திராட்சை இரசமும், செம்மறியாட்டுக் கடாவுடன் மூன்றில் ஒரு ஹின் அளவு திராட்சை இரசமும், ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும் நாலில் ஒரு ஹின் அளவு திராட்சை இரசமும் பானகாணிக்கையாகச் செலுத்தவேண்டும். வருடத்தின் ஒவ்வொரு அமாவாசை தினத்திலும் செலுத்தப்படவேண்டிய மாதாந்திர தகன காணிக்கை இதுவே.
நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையை யெகோவாவுக்குக் கொண்டுவாருங்கள். இரண்டு இளங்காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையுமே அவ்வாறு தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவையாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
ஒவ்வொரு இளங்காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அவ்வாறே செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவைச் செலுத்தவேண்டும்.
இவ்விதமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கைக்கான உணவை ஒவ்வொரு நாளும் ஏழுநாட்களுக்கு யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்தவேண்டும். இதை வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய பானகாணிக்கையுடனும் இதையும் செலுத்தவேண்டும்.
“ ‘வாரங்களின் பண்டிகையான அறுவடைப் பண்டிகை காலத்தில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட தானியத்தை யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தும் முதற்பலனின் நாளிலே, பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமாக நீங்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
மேலும் இரண்டு இளங்காளைகளையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
ஒவ்வொரு காளையுடனும் பத்தில் மூன்று எப்பா அளவான சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவில் இவ்விதமாய்ச் செலுத்தப்பட வேண்டும்.
இவற்றை அவற்றுக்குரிய பானகாணிக்கைகளோடும், வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும் இவைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இந்த மிருகங்கள் எல்லாம் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும் என்பதில் கவனமாய் இருங்கள்.