English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 27 Verses

1 செலொப்பியாத்தின் மகள்கள், யோசேப்பின் மகன் மனாசேயின் வம்சங்களில் ஒன்றைச் சேர்ந்தவர்கள். இந்த செலொப்பியாத் எப்பேரின் மகன். ஏப்பேர் கீலேயாத்தின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். மாக்கீர் மனாசேயின் மகன். செலொப்பியாத்தின் மகள்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோர்.
2 அவர்கள் சபைக் கூடாரவாசலுக்குச் சமீபமாய் வந்து, மோசேக்கும், ஆசாரியன் எலெயாசாருக்கும், தலைவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் முன்பாக நின்றார்கள். அப்பெண்கள் அவர்களிடம்,
3 “எங்கள் தகப்பன் பாலைவனத்தில் இறந்துவிட்டார். யெகோவாவுக்கு விரோதமாக ஒன்றுகூடி கோராகைப் பின்பற்றியவர்களின் மத்தியில் அவர் இருக்கவில்லை. அவர் தன்னுடைய பாவத்தினாலேயே இறந்துவிட்டார். அவருக்கு மகன்கள் ஒருவரும் இல்லை.
4 அவருக்கு மகன்கள் இல்லாதபடியால், எங்களுடைய தகப்பனின் பெயர் அவருடைய வம்சத்திலிருந்து இல்லாமல் போகவேண்டியதேன்? எங்கள் தகப்பனின் உறவினர்களுக்குள்ளே எங்களுக்கும் காணி தரவேண்டும்” என்றார்கள்.
5 மோசே அவர்களுடைய கோரிக்கையை யெகோவாவுக்கு முன்பாகக் கொண்டுவந்தான்.
6 யெகோவா அவனிடம்,
7 “செலொப்பியாத்தின் மகள்கள் கேட்பது சரியானதே. நீ அவர்களுக்குச் சொத்துரிமையாக அவர்கள் தகப்பனின் உறவினர்கள் மத்தியில் காணியைக் கொடுக்கவேண்டும். இவ்விதமாய் நீ அவர்களுடைய தகப்பனின் சொத்துரிமையை அவர்களிடம் ஒப்புவிக்கவேண்டும்.
8 “நீ இஸ்ரயேலருடன் சொல்லவேண்டியதாவது, ‘ஒரு மனிதன் மகன் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய மகளுக்கு ஒப்புவிக்கவேண்டும்.
9 அவனுக்கு மகளும் இல்லாவிட்டால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய சகோதரர்களுக்குக் கொடுக்கவேண்டும்.
10 அவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால், அவனுடைய சொத்துரிமையை அவனுடைய தகப்பனின் சகோதரர்களிடம் கொடுக்கவேண்டும்.
11 அவனுடைய தகப்பனுக்கும் சகோதரன் இல்லாதிருந்தால், அவனுடைய வம்சத்தில் அவனுக்கு நெருங்கிய உறவினனுக்கு அதைக் கொடுக்கவேண்டும். அவன் அதை உரிமையாக்கிக் கொள்ளட்டும். இது யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இஸ்ரயேலருக்கு ஒரு சட்டபூர்வமான நடைமுறையாக இருக்கவேண்டும்’ ” என்றார்.
12 பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “நீ அபாரீம் மலைத்தொடரிலுள்ள இம்மலையின் மேல் ஏறிப்போய், நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்திருக்கும் நாட்டைப் பார்.
13 நீ அதைப் பார்த்தபின், உன் சகோதரன் ஆரோனைப்போல், நீயும் உன் முன்னோர்களுடன் சேர்க்கப்படுவாய்.
14 ஏனென்றால், சீன் பாலைவனத்தின் தண்ணீரின் அருகே இந்த மக்கள் கலகம் பண்ணியபொழுது, அவர்களுக்குமுன் என்னைப் பரிசுத்தர் என்று கனம்பண்ணும்படி உங்களுக்குக் நான் கொடுத்த கட்டளைக்கு நீங்கள் இருவருமே கீழ்ப்படியவில்லை” என்றார். சீன் பாலைவனத்திலுள்ள காதேஸ் என்ற இடத்தில் உண்டான மேரிபாவின் தண்ணீரைப் பற்றியே இது சொல்லப்பட்டது.
15 மோசே யெகோவாவிடம் சொன்னதாவது,
16 “முழு மனுக்குலத்தின் ஆவிகளுக்கும் இறைவனாகிய யெகோவா இந்த மக்கள் சமுதாயத்தின் மேலாக ஒரு மனிதனை நியமிப்பாராக!
17 யெகோவாவின் மக்கள் மேய்ப்பனில்லாத செம்மறியாடுகளைப்போல் இராதபடி அவர்களை வெளியே வழிநடத்திச் செல்லவும், உள்ளே கொண்டுவரவும் அவனை நியமிப்பாராக” என்றான்.
18 எனவே யெகோவா மோசேயிடம், “நூனின் மகனும், ஆவியானவரைப் பெற்றிருக்கிறவனுமாகிய யோசுவாவைத் தெரிந்தெடுத்து, அவன்மேல் உன் கையை வை.
19 ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாகவும், சபையார் எல்லோருக்கும் முன்பாகவும், அவனை நிறுத்தி, அவர்கள் முன்னிலையில் அவனுக்குத் தலைமைப்பொறுப்பைக் கொடு.
20 இஸ்ரயேல் சமுதாயம் முழுவதும் அவனுக்குக் கீழ்ப்படியும்படியாக உன் அதிகாரத்தில் ஒரளவை அவனுக்குக் கொடு.
21 அவன் ஆசாரியன் எலெயாசாருக்கு முன்பாக நிற்கவேண்டும். யோசுவா செய்யவேண்டிய தீர்மானங்களை எலெயாசார், யெகோவாவிடம் ஊரீம் மூலமாக விசாரித்து அறிவான். யோசுவாவின் கட்டளைப்படியே, அவனுடன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தாரும் வெளியே போவார்கள். அவனுடைய கட்டளைப்படியே அவர்கள் உள்ளே வருவார்கள்” என்றார்.
22 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். அவன் ஆசாரியன் எலெயாசார் முன்பாகவும், முழுசபையார் முன்பாகவும் யோசுவாவைக் கூட்டிக்கொண்டுபோய் நிறுத்தினான்.
23 பின்பு மோசே யெகோவா தனக்கு அறிவுறுத்தியபடியே யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்து, தலைமைப்பொறுப்பை அவனிடத்தில் கொடுத்தான்.
×

Alert

×