English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 24 Verses

1 இஸ்ரயேலரை ஆசீர்வதிப்பதையே யெகோவா விரும்புகிறார் என பிலேயாம் அறிந்தான். எனவே அவன் முன்புபோல் மாந்திரீகத்தின் உதவியை நாடாமல், பாலைவனத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான்.
2 பிலேயாம் வெளியே பார்க்கையில், இஸ்ரயேலர் கோத்திரம் கோத்திரமாய் முகாமிட்டிருப்பதைக் கண்டான். அந்நேரத்தில் இறைவனின் ஆவியானவர் அவன்மேல் வந்தார்.
3 அவன் இறைவாக்குரைத்துச் சொன்னதாவது: “பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு, தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு,
4 இறைவனின் வார்த்தைகளைக் கேட்கிறவனின் இறைவாக்கு, அவன் எல்லாம் வல்லவரிடமிருந்து தரிசனம் காண்கிறவன், அவன் முகங்குப்புற கீழே விழுந்தவன், கண்கள் திறக்கப்பட்டவன்:
5 “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரயேலே, உன் குடியிருப்புகளும் எவ்வளவு அழகானவை!
6 “அவை பள்ளத்தாக்குகளைப்போல் பரந்திருக்கின்றன, ஆற்றின் அருகில் இருக்கும் தோட்டங்களைப்போல் இருக்கின்றன, யெகோவா நட்ட சந்தனமரங்களைப்போல் இருக்கின்றன. தண்ணீரருகே நிற்கிற கேதுருமரங்களைப்போல் இருக்கின்றன.
7 அவர்கள் வாளிகளிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்களுடைய வித்து நீர்த்திரளின்மேல் பரவும். “அவர்களுடைய அரசன் ஆகாபைப் பார்க்கிலும் பெரியவனாயிருப்பான்; அவர்கள் அரசு புகழ்ந்துயர்த்தப்படும்.
8 “இறைவன் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; அவர்களுக்கு ஒரு காட்டெருதின் பெலன் இருக்கிறது. அவர்கள் தங்களுக்கு விரோதமான நாடுகளை விழுங்கிப்போடுவார்கள். அவர்களுடைய எலும்புகளையும் முறித்துப்போடுவார்கள்; அவர்கள் தங்களுடைய அம்புகளினால் உருவக்குத்துவார்கள்.
9 அவர்கள் சிங்கத்தைப் போலவும் பெண் சிங்கத்தைப் போலவும் மடங்கிப் படுத்திருக்கிறார்கள்; அவற்றை எழுப்பத் துணிபவன் யார்? “உங்களை ஆசீர்வதிப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்களாக; உங்களை சபிப்பவர்கள் சபிக்கப்பட்டிருப்பார்களாக!”
10 அப்பொழுது பிலேயாமுக்கு விரோதமாக பாலாக்கின் கோபம் மூண்டது. அவன் தன் கைகளைத் தட்டி பிலேயாமிடம்: “நான் என் பகைவர்களைச் சபிக்கவே உன்னை அழைப்பித்தேன். ஆனால் நீயோ, இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதித்திருக்கிறாய்.
11 இப்பொழுது நீ உடனடியாக உன் வீட்டிற்குப் போ. நான் உனக்கு நிறைய வெகுமதி கொடுப்பேன் என சொல்லியிருந்தேன். ஆனால் அந்த வெகுமதிகளை நீ பெறாதபடி யெகோவா உன்னைத் தடுத்துள்ளார்” என்றான்.
12 அதற்குப் பிலேயாம் பாலாக்கிடம்: “நீ என்னிடம் அனுப்பிய தூதுவர்களிடம் நான் சொல்லவில்லையா?
13 ‘பாலாக், வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தன் அரண்மனையை நிறைத்து அதை எனக்குத் தந்தாலும் யெகோவாவினுடைய கட்டளையை மீறி என் சொந்த விருப்பத்தின்படி எந்த நன்மையையோ, தீமையையோ என்னால் செய்யமுடியாது. யெகோவா சொல்வதை மட்டுமே நான் செய்யவேண்டும்’ என்று சொல்லியிருந்தேனே!
14 இப்பொழுது நான் என் மக்களிடத்திற்குப் போகப்போகிறேன். நீ வா. இந்த மக்கள் வரப்போகும் நாட்களில் உன் மக்களுக்கு என்ன செய்வார்கள் என நான் உன்னை எச்சரிப்பேன்” என்றான்.
15 பின்பு அவன் தன் இறைவாக்கை உரைத்துச் சொன்னதாவது: “பேயோரின் மகன் பிலேயாமின் இறைவாக்கு, தெளிவாய்ப் பார்க்கும் கண்களை உடையவனின் இறைவாக்கு,
16 இறைவனின் வார்த்தைகளைக் கேட்பவனின் இறைவாக்கு, அவன் மகா உன்னதமானவரிடமிருந்து அறிவைப்பெற்றவன், எல்லாம் வல்லவரிடத்தில் இருந்து தரிசனம் காண்கிறவன், முகங்குப்புற விழும்போது, கண்கள் திறக்கப்பட்டவன்:
17 “நான் அவரைக் காண்கிறேன், ஆனால் இப்பொழுது அல்ல; நான் அவரைப் பார்க்கிறேன், ஆனால் சமீபமாய் அல்ல. யாக்கோபிலிருந்து ஒரு நட்சத்திரம் வரும், இஸ்ரயேலில் இருந்து ஒரு செங்கோல் எழும்பும். அவர் மோவாபியரின் நெற்றிகளை [*அல்லது மோவாபின் எல்லைகளை.] நொறுக்குவார், சேத்தின் சந்ததி எல்லோரையும் தண்டிப்பார்.
18 ஏதோம் வெற்றிகொள்ளப்படும்; அவரது பகைவனான சேயீரும் வெற்றிகொள்ளப்படுவான். ஆனால் இஸ்ரயேலோ வலிமையில் பெருகும்.
19 யாக்கோபிலிருந்து ஒரு ஆளுநர் வருவார். பட்டணத்தில் தப்புகிறவர்களை அவர் தண்டிப்பார்” என்றான்.
20 அதன்பின் பிலேயாம் அமலேக்கியரைக் கண்டு, இறைவாக்குரைத்து: “நாடுகளுக்குள்ளே அமலேக்கியர் முதலாவதாயிருந்தார்கள். ஆனால் கடைசியில் அவர்களுக்கு அழிவே இருக்கும்” என்றான்.
21 பின்பு அவன் கேனியரைக் கண்டு இறைவாக்குரைத்து: “உங்கள் குடியிருப்பு பாதுகாப்பாயிருக்கிறது, உங்களுடைய கூடு ஒரு கற்பாறையில் அமைந்திருக்கிறது.
22 ஆனாலும் கேனியரே! அசூர் உங்களைச் சிறைபிடிக்கும்போது நீங்கள் அழிக்கப்படுவீர்கள்” என்றான்.
23 பின்னும் பிலேயாம் இறைவாக்கைத் தொடர்ந்து சொன்னது: “ஐயோ! இறைவன் இதைச் செய்யும்போது யாரால் உயிர்த்தப்பி வாழமுடியும்?
24 கித்தீம் கரைகளிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரையும், ஏபேரையும் கீழ்ப்படுத்தும். அவர்களும் அழிந்துபோவார்கள்.”
25 அதன்பின் பிலேயாம் எழுந்து வீட்டிற்குத் திரும்பினான், பாலாக் தன் வழியே போனான்.
×

Alert

×