English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Numbers Chapters

Numbers 22 Verses

1 {#1பாலாக்கும் பிலேயாமும் } பின்பு இஸ்ரயேலர் மோவாபின் சமவெளியில் பயணம் செய்து, யோர்தான் நதிக்கு மறுகரையில் எரிகோவுக்கு எதிராக முகாமிட்டார்கள்.
2 இஸ்ரயேலர் எமோரியருக்குச் செய்த எல்லாவற்றையும் சிப்போரின் மகன் பாலாக் கண்டான்.
3 இஸ்ரயேலர் அநேகராயிருந்தபடியால் மோவாப் திகிலடைந்தான். அவன் இஸ்ரயேலர்களைக் கண்டு பயந்து, பீதி நிறைந்தவனாயிருந்தான்.
4 மோவாபியர் மீதியானின் சபைத்தலைவர்களிடம், “புல்வெளியிலே எருது புல் தின்பதுபோல, இந்தப் பெருங்கூட்டம் நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தின்றுவிடப்போகிறது” என்றார்கள். அந்நாட்களில் மோவாபியருக்கு அரசனாயிருந்த சிப்போரின் மகன் பாலாக்,
5 பேயோரின் மகன் பிலேயாமை அழைப்பிக்கத் தூதுவரை அனுப்பினான். பிலேயாம் தான் பிறந்த நாட்டில், ஐபிராத்து நதியருகேயிருந்த பெத்தூரில் இருந்தான். பாலாக் தூதுவர்களிடம், “எகிப்திலிருந்து ஒரு மக்கள் கூட்டம் வந்திருக்கிறது. அவர்கள் நாடெங்கும் நிரம்பி எனக்குப் பக்கத்தில் குடியேறியிருக்கிறார்கள்.
6 இப்பொழுது நீ வந்து இந்த மக்களின்மேல் ஒரு சாபத்தைப்போடு. ஏனென்றால் அவர்கள் என்னைவிட அதிக பலமுள்ளவர்களாயிருக்கிறார்கள். அப்படிச் சாபமிட்டால் ஒருவேளை அவர்களைத் தோற்கடித்து, இந்த நாட்டைவிட்டுத் துரத்திவிட என்னால் இயலும். ஏனெனில் நீ ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், நீ சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் நான் அறிந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள்” என்றான்.
7 மோவாபிய சபைத்தலைவர்களும், மீதியானிய தலைவர்களும் குறிகேட்பதற்கான கூலியை எடுத்துக்கொண்டு புறப்பட்டார்கள். அவர்கள் பிலேயாமிடம் வந்தபோது பாலாக் சொல்லியிருந்ததை அவனிடம் கூறினார்கள்.
8 பிலேயாம் அவர்களிடம், “இன்று இரவு நீங்கள் இங்கே தங்குங்கள்; யெகோவா எனக்குத்தரும் பதிலை நான் உங்களுக்குத் தருவேன்” என்றான். எனவே மோவாபின் தலைவர்கள் அவனுடன் தங்கினார்கள்.
9 அப்பொழுது இறைவன் பிலேயாமிடம் வந்து, “உன்னுடன் இருக்கும் இந்த மனிதர்கள் யார்?” என்று கேட்டார்.
10 அதற்கு பிலேயாம் இறைவனிடம், “சிப்போரின் மகனான மோவாபின் அரசன் பாலாக் இவர்கள்மூலம் ஒரு செய்தியை எனக்கு அனுப்பியிருக்கிறான்:
11 அவன், ‘எகிப்திலிருந்து வந்த இந்த மக்கள் கூட்டம் நாடெங்கிலும் பரவியிருக்கிறது. நீர் வந்து எனக்காக இவர்கள்மேல் ஒரு சாபத்தைப்போடும். அப்படிச் சாபமிட்டால் ஒருவேளை நான் அவர்களுடன் சண்டையிட்டு அவர்களைத் துரத்திவிட என்னால் முடியும்’ என்று சொல்லியிருக்கிறான்” என்றான்.
12 அப்பொழுது இறைவன் பிலேயாமிடம், “நீ அவர்களுடன் போகவேண்டாம்; அந்த மக்கள்மேல் சாபத்தைப்போடவும் வேண்டாம். ஏனெனில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
13 மறுநாள் காலையில் பிலேயாம் எழுந்து பாலாக்கின் தலைவர்களிடம், “நீங்கள் உங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போங்கள்; யெகோவா என்னை உங்களோடு வருவதற்கு அனுமதிக்கவில்லை” என்றான்.
14 எனவே மோவாபின் தலைவர்கள் பாலாக்கிடம் திரும்பிப்போய், “பிலேயாம் எங்களோடு வருவதற்கு மறுத்துவிட்டான்” என்றார்கள்.
15 திரும்பவும் பாலாக் முந்தினவர்களைவிட அதிக புகழ்ப்பெற்ற, அதிக எண்ணிக்கையான தலைவர்களை அனுப்பினான்.
16 அவர்கள் பிலேயாமிடம் வந்து, “சிப்போரின் மகனாகிய பாலாக் சொன்னதாவது: ‘நீர் என்னிடம் வருவதற்குத் தடையாயிருக்க எதையும் அனுமதிக்காதேயும்.
17 நான் உமக்கு அதிகமான வெகுமதிகளைத் தருவேன். நீர் சொல்வதையெல்லாம் செய்வேன். நீர் வந்து எனக்காக இந்த மக்களின்மேல் ஒரு சாபத்தைப்போடும்’ என்கிறார்” என்றார்கள்.
18 பிலேயாம் அவர்களுக்குப் மறுமொழியாக, “பாலாக் எனக்கு வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தன் அரண்மனையை நிறைத்து அதைத் தந்தாலும், என் இறைவனான யெகோவாவின் கட்டளையை மீறி, பெரிதோ சிறிதோ எதையுமே என்னால் செய்யமுடியாது.
19 உங்களுக்குமுன் வந்தவர்கள் செய்ததுபோல் இன்று இரவு இங்கே தங்கியிருங்கள். யெகோவா வேறு என்ன சொல்வார் என்று நான் அறிந்து பார்க்கிறேன்” என்றான்.
20 அந்த இரவிலே இறைவன் பிலேயாமிடம் வந்து, “இந்த மனிதர்கள் உன்னை அழைத்துப்போக வந்திருந்தால் அவர்களுடன் போ. ஆனால் நான் சொல்வதை மட்டுமே செய்” என்றார்.
21 {#1பிலேயாமின் கழுதை } பிலேயாம் காலையில் எழுந்து தன் கழுதைக்குச் சேணம் கட்டி மோவாபின் தலைவர்களுடன் போனான்.
22 அவன் போனதனால் இறைவன் மிகவும் கோபம்கொண்டார். யெகோவாவினுடைய தூதனானவர் அவனை எதிர்ப்பதற்காக வழியிலே நின்றார். பிலேயாம் தன் கழுதையில் போனான். அவனுடைய வேலைக்காரர் இருவரும் அவனுடன் போனார்கள்.
23 யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் நிற்பதைக் கழுதை கண்டது. அதனால் கழுதை வழியைவிட்டு விலகி, வயல்வெளியில் போனது. அப்பொழுது பிலேயாம் கழுதையை வீதியில் கொண்டுவருவதற்காக அதை அடித்தான்.
24 அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இரண்டு திராட்சைத் தோட்டங்களின் இடையில் உள்ள ஒரு ஒடுங்கிய பாதையில் நின்றார். அந்த பாதையின் இரண்டு பக்கங்களிலும் மதில்கள் இருந்தன.
25 கழுதை யெகோவாவினுடைய தூதனானவரைக் கண்டபோது, மதிலோடு ஒதுங்கி, பிலேயாமின் காலை நசுக்கியது. அதனால் மதிலோடு சேர்த்து அவன் கழுதையைத் திரும்பவும் அடித்தான்.
26 அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் இன்னும் முன்னோக்கிச் சென்று வலதுபுறமோ, இடதுபுறமோ திரும்ப முடியாத ஒரு ஒடுக்கமான இடத்தில் நின்றுகொண்டார்.
27 கழுதை யெகோவாவினுடைய தூதனானவரைக் கண்டபோது, பிலேயாமுக்குக் கீழே விழுந்து படுத்தது. அப்பொழுது அவன் மிகவும் கோபங்கொண்டு தன் கோலினால் அதை அடித்தான்.
28 அப்பொழுது யெகோவா கழுதையின் வாயைத் திறந்தார். கழுதை பிலேயாமைப் பார்த்து, “மூன்றுமுறை நீர் என்னை அடிப்பதற்கு நான் உமக்கு என்ன செய்தேன்” என்றது.
29 அதற்குப் பிலேயாம் கழுதையைப் பார்த்து, “நீ என்னை ஏளனம்செய்கிறாய்; என் கையில் ஒரு வாள் இருக்குமானால் இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோடுவேன்” என்றான்.
30 அதற்குக் கழுதை பிலேயாமிடம், “இன்றுவரை நீர் எப்பொழுதுமே சவாரி செய்துவந்த உமது சொந்தக் கழுதையல்லவா நான்? உமக்கு இப்படிச் செய்யும் வழக்கம் என்னிடம் இருந்ததுண்டோ?” என்று கேட்டது. அதற்கு அவன், “இல்லை” என்றான்.
31 அப்பொழுது யெகோவா பிலேயாமின் கண்களைத் திறந்தார். அங்கே யெகோவாவினுடைய தூதனானவர் கையில் உருவிய வாளுடன் வீதியில் நிற்பதை அவன் கண்டான். உடனே பிலேயாம் வணங்கி, முகங்குப்புற விழுந்தான்.
32 அப்பொழுது யெகோவாவினுடைய தூதனானவர் அவனிடம், “நீ ஏன் உன் கழுதையை இவ்வாறு மூன்றுமுறை அடித்தாய்? நான் உன்னை எதிர்க்கவே இங்கு வந்திருக்கிறேன். உன்னுடைய பாதை எனக்கு முன்பாகத் துணிகரமானதாய் இருக்கிறது.
33 கழுதை என்னைக் கண்டு இந்த மூன்றுதரமும் மறுபக்கமாகத் திரும்பியது. அது அப்படி திரும்பியிராவிட்டால் நிச்சயமாக எப்பொழுதோ நான் உன்னைக் கொன்றிருப்பேன். ஆனால் கழுதையையோ தப்பவிட்டிருப்பேன்” என்றார்.
34 அப்பொழுது பிலேயாம் யெகோவாவினுடைய தூதனானவரிடம், “நான் பாவம் செய்தேன். என்னை எதிர்ப்பதற்கு நீர் வீதியில் நின்றுகொண்டிருந்ததை நான் அறியவில்லை. இதினிமித்தம் இப்பொழுது நீர் கோபங்கொள்வீரானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன்” என்றான்.
35 யெகோவாவினுடைய தூதனானவர் பிலேயாமிடம், “நீ இந்த மனிதர்களுடன் போ. ஆனால் நான் உனக்குச் சொல்வதையே நீ பேசு” என்றார். எனவே பிலேயாம் பாலாக்கின் தலைவர்களுடன் போனான்.
36 பிலேயாம் வருகிறான் என்பதை பாலாக் கேள்விப்பட்டபோது பிலேயாமைச் சந்திப்பதற்குத் தன் பிரதேசத்தின் ஓரத்திலுள்ள அர்னோன் ஆற்று எல்லையிலுள்ள மோவாப் பட்டணத்திற்குப் போனான்.
37 அப்பொழுது பாலாக் பிலேயாமிடம், “நான் உனக்கு அவசர அழைப்பு அனுப்பவில்லையா? நீ ஏன் என்னிடம் வரவில்லை? உனக்குத் தகுந்த வெகுமதி கொடுக்க எனக்கு முடியாதா?” என்றான்.
38 பிலேயாம் பாலாக்கிடம், “இப்பொழுது நான் உன்னிடம் வந்துவிட்டேன். என்னால் எதையாவது சொல்லமுடியுமோ? இறைவன் என் வாயில் தரும் வார்த்தைகளை மட்டுமே நான் பேசவேண்டும்” என்றான்.
39 அப்பொழுது பிலேயாம் பாலாக்குடன் கீரியாத் ஊசோத்திற்குப் போனான்.
40 பாலாக் மாடுகளையும், செம்மறியாடுகளையும் பலியிட்டு அதிலிருந்து கொஞ்சத்தை பிலேயாமுக்கும், அவனோடிருந்த தலைவர்களுக்கும் கொடுத்தனுப்பினான்.
41 அடுத்தநாள் காலை பிலேயாமை பாமோத் பாகாலுக்குக் கூட்டிக்கொண்டு போனான். அங்கேயிருந்து இஸ்ரயேல் மக்களின் ஒரு பகுதியினரைப் பிலேயாம் கண்டான்.
×

Alert

×