அது உங்கள் ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாயிருக்கும். அவை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகவோ, பலிகளாகவோ, விசேஷ நேர்த்திக்கடனாகவோ அல்லது சுயவிருப்புக் காணிக்கையாகவோ அல்லது பண்டிகைக் காணிக்கையாகவோ இருக்கும்.
அப்பொழுது, மற்ற காணிக்கைகளைக் கொண்டுவருகிறவன் பத்தில் ஒரு பங்கு அளவு சிறந்த மாவுடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்து அதையும் யெகோவாவுக்குத் தானிய காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும்.
தகன காணிக்கையாக அல்லது பலியாகச் செலுத்தப்படும் ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியுடனும், நாலில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும்.
“ ‘ஒரு செம்மறியாட்டுக் கடாவுடன் பத்தில் இரண்டு பங்கு எப்பா அளவான சிறந்த மாவுடன், மூன்றில் ஒரு பங்கு ஹின் அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதையும் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும்.
அத்துடன் மூன்றில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். அதை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாகச் செலுத்துங்கள்.
அத்துடன் இரண்டில் ஒரு பங்கு ஹின் அளவு திராட்சை இரசத்தைப் பானகாணிக்கையாகவும் கொண்டுவர வேண்டும். அது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையாக இருக்கும்.
ஒவ்வொரு காளையும் அல்லது செம்மறியாட்டுக் கடாவும், ஒவ்வொரு செம்மறியாட்டுக் குட்டியும் அல்லது வெள்ளாட்டுக்குட்டியும் இவ்விதமாகவே ஆயத்தப்படுத்தப்பட வேண்டும்.
“ ‘சொந்ததேசத்தில் பிறந்த ஒவ்வொருவனும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவரும்போது, இவை எல்லாவற்றையும் இவ்விதமாகவே செய்யவேண்டும்.
தலைமுறைதோறும் ஒரு அந்நியனாவது அல்லது உங்கள் மத்தியில் வாழும் வேறு யாராவது, யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படுகிற காணிக்கையைக் கொண்டுவரும்போது, அவனும் நீங்கள் செய்வதுபோலவே சரியாகச் செய்யவேண்டும்.
மக்கள் சமுதாயத்தில் உங்களுக்கும், உங்கள் மத்தியில் வாழும் அந்நியருக்கும் ஒரே விதிமுறைகளையே நியமிக்கவேண்டும்; இது தலைமுறைதோறும் இருக்கவேண்டிய ஒரு நிரந்தர நியமமாகும். நீங்களும் அந்நியர்களும் யெகோவா முன்னிலையில் பாகுபாடின்றி ஒரேவிதமாகவே இருக்கவேண்டும்.
தவறி மக்கள் சமுதாயத்திற்குத் தெரியாமல் தற்செயலாகச் செய்யப்பட்டிருக்கலாம். அப்பொழுது மக்களின் முழு சமுதாயமும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாக ஒரு இளம்காளையைச் செலுத்தவேண்டும். அத்துடன் அதற்குரிய தானிய காணிக்கையையும், பானகாணிக்கையையும், பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.
ஆசாரியன் முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் மன்னிக்கப்படுவார்கள். ஏனெனில் அது தற்செயலாகச் செய்யப்பட்ட பாவமாகையாலும், அவர்கள் யெகோவாவுக்கு தங்களுடைய குற்றத்திற்காக நெருப்பினால் செலுத்தப்பட்ட ஒரு காணிக்கையையும் ஒரு பாவநிவாரண காணிக்கையையும் கொண்டுவந்திருந்தபடியாலும் அவர்கள் பாவம் அவர்களுக்கு மன்னிக்கப்படும்.
முழு இஸ்ரயேல் சமுதாயமும், அவர்களில் வாழும் அந்நியர்களும் மன்னிக்கப்படுவார்கள். ஏனெனில், எல்லா மக்களும் தற்செயலாக செய்யப்பட்ட குற்றத்திலேயே சம்பந்தப்பட்டார்கள்.
“ ‘ஆனால் ஊரில் பிறந்தவனோ அல்லது அந்நியனோ யாராயிருந்தாலும், ஒருவன் அறிந்து துணிகரமாகப் பாவம்செய்தால் அவன் யெகோவாவை நிந்திக்கிறான். ஆகையால் அம்மனிதன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
அவன் யெகோவாவின் வார்த்தையை அற்பமாய் எண்ணி, அவருடைய கட்டளைகளை மீறினபடியால், அம்மனிதன் நிச்சயமாக அகற்றப்படவேண்டும். அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும் என்றார்.’ ”
“நீ இஸ்ரயேலரிடம் பேசி, அவர்களுக்குச் சொல்லவேண்டியதாவது: ‘நீங்கள் தொங்கல்களைச் செய்து, அவை ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நீல நாடாவினால் கட்டி, உங்கள் உடைகளின் ஓரங்களில் தொங்கவிட வேண்டும். இதை தலைமுறைதோறும் நீங்கள் செய்யவேண்டும்.
நீங்கள் இந்தக் தொங்கல்களைப் பார்க்கும் போதெல்லாம் யெகோவாவின் கட்டளைகளை நினைவுபடுத்திக் கொள்வீர்கள். அதனால் நீங்கள் அவற்றிற்குக் கீழ்ப்படிவீர்கள். உங்களுடைய சொந்த இருதய ஆசைகளின்படியும், கண்களின் ஆசையின்படியும் போய் இறைவனை வழிபடாமல் உங்களை வேசித்தனத்திற்கு உள்ளாக்காதிருப்பீர்கள்.