English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Numbers Chapters

Numbers 11 Verses

1 இப்பொழுது மக்கள் தங்கள் கஷ்டங்களை யெகோவா கேட்கும்படி முறையிட்டார்கள். அவர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது. யெகோவாவின் கோபம் அவர்கள் மத்தியில் நெருப்பாய் எரிந்து, முகாமின் சுற்றுப்புறங்களை அழித்தது.
2 அவ்வேளையில் மக்கள் மோசேயை நோக்கிக் கதறினார்கள். மோசே அவர்களுக்காக யெகோவாவிடம் மன்றாடினான். அப்பொழுது நெருப்பு அணைந்தது.
3 அங்கே யெகோவாவின் நெருப்பு அவர்கள் மத்தியில் எரிந்தபடியால், அந்த இடம், தபேரா [*தபேரா என்றால் எரிதல் என்று அர்த்தம்.] என அழைக்கப்பட்டது.
4 இஸ்ரயேலருடன் இருந்த அந்நியர்கள் எகிப்தின் உணவுக்காக ஆசைகொண்டவர்களானார்கள். இஸ்ரயேலரும் அவர்களுடன் சேர்ந்து புலம்பத் தொடங்கினார்கள். அவர்கள், “சாப்பிட எங்களுக்கு இறைச்சி மட்டுமாவது கிடைக்காதா!
5 எகிப்தில் செலவின்றி நாம் சாப்பிட்ட மீனையும், அத்துடன் வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றையும் நினைத்துப் பார்க்கிறோம்.
6 இப்பொழுது நமக்குச் சாப்பிடவே மனமில்லாமல் போனோம். மன்னாவைத் தவிர வேறொன்றையும் காணோமே” என்றார்கள்.
7 மன்னா கொத்தமல்லி விதையைப் போன்றும், பார்வைக்கு வெளிர்மஞ்சள் நிறமாகவும் இருந்தது.
8 மக்கள் சுற்றித்திரிந்து அதைப்பொறுக்கி, அவற்றைத் திரிகையினால் திரித்தோ, உரலில் இடித்தோ மாவாக்கிப் பாத்திரத்திலிட்டு சமைப்பார்கள் அல்லது அடை அப்பங்களாகச் சுடுவார்கள். அதன் சுவை ஒலிவ எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவைப்போல் இருந்தது.
9 இரவில் முகாமின்மேல் பனிபெய்து அது படியும்போதெல்லாம் அதனுடன் மன்னாவும் கீழே விழும்.
10 ஒவ்வொரு குடும்பமும் தங்கள் முந்திய உணவில் விருப்பங்கொண்டு, தங்கள் கூடாரவாசலில் நின்று இவ்வாறு அழுவதை மோசே கேட்டான். யெகோவா மிகவும் கோபம்கொண்டார். மோசேயும் கலக்கம் அடைந்தான்.
11 எனவே மோசே யெகோவாவிடம், “உமது அடியேன்மேல் ஏன் இவ்வளவு கஷ்டத்தைச் சுமத்தினீர். இந்த மக்கள் எல்லோரினது பாரத்தையும் என்மேல் சுமத்துவதற்கு நான் உமக்கு விரோதமாக எதைச்செய்தேன்?
12 இந்த மக்களையெல்லாம் நானா கர்ப்பந்தரித்தேன்? இவர்களை நானா பெற்றெடுத்தேன்? ஒரு தாதி ஒரு குழந்தையைச் சுமப்பதுபோல், இவர்கள் முற்பிதாக்களுக்கு நீர் வாக்குக்கொடுத்த நாட்டிற்கு இவர்களை என் கைகளினால் சுமந்துகொண்டுச் செல்லும்படி ஏன் சொல்கிறீர்?
13 இந்த மக்கள் எல்லோருக்கும் இறைச்சிகொடுக்க நான் எங்கே போவேன்? ‘எங்களுக்குச் சாப்பிட இறைச்சியைக் கொடு’ என இவர்கள் என்னிடம் கேட்டு, அழுகிறார்களே.
14 இந்த மக்கள் எல்லோரையும் தனியே சுமக்க என்னால் முடியாது. இந்தச் சுமை எனக்கு அதிக பாரமாயிருக்கிறது.
15 இவ்விதமாகவே நீர் என்னை நடத்துவீர் என்றால் என்னை இப்பொழுது கொன்றுவிடும். உமது கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால் நானே என் சொந்த அழிவைக் காணாதபடி என்னைக் கொன்றுபோடும்” என்றான்.
16 அதற்கு யெகோவா மோசேயிடம்: “இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களாகவும், அதிகாரிகளாகவும் உனக்குத் தெரிந்திருக்கும் இஸ்ரயேலின் முதியவர்களில் எழுபதுபேரை என்னிடம் கூட்டிக்கொண்டு வா. அவர்கள் உன்னுடன் சபைக் கூடாரத்தில் நிற்கும்படி அங்கு அவர்களை வரச்சொல்.
17 நான் கீழே வந்து உன்னோடு பேசுவேன். பின்பு நான் உன்மேல் இருக்கிற ஆவியானவரை அவர்கள்மேலும் வைப்பேன். மக்களின் பாரத்தைச் சுமப்பதற்கு அவர்கள் உதவி செய்வார்கள். அப்பொழுது நீ அப்பாரத்தைத் தனிமையாய் சுமக்க வேண்டியிராது.
18 “எனவே நீ மக்களிடம்: ‘நீங்கள் நாளைய தினத்திற்கு ஆயத்தமாக உங்களை அர்ப்பணம் செய்யுங்கள், நாளைக்கே நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள். “நாங்கள் சாப்பிடுவதற்கு எங்களுக்கு இறைச்சி கிடைக்காதோ? எகிப்தில் நாங்கள் சந்தோஷமாய் இருந்தோமே என்று சொல்லி நீங்கள் அழுததை யெகோவா கேட்டார்!” இப்பொழுது யெகோவா உங்களுக்கு இறைச்சி தருவார். நீங்கள் அதைச் சாப்பிடுவீர்கள்.
19 நீங்கள் அதை ஒன்றிரண்டு நாட்களுக்கோ, ஐந்து பத்து இருபது நாட்களுக்கு மட்டுமோ சாப்பிடமாட்டீர்கள்.
20 ஒரு முழு மாதமும் சாப்பிடுவீர்கள். நீங்கள் அதை மூக்குமுட்ட தின்று, அதை அருவருக்கும்வரை சாப்பிடுவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்களோடிருக்கிற யெகோவாவைப் புறக்கணித்து, “நாங்கள் ஏன் எகிப்தைவிட்டு வந்தோம்?” என்று சொல்லி அவருக்கு முன்பாக அழுதிருக்கிறீர்கள் என்று சொல்’ ” என்றார்.
21 அதற்கு மோசே: “என்னுடன் ஆறு இலட்சம் மனிதர் இருக்கிறார்கள், ‘நீரோ ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு இறைச்சி தருவதாகச் சொல்கிறீர்!’
22 அவர்களுக்காக எங்களிடமுள்ள ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் வெட்டப்பட்டாலும் அவையும் போதாது? கடலிலுள்ள எல்லா மீன்களையும் பிடித்தாலும் அவையும் அவர்களுக்குப் போதாதே?” என்றான்.
23 அதற்கு யெகோவா மோசேயிடம், “யெகோவாவினுடைய கரம் குறுகியிருக்கிறதோ? நான் உனக்குச் சொன்னது உண்மையாய் நடக்குமோ, நடக்காதோ என இருந்து பார்” என்றார்.
24 யெகோவா சொன்னவற்றையெல்லாம் மோசே வெளியே போய் மக்களுக்குச் சொன்னான். அதன்பின் அவன் அவர்களில் எழுபது சபைத்தலைவர்களை ஒன்றுசேர்த்து சபைக் கூடாரத்தைச் சுற்றி நிறுத்தினான்.
25 அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி, மோசேயுடன் பேசினார். பின் அவனில் இருந்த ஆவியானவரை அந்த சபைத்தலைவர்கள் எழுபதுபேர் மேலும் வைத்தார். ஆவியானவர் அவர்கள்மேல் வந்தவுடன், அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் அவர்கள் திரும்ப இறைவாக்கு உரைக்கவில்லை.
26 எல்தாத், மேதாத் என்னும் இரண்டு மனிதர்கள் தங்கள் முகாமிலேயே தங்கி இருந்தார்கள். அவர்களும் அந்தச் சபைத்தலைவர்களுடன் குறிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் சபைக் கூடாரத்திற்குப் போகவில்லை. அவர்கள்மேலும் அந்த ஆவியானவர் இறங்கியபோது, அவர்கள் தங்கள் முகாம்களுக்குள்ளே இறைவாக்கு உரைத்தனர்.
27 ஒரு வாலிபன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் முகாமில் இறைவாக்கு உரைக்கிறார்கள்” என்று சொன்னான்.
28 அப்பொழுது நூனின் மகனும் மோசேயின் உதவியாளனுமான யோசுவா என்னும் வாலிபன் மோசேயிடம், “என் ஆண்டவனே அவர்கள் பேசுவதை நிறுத்தும்!” என்றான்.
29 ஆனால் மோசேயோ, அவனிடம், “நீ எனக்காகப் பொறாமைகொண்டு இதைச் சொல்கிறாய்? யெகோவாவின் மக்கள் எல்லாம் இறைவாக்குரைப்போராய் இருக்கவேண்டும் என்றும், யெகோவா அவர்கள்மேல் தமது ஆவியானவரை வைக்கவேண்டும் என்றுமே நான் விரும்புகிறேன்!” என்றான்.
30 பின்பு மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் முகாமுக்குத் திரும்பினார்கள்.
31 அப்பொழுது யெகோவாவிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டு, கடலில் இருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது. அவை முகாமைச் சுற்றிலும் நிலத்திலிருந்து மூன்றடி உயரத்திற்குப் போடப்பட்டன. முகாமிலிருந்து எப்பக்கம் போனாலும் ஒரு நாள் பயணதூரம்வரை அவை கிடந்தன.
32 அன்று பகல் முழுவதும், இரவு முழுவதும், அடுத்தநாள் முழுவதும் மக்கள் வெளியே போய், காடைகளைச் சேர்த்தார்கள். பத்து ஓமருக்குக் குறைவாக ஒருவனுமே காடைகளைச் சேர்க்கவில்லை. அவர்கள் அவற்றை முகாமைச் சுற்றிப் பரப்பிவைத்தார்கள்.
33 அவர்கள் அந்த இறைச்சியை மென்று கொண்டிருக்கும்போதே, அதை விழுங்குவதற்கு முன்னே அவர்கள்மேல் யெகோவாவின் கோபம் மூண்டது. யெகோவா அவர்களை மிகக் கொடிய கொள்ளைநோயினால் வாதித்தார்.
34 மற்ற உணவில் அடங்கா ஆசைகொண்டதனால் செத்த மக்களை அங்கே புதைத்தார்கள்; அதனால் அந்த இடம் கிப்ரோத் அத்தாவா [†அத்தாவா என்றால் பேராசையின் கல்லறைகள்.] எனப் பெயரிடப்பட்டது.
35 பின்பு மக்கள் கிப்ரோத் அத்தாவாவை விட்டுப் புறப்பட்டுபோய் ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.
×

Alert

×