எருசலேமுக்குப் பொறுப்பாக அரண்மனையின் தளபதி ஆளுநனான அனனியாவுடன் என் சகோதரன் ஆனானியை வைத்தேன். ஏனெனில் அனனியா அங்கிருந்த அநேகரைக் காட்டிலும் உத்தமமுள்ளவனும், இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனுமாயிருந்தான்.
நான் அவர்களிடம், “பகலில் வெயில் ஏறும்வரை எருசலேமின் நுழைவாசல் கதவுகள் திறக்கப்படக் கூடாது. வாசல் காவலர் கடமையில் இருக்கும்போதே அவர்களைக்கொண்டு கதவுகள் பூட்டப்பட்டு, தாழ்ப்பாள்களை போடுங்கள். அத்துடன் எருசலேமின் குடியிருப்பாளர்களிலிருந்தே காவலர் தெரிந்தெடுக்கப்பட வேண்டும். அவர்களில் சிலரை காவல் நிலையங்களிலும், மற்றும் சிலரை அவர்களின் வீட்டின் அருகேயும் காவலுக்கு ஏற்படுத்துங்கள்” என்றும் சொன்னேன்.
அப்பொழுது இறைவன் உயர்குடி மனிதரையும், அதிகாரிகளையும், சாதாரண மக்களையும் ஒன்றுகூட்டி, அவர்களை அவரவர் குடும்பங்களின்படி பதிவு செய்வதற்காக என் மனதை ஏவினார். முதலில் திரும்பி வந்தவர்களின் வம்ச அட்டவணை ஒன்று எனக்குக் கிடைத்தது. அதில் எழுதப்பட்டிருந்தது இதுவே:
பின்வருவோர் தெல்மெலா, தெல்அர்ஷா, கேரூப், ஆதோன், இம்மேர் ஆகிய நகரங்களிலிருந்து திரும்பி வந்தவர்கள். ஆனால் அவர்களுக்கோ தங்கள் குடும்பங்கள் இஸ்ரயேலின் வழிவந்தவை என நிரூபிக்க முடியவில்லை.
இவர்கள் தங்கள் குடும்ப அட்டவணையைத் தேடினார்கள்; ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் அவர்கள் ஆசாரியப் பணியிலிருந்து அசுத்தமானவர்கள் எனத் தள்ளி வைக்கப்பட்டார்கள்.
ஊரீம், தும்மீம் அணிந்த ஒரு ஆசாரியன் [*யாத். 28:30.] எழும்பும் வரைக்கும் அவர்கள் மகா பரிசுத்த உணவிலிருந்து எதையும் சாப்பிடக்கூடாது என ஆளுநன் உத்தரவிட்டான்.
சில குடும்பங்களின் தலைவர்கள் ஆலய வேலையின் கருவூலத்திற்கு 20,000 தங்கக் காசுகளையும் [§அதாவது, சுமார் 170 கிலோகிராம் தங்கம்] , 2,200 மினா வெள்ளியையும் [*அதாவது, சுமார் 1,200 கிலோகிராம் வெள்ளி] கொடுத்தார்கள்.
ஆசாரியர்கள், லேவியர்கள், பாடகர்கள், வாசல் காவலர்கள், ஆலய பணியாளர்கள் ஆகியோர் மக்களில் குறிப்பிட்ட சிலருடனும், மீதியான இஸ்ரயேலருடனும் சேர்ந்து, தங்கள் சொந்தப் பட்டணங்களில் குடியேறினார்கள். ஏழாம் மாதம் இஸ்ரயேலர் வந்து தங்கள் ஊர்களில் குடியேறியபோது,