தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன. அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன, அவை மின்னலைப்போல் பறக்கின்றன.
நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள். அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள். பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது. பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து, புறாக்களைப்போல் புலம்புகிறார்கள்.
நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. “நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை.
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்; அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக் குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள்.
அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான். ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே? அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே? சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே?
சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று. தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும், இரையினால் தன் குகையையும் நிரப்பியது.