English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Micah Chapters

Micah 7 Verses

1 என் அவலநிலைதான் என்ன? கோடைகால அறுப்புக்குப்பின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்ட பழங்களைச் சேகரிப்பவன் போலானேன்; சாப்பிடுவதற்கான ஒரு திராட்சைக் குலையும் இல்லை. நான் சாப்பிட ஆசைப்படும், முதலில் பழுத்த அத்திப்பழமும் இல்லை.
2 நாட்டிலிருந்த இறை பக்தியுள்ளோர் அனைவரும் அற்றுப்போனார்கள். நீதிமான் ஒருவனும் இல்லை. எல்லா மனிதருமே இரத்தம் சிந்தப் பதுங்கிக் காத்திருக்கின்றார்கள். ஒவ்வொருவனும் தன் சகோதரனை வலையினால் பிடிக்க முயற்சிக்கிறான்.
3 அவர்களின் இரு கைகளுமே தீமை செய்வதில் தேர்ச்சி பெற்றவை. ஆளுநர் அன்பளிப்புகளை வற்புறுத்திக் கேட்கிறான். நீதிபதிகள் இலஞ்சத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் தாம் விரும்புவதையே கட்டளையிடுகிறார்கள். இவ்வாறு அவர்கள் ஒன்றிணைந்து சதி செய்கிறார்கள்.
4 அவர்களில் சிறந்தவன் எனப்படுபவன் முட்செடி போன்றவன். நீதிமான் முள்வேலியைவிட மிகவும் கூர்மையானவன். இறைவன் உங்களைச் சந்திக்கும் நாள், உங்கள் இறைவாக்கினர் எச்சரித்த அந்த நாள் வந்துவிட்டது. இதுவே அவர்களின் குழப்பத்தின் காலம்.
5 அயலவனை நம்பாதே; சிநேகிதனையும் நம்பவேண்டாம். உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிற மனைவியோடும் உன் வார்த்தைகளைக்குறித்து கவனமாயிரு.
6 ஏனெனில், மகன் தகப்பனை அவமதிக்கிறான்; மகள் தன் தாய்க்கு எதிராக எழும்புகிறாள்; மருமகள் தன் மாமியாரை எதிர்க்கிறாள்; மனிதனுடைய பகைவர்கள் அவன் வீட்டார்தானே.
7 நானோ, எதிர்பார்ப்புடன் யெகோவாவுக்காகக் காத்திருக்கிறேன். என் இரட்சகராகிய இறைவனுக்காக காத்திருக்கிறேன். என் இறைவன் எனக்குச் செவிகொடுப்பார்.
8 எருசலேம் மக்கள் சொல்கிறதாவது: எங்கள் பகைவனே, எங்களை கேலிசெய்து மகிழாதே; நாங்கள் விழுந்தாலும் எழுந்திருப்போம். நாங்கள் இருளில் உட்கார்ந்தாலும் யெகோவா எங்களுக்கு ஒளியாயிருப்பார்.
9 நாங்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்தபடியால், அவரின் கோபத்தைச் சுமப்போம். அவர் எங்களுக்காக வாதாடி, எங்கள் நியாயத்தை நிலைநிறுத்துவார். அவர் எங்களை வெளியே வெளிச்சத்தின் முன் கொண்டுவருவார். நாங்கள் அவரது நீதியைக் காண்போம்.
10 அப்பொழுது எங்கள் பகைவன் இதைக்கண்டு வெட்கத்திற்குள்ளாவான். “உங்கள் யெகோவாவாகிய இறைவன் எங்கே?” என்று எங்களிடம் கேட்டவளின் வீழ்ச்சியை எங்கள் கண்கள் காணும். அப்பொழுது அவள் வீதிகளிலுள்ள சேற்றைப்போல் காலின்கீழ் மிதிக்கப்படுவாள்.
11 எருசலேம் மக்களே! உங்கள் மதில்களைக் கட்டியெழுப்பும் நாள் வருகிறது, உங்கள் எல்லையை விரிவுபடுத்தும் நாளும் வருகிறது.
12 அந்நாளில் அசீரியாவிலிருந்தும், எகிப்தின் பட்டணங்களிலிருந்தும் உங்கள் மக்கள் உங்களிடம் வருவார்கள். எகிப்து முதல், ஐபிராத்து நதிவரையுள்ள தேசங்களிலிருந்தும், ஒரு கடல் முதல் மறுகடல் வரையுள்ள நாடுகளிலிருந்தும், ஒரு மலை முதல், மறு மலைவரையுள்ள இடங்களிலிருந்தும் உங்கள் மக்கள் அனைவரும் உங்களிடம் கூடிவருவார்கள்.
13 ஆயினும் பூமியின் மற்ற பிரதேசங்கள் அங்கு வாழும் மக்களின் தீய செயல்களின் நிமித்தம் பாழாய்ப்போம்.
14 யெகோவாவே, ஒரு செழிப்பான மேய்ச்சல் நிலத்திலே வாழ்கிறவர்களான உமது மக்களை, உமது உரிமைச்சொத்தான மந்தையை, உமது கோலினால் மேய்த்துக்கொள்ளும். இவர்கள் முந்தைய நாட்களைப்போல் பாசானிலும், கீலேயாத்திலும் மேயட்டும்.
15 “நீங்கள் எகிப்திலிருந்து வெளியேறிய, அந்நாட்களில் இருந்ததைப்போல, நான் உங்களுக்கு என் அதிசயங்களைக் காண்பிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
16 பிறநாடுகள் யாவும் அதைக்கண்டு வெட்கமடைவார்கள். அவர்கள் தங்கள் ஆற்றல்களை இழந்து தங்கள் வாயைக் கைகளால் பொத்திக்கொள்வார்கள். அவர்களுடைய காதுகள் செவிடாய்ப்போகும்.
17 அவர்கள் பாம்மைப்போலவும், நிலத்தின் ஊரும் உயிரினங்களைப்போலவும் புழுதியை நக்குவார்கள். அவர்கள் தங்கள் குகைகளை விட்டு நடுக்கத்துடன் வெளியேறுவார்கள். எங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் அவர்கள் பயத்துடன் திரும்பி வருவார்கள். அப்போது அவர்கள் உமக்குப் பயந்திருப்பார்கள்.
18 உமக்கு நிகரான இறைவன் யார்? உமது சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, அவர்களுடைய மீறுதல்களையும் மன்னிக்கிற உமக்கு நிகரானவர் யார்? நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பவரல்ல. ஆனால் இரக்கம் காட்டுவதில் மகிழ்ச்சியாயிருக்கிறீர்.
19 நீர் மறுபடியும் எங்கள்மேல் கருணை காட்டுவீர். நீர் எங்கள் பாவங்களை காலின்கீழ் மிதித்து, எங்கள் எல்லா அக்கிரமங்களையும் கடலின் ஆழங்களிலே எறிந்து விடுவீர்.
20 முன்னொரு காலத்தில் எங்கள் முன்னோர்களுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தபடியே, நீர் யாக்கோபுக்கும் உண்மையுள்ளவராயிருப்பீர், ஆபிரகாமுக்கு அன்பைக் காட்டுவீர்.
×

Alert

×