Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Matthew Chapters

Matthew 8 Verses

1 இயேசு மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தார், அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
2 அப்பொழுது ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்து, அவர்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும் என்றான்.”
3 இயேசு தன் கையை நீட்டி அவனைத் தொட்டு. “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்று சொன்னார். உடனே அவன் தனது குஷ்டவியாதியிலிருந்து சுத்தமானான்.
4 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” [*லேவி. 14:1-32] என்றார்.
5 இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தலைவன் [†நூறு போர்ச்சேவகர்களுக்கு தலைவன்] உதவிகேட்டு அவரிடம் வந்து,
6 “ஆண்டவரே, வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான்.
7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.”
8 நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக, “ஐயா, நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் குணமடைவான்.
9 ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான்.
10 இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை.
11 நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன்: அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள்.
12 ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார்.
13 அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு ஆகட்டும்” என்றார். அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.
14 இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார்.
15 இயேசு அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
16 மாலை நேரமானபோது, பிசாசு பிடித்திருந்த பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே அந்த தீய ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.
17 “அவர்தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களைச் சுமந்தார்” [‡ஏசா. 53:4 எபிரெய வேதத்தின் கிரேக்க கையெழுத்துப் பிரதியைப் பார்க்கவும்.] என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டது இப்படியாக நிறைவேறியது.
18 தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி, கட்டளையிட்டார்.
19 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
20 இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
21 இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.
22 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்றார்.
23 அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
24 அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதியது. இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார்.
25 சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்று அவரிடம் சொன்னார்கள்.
26 அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று.
27 அதைக் கண்டவர்கள் வியப்படைந்து, “இவர் எப்படிப்பட்டவரோ? காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று பேசிக்கொண்டார்கள்.
28 இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய [§கதரேனருடைய என்பது சில கையெழுத்துப் பிரதிகளில் கெர்கெசெனர் என்றும் பிற கையெழுத்துப் பிரதிகளில் கெராசேனர் என்றுமுள்ளது.] நாட்டிற்கு வந்தபோது, பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள்.
29 அவர்கள், “இறைவனின் மகனே, உமக்கு எங்களிடம் என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள்.
30 அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது.
31 பிசாசுகள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதானால், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும்” என்று கெஞ்சிக்கேட்டன.
32 இயேசு அவைகளிடம், “போங்கள்!” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அந்த முழுப்பன்றிக்கூட்டமும், மேட்டிலிருந்து விரைந்தோடி, கடலுக்குள் விழுந்து செத்தன.
33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் ஓடிப்போய், பிசாசு பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
34 அப்பொழுது பட்டணத்திலுள்ள யாவரும் இயேசுவை சந்திக்க வெளியே வந்து. அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பகுதியைவிட்டுப் போய்விடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
×

Alert

×