ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால்,
அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள்.
அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள்.
ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள்.
மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் முடவரையும், பார்வையற்றோரையும், அங்கவீனரையும், ஊமையரையும், அவர்களுடன் மற்ற அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; இயேசு அவர்களை குணமாக்கினார்.
ஊமையர் பேசுவதையும், அங்கவீனர் சுகமடைவதையும், முடவர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள்.
இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களைப் பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார்.
பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.