உங்கள் சூடுமிதிக்கும் காலம், திராட்சைப்பழம் பறிக்குங்காலம்வரை நீடிக்கும். திராட்சைப்பழம் பறிக்குங்காலம், நடுகைக்காலம்வரை நீடிக்கும். ஆகையால் நீங்கள் விரும்பிய எல்லா உணவையும் சாப்பிட்டு உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.
“ ‘நாட்டில் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் பயமில்லாமல் படுத்திருப்பீர்கள். உங்களை ஒருவரும் பயமுறுத்தமாட்டார்கள். நாட்டிலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்திவிடுவேன். உங்கள் நாட்டை வாள் கடந்துவராது.
இனிமேலும் நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா. உங்கள் நுகத்தின் தடிகளை முறித்து உங்களைத் தலைநிமிர்ந்து நடக்கும்படிச் செய்தேன்.
அப்பொழுது நான் உங்களுக்குச் செய்வதாவது: உங்கள்மேல் திடீர் பயங்கரத்தையும் அழிக்கும் வியாதிகளையும் கொண்டுவருவேன். உங்கள் கண் பார்வையை அற்றுப்போகச்செய்து, உங்கள் உயிரைக் குடிக்கும் காய்ச்சலையும் கொண்டுவருவேன். நீங்கள் தானியத்தை வீணாகவே விதைப்பீர்கள். ஏனெனில், உங்கள் பகைவர்களே அதைச் சாப்பிடுவார்கள்.
நான் என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். அப்பொழுது நீங்கள் உங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்படுவீர்கள். உங்களை வெறுக்கிறவர்கள் உங்களை ஆளுவார்கள். ஒருவரும் உங்களைத் துரத்தாமலே நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.
காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன். அவை உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து கொள்ளையிட்டு, உங்கள் மந்தைகளை அழிக்கும். அவை உங்கள் எண்ணிக்கையை வெகுவாய்க் குறைக்கும். அப்பொழுது உங்கள் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கும்.
என்னுடைய உடன்படிக்கையை நீங்கள் மீறினதினால் உங்களைப் பழிவாங்குவதற்காக வாளை உங்கள்மேல் வரப்பண்ணுவேன். நீங்கள் உங்கள் பட்டணத்திற்குள் பின்வாங்கும்போது உங்களுக்குள் கொள்ளைநோயை அனுப்புவேன். நீங்கள் உங்கள் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள்.
உங்களுக்கு அன்றாடம் கிடைக்கும் உணவை அகற்றிப்போடுவேன். அப்பொழுது பத்துப் பெண்கள் உங்களுக்கான அப்பத்தை ஒரே அடுப்பிலேயே சுடக்கூடியதாய் இருக்கும். அவர்கள் அப்பத்தை நிறைப்படி பங்கிட்டுக் கொஞ்சமாகக் கொடுப்பார்கள். நீங்கள் சாப்பிடுவீர்கள். ஆனால் திருப்தியடையமாட்டீர்கள்.
உங்கள் பட்டணங்களை இடிபாடுகளாக்குவேன். உங்கள் பரிசுத்த இடங்களைப் பாழாக்கிப்போடுவேன். உங்கள் காணிக்கைகளின் மகிழ்ச்சியூட்டும் நறுமணத்தில் நான் மகிழ்ச்சியாக இருக்கமாட்டேன்.
நாடுகளுக்குள் உங்களை சிதறப்பண்ணி, என் வாளை உருவி உங்களைப் பின்தொடர்ந்து துரத்துவேன். உங்கள் நாடு பாழாக்கப்படும். பட்டணங்களும் இடிபாடுகளாய்க் கிடக்கும்.
நீங்கள் உங்கள் பகைவருடைய நாட்டில் இருக்கையில், நாடு பாழாய்க்கிடக்கும். காலமெல்லாம் அது தன் ஓய்வு வருடங்களை அனுபவிக்கும். அப்பொழுது நாடு ஓய்ந்திருந்து, தனது ஓய்வுநாட்களைக் கொண்டாடும்.
“ ‘உங்களில் மீதமிருப்போரைக் குறித்தோவெனில், அவர்களுடைய பகைவர்களின் நாடுகளில், அவர்களுடைய இருதயங்களைப் பயம் நிறைந்ததாக்குவேன். அப்பொழுது காற்றினால் அடிக்கப்படும் ஒரு இலையின் சத்தங்கூட அவர்களைப் பயந்தோடப்பண்ணும். அவர்கள் வாளுக்குத் தப்பி ஓடுகிறவர்கள்போல் ஓடுவார்கள். அவர்களை ஒருவரும் துரத்தாதபோதும் அவர்கள் விழுவார்கள்.
“ ‘எனவே அவர்கள் அவர்களுடைய பாவத்தையும், தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அவர்களின் எனக்கெதிரான துரோகங்களையும், என்னுடனிருந்த பகைமையையும் அறிக்கையிடுவார்கள்,
கடைசியாக நான் என் கோபத்தினால் அவர்களை அவர்களுடைய பகைவர்களின் நாடுகளுக்குக் கொண்டுவரும்போது, அவர்களின் விருத்தசேதனம் செய்யப்படாத இருதயங்கள் தாழ்த்தப்பட்டு, அவர்களின் பாவங்களுக்கு அவர்கள் தண்டனையை அனுபவிப்பார்கள்.
அப்பொழுது நான் யாக்கோபுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஈசாக்குடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், ஆபிரகாமுடன் செய்துகொண்ட என் உடன்படிக்கையையும், நினைவுகூருவேன். நாட்டையும் நான் நினைவுகூருவேன்.
நாடு அவர்களால் கைவிடப்பட்டு, அவர்கள் யாரும் இல்லாமல் பாழாய்க் கிடக்கும்போது அது தன் ஓய்வை கொண்டாடும். ஆனால் அவர்கள் என்னுடைய சட்டங்களைப் புறக்கணித்து, என் கட்டளைகளை வெறுத்தால், தங்கள் பாவத்திற்கான தண்டனையை அனுபவிப்பார்கள்.
இப்படியெல்லாமிருந்தும், தங்கள் பகைவர்களின் நாட்டில் அவர்கள் வாழும்போது, அவர்களுடனான என் உடன்படிக்கையை அவர்கள் உடைத்தாலும், நான் அவர்களை முற்றிலும் புறக்கணிக்கவோ, அவர்களை முற்றிலும் அழிக்கும்படி வெறுக்கவோமாட்டேன். ஏனெனில், அவர்களின் இறைவனாகிய யெகோவா நானே.
நான் அவர்களுக்கு இறைவனாயிருக்கும்படி, நாடுகளுக்கு முன்பாக எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த அவர்களின் முன்னோர்களோடு, நான் பண்ணின உடன்படிக்கையை, அவர்களுக்காக நினைவுகூருவேன். நானே யெகோவா’ என்றார்.”