“நீ அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: தலைமுறைதோறும் உன் சந்ததிகளில் எவனும், சம்பிரதாயப்படி அசுத்தமாய் இருந்தும், இஸ்ரயேலர் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கும் பரிசுத்த காணிக்கைக்குச் சமீபமாய் வருவானாகில், அவன் என் சமுகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். நானே யெகோவா.
அவன் தன்னை அசுத்தப்படுத்தக்கூடிய ஊரும்பிராணி ஒன்றைத் தொடுவதினாலும், எவ்வித அசுத்தத்தினாலும் தன்னை அசுத்தப்படுத்துகிற எவனையாவது தொடுவதினாலும் அசுத்தமாயிருப்பான்.
ஆனால், ஒரு ஆசாரியனின் மகள் விதவையாக இருந்தாலோ அல்லது விவாகரத்து செய்யப்பட்டவளாய் இருந்தாலோ, அவள் பிள்ளைகள் அற்றவளாய், தான் இளமையில் இருந்ததுபோலவே தன் தகப்பன் வீட்டில் வசிக்கும்படி திரும்பிவந்திருந்தால், அவள் தன் தகப்பனின் உணவைச் சாப்பிடலாம். அங்கீகரிக்கப்படாத யாராவது அதில் எதையும் சாப்பிடக்கூடாது.
“ ‘யாரேனும் ஒருவன் தவறுதலாக பரிசுத்தமான காணிக்கையைச் சாப்பிட்டால், அக்காணிக்கைக்காக அவன் ஆசாரியனுக்குப் பதிலீடு செய்வதுடன், அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பங்கையும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.
“நீ ஆரோனோடும், அவன் மகன்களோடும், இஸ்ரயேலர் அனைவரோடும் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘இஸ்ரயேலனோ, இஸ்ரயேலில் வசிக்கும் பிறநாட்டினனோ, யாராவது தன் நேர்த்திக்கடனைச் செலுத்தும்படியாகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கையாகவோ யெகோவாவுக்கு ஒரு தகனகாணிக்கையைக் கொடையாகக் கொண்டுவரலாம். அவ்வாறு கொண்டுவருவதானால்,
அது உங்கள் சார்பாக அங்கீகரிக்கப்படும்படி மாட்டு மந்தையிலிருந்தோ, ஆட்டு மந்தையிலிருந்தோ அல்லது வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ குறைபாடற்ற ஒரு ஆண் மிருகமாக இருக்கவேண்டும்.
ஒருவன் ஒரு விசேஷ நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது சுயவிருப்பக் காணிக்கைக்காகவோ தன் மாட்டு மந்தையில் இருந்தாவது, ஆட்டு மந்தையில் இருந்தாவது யெகோவாவுக்கு ஒரு சமாதான காணிக்கையைக் கொண்டுவந்தால், அது ஏற்கத்தக்கதாக இருக்கும்படி, குறைபாடற்றதாகவும், பழுதற்றதாகவும் இருக்கவேண்டும்.
ஆனாலும் வளர்ச்சி குன்றிய அல்லது உருவம் சிதைவுற்ற ஒரு மாட்டையோ, செம்மறியாட்டையோ நீங்கள் சுயவிருப்பக் காணிக்கையாகச் செலுத்தலாம்; ஆனால் அவை நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விதைகள் காயப்பட்ட, நசுக்கப்பட்ட, கிழிக்கப்பட்ட அல்லது வெட்டப்பட்ட எந்தவொரு மிருகத்தையும், நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகச் செலுத்தக்கூடாது. உங்கள் சொந்த நாட்டில் இதைச் செய்யக்கூடாது.
இப்படிப்பட்ட மிருகங்களை நீங்கள் அந்நிய நாட்டினரின் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உங்கள் இறைவனின் உணவாகச் செலுத்தவும் வேண்டாம். உங்கள் சார்பில் அவை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. [*பலிசெலுத்த தகுதியற்றவைகள் ஏனெனில் அவைகளின் எஜமான்கள் அவைகளை விரையடித்துள்ளனர்.] ஏனெனில், அவை உருவம் சிதைந்தவைகளாயும், குறைபாடுள்ளவைகளாயும் இருக்கின்றன.’ ”
“கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டு குட்டியோ அல்லது வெள்ளாட்டு குட்டியோ பிறக்கும்போது அது தன் தாயுடன் ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கவேண்டும். எட்டாம் நாளிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக அது ஏற்றுக்கொள்ளப்படும்.