“ ‘நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தகப்பனுக்கும், தாய்க்கும் மரியாதை கொடுக்கவேண்டும். என்னுடைய ஓய்வுநாளைக் கைக்கொள்ளவேண்டும். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
அதைச் சாப்பிடுகிற எவனும், யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைத் தூய்மைக்கேடாக்கினபடியால், அக்குற்றத்திற்கு அவனே பொறுப்பாளி. அவன் தன் மக்களிலிருந்து அகற்றப்படவேண்டும்.
அப்படியே உங்கள் திராட்சைத்தோட்டத்திலும், இரண்டாம்முறை பறிக்காமலும், விழுந்ததைப் பொறுக்காமலும் விடுங்கள். அவைகளை ஏழைகளுக்கும் பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
“ ‘நீங்கள் உங்கள் மக்களுக்குள் அவதூறு பேசுகிறவர்களாகத் திரியாதீர்கள். “ ‘உங்கள் அயலானின் உயிருக்கு [*அயலானின் உயிருக்கு அல்லது அயலானின் இரத்தப்பழிக்கு காரணமாகாதே] ஆபத்து உண்டாக்கும் எதையும் செய்யவேண்டாம். நானே யெகோவா.
“ ‘பழிவாங்கத் தேடவேண்டாம். உங்கள் மக்களில் யாருக்கெதிராகவும் வன்மங்கொள்ள வேண்டாம். நீ உன்னில் அன்பாயிருப்பதுபோல் உன் அயலானிடத்திலும் அன்பாய் இரு. நானே யெகோவா.
“ ‘நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொள்ளவேண்டும். “ ‘வெவ்வேறு வகையான மிருகங்களை ஒன்றோடு ஒன்று புணரவிடவேண்டாம். “ ‘இரண்டு வகையான விதைகளை ஒன்றாய் கலந்து வயலில் விதைக்கவும் வேண்டாம். “ ‘இரண்டு வகையான நூல்களைக்கொண்டு நெய்யப்பட்ட உடைகளை உடுத்தவேண்டாம்.
“ ‘மீட்டுக்கொள்ளப்படாமலும், விடுதலை அடையாமலும் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஒரு அடிமைப் பெண்ணுடன் வேறு யாராவது உறவுகொண்டால், அதற்குத் தகுந்த தண்டனை கொடுக்கப்படவேண்டும். ஆனாலும் அவர்கள் கொல்லப்படக்கூடாது. ஏனெனில், அவள் விடுதலை பெற்றிருக்கவில்லை.
ஆசாரியன் அக்குற்றநிவாரண காணிக்கைக்கான செம்மறியாட்டுக் கடாவைக் கொண்டு அவன் செய்த பாவத்திற்காக யெகோவா முன்னிலையில், பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
“ ‘நீங்கள் உங்கள் நாட்டிற்குள்போய் கனிகொடுக்கும் மரங்களை நாட்டும்போது, அதன் பழங்களை உண்பதற்கு, முதல் மூன்று வருடங்களும் தடை செய்யப்பட்டவைகளாக [†தடை செய்யப்பட்டவைகளாக அல்லது சடங்குபடி அசுத்தமானது எபிரெய மொழியில் விருத்தசேதனம் செய்யப்படாதது] எண்ணிக்கொள்ளுங்கள்; அவற்றைச் சாப்பிடக்கூடாது.
“ ‘உங்கள் தலைமுடியின் ஓரங்களை வெட்டாமலும், உங்கள் தாடியின் ஓரங்களைக் கத்தரியாமலும் இருங்கள். [‡இந்த நடைமுறைகள் இஸ்ரயேலரைச் சுற்றியுள்ள பிற மக்களின் சமயங்களில் பொதுவானவை.]
“ ‘அஞ்சனம் பார்க்கிறவர்களின் பக்கம் போகவேண்டாம். குறிசொல்லுகிறவர்களை தேடவும் வேண்டாம். ஏனெனில், இவற்றால் நீங்கள் அசுத்தமடைவீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
உங்களோடு வாழும் எந்த பிறநாட்டினனும் உங்களுடைய நாட்டினனைப்போல நடத்தப்படவேண்டும். உங்களைப்போல் அவனிலும் அன்பு செலுத்துங்கள். ஏனெனில் முன்பு ஒருகாலத்தில் நீங்களும் எகிப்து நாட்டில் பிறநாட்டினராய் இருந்தீர்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.
சரியான தராசையும், சரியான படிக்கற்களையும், சரியான எப்பா அளவையும் சரியான ஹின் அளவையும் பயன்படுத்த வேண்டும். உங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டுவந்த நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.