English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Leviticus Chapters

Leviticus 16 Verses

1 ஆரோனின் இரண்டு மகன்களும் யெகோவாவின் சந்நிதியை நெருங்கியபோது [*யெகோவாவுக்கு தூய்மையற்ற நெருப்பைக் கொடுத்தபோது கொல்லப்பட்டார்கள்] இறந்துபோன பின்பு, யெகோவா மோசேயிடம் பேசினார்.
2 யெகோவா மோசேயிடம் சொன்னதாவது, “உன் சகோதரன் ஆரோன் திரைக்குப் பின்னால் உள்ள மகா பரிசுத்த இடத்தில் இருக்கும் பெட்டியின்மேல் மூடியிருக்கும் கிருபாசனத்திற்கு முன்னால், தான் நினைத்தபோதெல்லாம் வரக்கூடாது என்று அவனிடம் சொல்; மீறினால் அவன் சாவான். ஏனெனில், கிருபாசனத்தின்மேல் நான் ஒரு மேகத்தில் தோன்றுவேன்.
3 “ஆரோன் பரிசுத்த இடத்திற்குள் போகவேண்டிய விதம் இதுவே: பாவநிவாரண காணிக்கையாக ஒரு இளங்காளையோடும், தகன காணிக்கையாக ஒரு செம்மறியாட்டுக்கடாவோடும் அவன் வரவேண்டும்.
4 அப்பொழுது அவன் தன் உடலோடு ஒட்டிக்கொள்ளும் மென்பட்டு உடையையும், பரிசுத்த மென்பட்டு உள் அங்கியையும் உடுத்திக்கொள்ளவேண்டும். மென்பட்டுக் கச்சையை இடையில் கட்டி, மென்பட்டு தலைப்பாகையையும் அணிந்துகொள்ள வேண்டும். இவையே பரிசுத்த உடைகள். எனவே அவன் இவற்றை உடுத்திக்கொள்ளும் முன், தன்னைச் சுத்தப்படுத்துவதற்காக தண்ணீரில் முழுகவேண்டும்.
5 அதன்பின் அவன் இஸ்ரயேல் சமுதாயத்தினரிடமிருந்து பாவநிவாரண காணிக்கைக்காக இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும், தகன காணிக்கைக்காக ஒரு செம்மறியாட்டுக் கடாவையும் எடுத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும்.
6 “ஆரோன் தனக்காகவும் தன் குடும்பத்தாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைச் செலுத்தவேண்டும்.
7 பின்பு அந்த இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களையும் சபைக்கூடார வாசலில், யெகோவா முன்னிலையில் நிறுத்தவேண்டும்.
8 ஆரோன் இரண்டு வெள்ளாட்டுக் கடாக்களின் மேலும் சீட்டுப்போட்டு ஒன்றை யெகோவாவுக்காகவும், இன்னொன்றைப் பாவச்சுமை ஆடாகவும் வேறுபிரிக்க வேண்டும்.
9 யெகோவாவுக்காக சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை ஆரோன் கொண்டுவந்து பாவநிவாரண காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
10 சீட்டின் மூலம் பாவச்சுமை ஆடாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளாட்டை, யெகோவா முன்னிலையில் உயிரோடே நிறுத்தவேண்டும். அது பாவநிவிர்த்தி செய்வதற்காக பாலைவனத்தில் தப்பிப்போக விடப்படவேண்டிய ஆடு.
11 “பின்பு ஆரோன் தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய சொந்த பாவநிவாரண காணிக்கையாக அக்காளையைக் கொண்டுவர வேண்டும். அவன் தன் சொந்தப் பாவநிவாரண காணிக்கையாக அக்காளையை வெட்டிக் கொல்லவேண்டும்.
12 அவன் யெகோவா முன்னிலையில் இருக்கும் பலிபீடத்திலிருந்து நெருப்புத்தணல் நிறைந்த ஒரு தூபகிண்ணத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு கைநிறைய நன்றாக அரைக்கப்பட்ட நறுமணத்தூளையும் எடுத்துக்கொண்டு திரைக்குப் பின்னால் வரவேண்டும்.
13 அவன் அந்த நறுமணத்தூளை யெகோவாவுக்கு முன்பாக நெருப்பில் போடவேண்டும். அந்த நறுமணப்புகை சாட்சிப்பெட்டியின் மேலிருக்கும் கிருபாசனத்தை மூடும். அப்பொழுது அவன் சாகமாட்டான்.
14 அவன் தனது விரலினால் அக்காளையின் இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, கிருபாசனத்தின் முன்பக்கத்தில் தெளிக்கவேண்டும். அதன்பின் அதில் சிறிதளவு எடுத்து கிருபாசனத்தின் முன்னால் ஏழுமுறை தன் விரலினால் தெளிக்கவேண்டும்.
15 “பின்பு மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையாக வெள்ளாட்டுக் கடாவைக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை திரைக்குப் பின்னால் எடுத்துச்சென்று, காளையின் இரத்தத்தைக்கொண்டு செய்ததுபோல, இதைக்கொண்டும் செய்யவேண்டும். அதாவது அந்த இரத்தத்தை கிருபாசனத்தின் மேலும், அதன் முன்பக்கத்திலும் தெளிக்கவேண்டும்.
16 இவ்வாறாக அவன் மகா பரிசுத்த இடத்திற்காகப் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். இஸ்ரயேலரின் பாவம் எதுவாயினும், அவர்களுடைய அசுத்தத்திற்காகவும், கலகத்திற்காகவும் இவ்வாறு செய்யவேண்டும். அவர்களுடைய அசுத்தத்தின் மத்தியில் அவர்களிடையே இருக்கும் சபைக் கூடாரத்திற்காகவும், இவ்விதமாகவே செய்யவேண்டும்.
17 ஆரோன் பாவநிவிர்த்தி செய்யும்படி, மகா பரிசுத்த இடத்திற்குள் போகிற நேரந்தொடங்கி, அவன் தனக்காகவும், தன் குடும்பத்தினருக்காகவும், முழு இஸ்ரயேல் சமுதாயத்தினருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து வெளியே வரும்வரை, சபைக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கக்கூடாது.
18 “பின்பு அவன் வெளியே வந்து யெகோவாவுக்கு முன்பாக உள்ள பலிபீடத்திற்காக பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் காளையின் இரத்தத்தில் கொஞ்சமும், வெள்ளாட்டின் இரத்தத்தில் கொஞ்சமும் எடுத்து, பலிபீடத்தின் எல்லா கொம்புகளின்மேலும் பூசவேண்டும்.
19 அவன் இஸ்ரயேலரின் அசுத்தத்திலிருந்து பலிபீடத்தைச் சுத்திகரித்து, அதை அர்ப்பணம் செய்யும்படி அந்த இரத்தத்தில் கொஞ்சத்தை தன் விரல்களினால் அதன்மேல் ஏழுமுறை தெளிக்கவேண்டும்.
20 “ஆரோன் மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்து முடித்தபின், அவன் அந்த உயிருள்ள ஆட்டை முன்பாக கொண்டுவர வேண்டும்.
21 ஆரோன் தன் இரண்டு கைகளையும் அந்த உயிருள்ள ஆட்டின் தலையின்மேல் வைத்து, இஸ்ரயேலரின் எல்லா பாவங்களான எல்லா கொடுமையையும், கலகத்தையும் அந்த ஆட்டின் மேலாக அறிக்கையிட்டு, அவற்றை அந்த ஆட்டின் தலையின்மேல் சுமத்தவேண்டும். அவன் அந்த வெள்ளாட்டைப் பாலைவனத்திற்கு அனுப்பிவிடும்படி அதற்காக நியமிக்கப்பட்ட ஒருவனின் பொறுப்பில் அதைக்கொடுத்து அனுப்பிவிடவேண்டும்.
22 அந்த வெள்ளாடு அவர்களுடைய எல்லா பாவங்களையும் தன்மேல் சுமந்துகொண்டு, தனிமையான ஒரு இடத்திற்குப் போகும். அந்த மனிதன் அதை பாலைவனத்தில் விட்டுவிட வேண்டும்.
23 “பின்பு ஆரோன் சபைக் கூடாரத்திற்குப் போய், தான் மகா பரிசுத்த இடத்திற்குப் போகுமுன் உடுத்திக்கொண்ட மென்பட்டு உடைகளைக் களைந்து, அவற்றை அங்கே வைத்துவிடவேண்டும்.
24 அவன் ஒரு தூய்மையான இடத்திலே முழுகி, மீண்டும் தனது உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். பின் அவன் வெளியே வந்து, தனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தனக்கான தகன காணிக்கையையும், மக்களுக்கான தகன காணிக்கையையும் செலுத்தவேண்டும்.
25 பாவநிவாரண காணிக்கை பலியின் கொழுப்பையும் அவன் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்.
26 “பாவச்சுமை ஆடான வெள்ளாட்டைப் பாலைவனத்தில் போகவிடும் மனிதன், தன் உடைகளைக் கழுவி தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.
27 பாவநிவாரண காணிக்கையாக வெட்டப்பட்டதும், இரத்தம் பாவநிவிர்த்தி செய்யும்படி மகா பரிசுத்த இடத்திற்கு கொண்டுவரப்பட்டதுமான, காளையினுடைய, வெள்ளாட்டினுடைய மீதமுள்ள பாகங்கள் முகாமுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட வேண்டும். அவற்றின் தோல்களையும், இறைச்சியையும், குடல்களையும் எரிக்கவேண்டும்.
28 இவைகளை எரிக்கிறவன் தன் உடைகளைக் கழுவி, தானும் தண்ணீரில் முழுகவேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.
29 “இது உங்களுக்கு நிரந்தரமான கட்டளை. ஏழாம் மாதம் பத்தாம் நாளிலே உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். நீங்கள் எந்தவித வேலையையும் செய்யக்கூடாது. தன் நாட்டினனானாலும், உங்கள் மத்தியில் வாழும் பிறநாட்டினனானாலும் வேலைசெய்யக்கூடாது.
30 ஏனெனில் இந்த நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்படி உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். அப்பொழுது நீங்கள் யெகோவா முன்னிலையில் உங்கள் பாவங்கள் எல்லாம் நீக்கப்பட்டு சுத்தமுள்ளவர்களாய் இருப்பீர்கள்.
31 இது உங்களுக்கு முழுமையாக இளைப்பாறும் ஓய்வுநாள். இந்நாளில், நீங்கள் உங்களை ஒடுக்கி உபவாசம் இருக்கவேண்டும். இது ஒரு நிரந்தர கட்டளை.
32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பனின் இடத்துக்குத் தலைமை ஆசாரியனாக நியமிக்கப்பட்ட ஆசாரியனும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். அவன் பரிசுத்தமான மென்பட்டு உடைகளை உடுத்திக்கொண்டு,
33 மகா பரிசுத்த இடத்திற்காகவும், சபைக் கூடாரத்திற்காகவும், பலிபீடத்திற்காகவும், ஆசாரியருக்காகவும், சமுதாயத்தின் மக்கள் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும்.
34 “இது உங்களுக்கு ஒரு நிரந்தர கட்டளையாய் இருக்கவேண்டும். வருடத்தில் ஒருமுறை இஸ்ரயேலருடைய எல்லா பாவங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யப்படவேண்டும்” என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது செய்யப்பட்டது.
×

Alert

×