English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Lamentations Chapters

Lamentations 4 Verses

1 தங்கம் எவ்வளவாய் தன் ஒளியை இழந்து, சுத்தத் தங்கமும் எவ்வளவாய் மங்கிப்போயிற்றே! பரிசுத்த இடத்தின் இரத்தினக் கற்கள் தெருவின் முனைகளிலும் சிதறுண்டு கிடக்கின்றன.
2 ஒருகாலத்தில் சுத்தத் தங்கத்தின் மதிப்பிற்கு ஒப்பாயிருந்த, விலைமதிப்புமிக்க சீயோன் மகன்கள், இப்போது மண் பாத்திரங்களாய் எண்ணப்படுகிறார்கள். குயவனின் கைவேலையாக மதிக்கப்படுகிறார்கள்.
3 நரிகளும் தங்கள் குட்டிகளுக்கு பால் கொடுக்கும். ஆனால் என் மக்களோ பாலைவனத்திலுள்ள தீக்கோழிகளைப்போல, கொடூர மனமுள்ளவர்களானார்கள்.
4 தாகத்தினால் குழந்தையின் நாவு அதன் மேல்வாய் அண்ணத்துடன் ஒட்டிக்கொள்கிறது; பிள்ளைகள் உணவுக்காக கெஞ்சுகின்றனர், ஆனால் அதைக் கொடுப்பவர் ஒருவருமில்லை.
5 சுவையான உணவை ஒருகாலத்தில் உண்டவர்கள் வீதிகளில் ஆதரவற்றுத் திரிகிறார்கள். மென்பட்டு உடை அணிந்து முன்பு வாழ்ந்தவர்கள் இப்போது சாம்பல் மேடுகளில் இருக்கிறார்கள்.
6 உதவும் கரம் எதுவுமின்றி ஒரு நொடியில் கவிழ்க்கப்பட்ட சோதோமின் தண்டனையைவிட, என் மக்களின் தண்டனை பெரிதாயிருக்கிறது.
7 அவர்களின் இளவரசர்கள் [†இளவரசர்கள் அல்லது நசரேயர்கள். நியா. 13:5.] உறைபனியைப் பார்க்கிலும் பிரகாசமாயும், பாலைவிட வெண்மையாயும் இருந்தார்கள். அவர்களின் உடல்கள் பவளத்தைவிட சிவப்பாகவும், அவர்களின் தோற்றம் நீல மாணிக்கக் கற்களைப்போலவும் இருந்தன.
8 ஆனால் இப்பொழுதோ அவர்கள் அடுப்புக்கரியைவிடக் கறுப்பாயிருக்கிறார்கள்; வீதிகளில் அவர்கள் இன்னார் என அறியப்படாதிருக்கிறார்கள். அவர்களுடைய தோல், எலும்புகளின்மேல் சுருங்கி காய்ந்த மரத்திற்கு ஒப்பானது.
9 பஞ்சத்தால் சாகிறவர்களைவிட, வாளினால் கொலைசெய்யப்பட்டவர்களின் நிலை மேலானது; பஞ்சத்தால் சாகிறவர்களோ வயல்களின் விளைச்சல் குறைவுபட்டதால் பசியினால் துன்பப்பட்டு உருக்குலைந்து போகிறார்கள்.
10 இரக்கமுள்ள பெண்களும் தங்கள் சொந்தக் கைகளால் தங்கள் சொந்தப் பிள்ளைகளைச் சமைத்தனரே, என் மக்கள் அழிக்கப்படுகையில் பிள்ளைகள் அவர்களுக்கு உணவானார்களே!
11 யெகோவா தமது கோபத்தை முழுமையாய் வெளிப்படுத்தினார்; அவர் தமது கடுங்கோபத்தை ஊற்றிவிட்டார். அவர் சீயோனில் நெருப்பை மூட்டினார். அது அவளின் அஸ்திபாரங்களை எரித்துப்போட்டது.
12 பகைவர்களும் எதிரிகளும், எருசலேமின் வாசல்களுக்குள் புகுவார்கள் என்று, பூமியின் அரசர்களோ உலகத்தின் எந்த மக்களோ நம்பவில்லை.
13 ஆனால் அது நடந்தது. அவளுடைய இறைவாக்கு உரைப்போரின் பாவங்களினாலும், ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இது நடந்தது. அவர்களால் எருசலேமுக்குள் நேர்மையானவர்களின் இரத்தம் சிந்தப்பட்டது.
14 இப்பொழுதோ அவர்கள் குருடரான மனிதரைப்போல் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள். அவர்கள் இரத்தத்தினால் கறைப்பட்டிருப்பதால், அவர்களுடைய உடைகளைத் தொடுவதற்குக்கூட ஒருவரும் துணியவில்லை.
15 “விலகிப்போங்கள். நீங்கள் அசுத்தமானவர்கள். விலகுங்கள்! விலகுங்கள்! எங்களைத் தொடாதிருங்கள்” என்று மனிதர் அவர்களைப் பார்த்து கத்துகிறார்கள். அவர்கள் தப்பியோடி அலையும்போது அங்குள்ள மக்கள், “இவர்கள் இனிமேலும் இங்கே இருக்கமுடியாது” என்கிறார்கள்.
16 யெகோவாவே அவர்களைச் சிதறடித்தார்; அவர் அவர்கள்மேல் கண்காணிப்பாய் இருப்பதில்லை. ஆசாரியரைக் கனம்பண்ணுவதுமில்லை, முதியோருக்கு தயவு காண்பிப்பதுமில்லை.
17 அத்துடன் உதவிக்காக வீணாய் பார்த்திருந்தும் எங்கள் கண்கள் மங்கிப்போயின; எங்கள் காவல் கோபுரங்களிலிருந்து, எங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு நாட்டிற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தோமே!
18 மனிதர் எங்கள் ஒவ்வொரு அடிச்சுவடையும் பதுங்கிப் பின்தொடர்ந்தார்கள், அதனால் வீதிகளில் எங்களால் நடக்க முடியவில்லை. எங்கள் முடிவு நெருங்கியிருந்தது, ஏனெனில் எங்களுக்கு எண்ணப்பட்ட நாட்கள் முடிந்தன, எங்கள் முடிவும் வந்துவிட்டது.
19 எங்களைப் பின்தொடர்ந்தவர்கள், ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளைப் பார்க்கிலும் வேகமாய் இருந்தார்கள்; அவர்கள் மலைகளில் எங்களைத் துரத்தி பாலைவனத்தில் எங்களுக்காய் பதுங்கியிருக்கிறார்கள்.
20 யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்ட, எங்கள் உயிர்மூச்சான அரசனும், அவர்களுடைய கண்ணிகளில் அகப்பட்டுக்கொண்டான். அவனுடைய நிழலின்கீழ், நாடுகளின் மத்தியில் நாங்கள் வாழ்வோம் என்று நினைத்திருந்தோம்.
21 ஊத்ஸ் நாட்டில் வாழுகின்ற ஏதோமின் மகளே, நீ மகிழ்ந்து சந்தோஷப்படு. ஆனால் உனக்குங்கூட இறை கோபத்தின் பாத்திரம் கொடுக்கப்படும்; நீ குடித்து வெறிகொண்டு, ஆடையில்லாமல் கிடப்பாய்.
22 சீயோன் மகளே, உனது தண்டனை முடிவுறும்; உன் சிறையிருப்பை அவர் நீடிக்கமாட்டார். ஆனால் ஏதோமின் மகளே, அவர் உன் பாவங்களைத் தண்டித்து உன் கொடுமைகளை வெளிப்படுத்துவார்.
×

Alert

×