English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Judges Chapters

Judges 7 Verses

1 அதிகாலையில் கிதியோன் என்னும் யெருபாகாலும் அவனுடைய எல்லா மக்களும் ஆரோத் என்னும் நீரூற்றின் அருகில் முகாமிட்டார்கள். மீதியானியரின் முகாமோ இவர்களுக்கு வடக்கே, மோரே மலைக்கு அருகே பள்ளத்தாக்கில் இருந்தது.
2 யெகோவா கிதியோனிடம், “நான் மீதியானியரை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பதற்கு நீ அளவுக்கதிகமானவர்களை வைத்திருக்கிறாய். நாங்கள் எங்கள் பெலத்தில் எங்களை மீட்டுக்கொண்டோம் என்று இஸ்ரயேலர் எனக்கெதிராக பெருமைபாராட்டக் கூடுமே.
3 ஆகையால் நீ மக்களுக்கு, ‘உங்களுக்குள் பயத்தினால் நடுங்குபவர்கள் இருந்தால் கீலேயாத் மலையை விட்டுப் போய்விடலாம்’ என்று அறிவி” என்றார். எனவே இருபத்து இரண்டாயிரம்பேர் கீலியாத் மலையை விட்டுப் போனார்கள். பத்தாயிரம் பேர் மட்டும் எஞ்சியிருந்தார்கள்.
4 தொடர்ந்து யெகோவா கிதியோனிடம், “மனிதர் இன்னும் அளவுக்கதிகமாயிருக்கிறார்கள். அவர்களை தண்ணீர் அருகே கொண்டுபோ; நான் அங்கே அவர்களை சோதித்துப் பார்ப்பேன்; நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரலாம்’ என்றால் அவன் உன்னுடன் வரட்டும். நான் ஒருவனை, ‘இவன் உன்னுடன் வரக்கூடாது’ என்றால் அவன் வரக்கூடாது” என்றார்.
5 எனவே கிதியோன் அந்த மனிதரைத் தண்ணீர் அருகே அழைத்துச் சென்றான். அப்பொழுது யெகோவா அவனிடம், “நாக்கால் நக்கி நாயைப்போல் தண்ணீர் குடிப்போரை ஒரு பக்கமும், முழங்கால்களை ஊன்றி தண்ணீர் குடிப்போரை மற்ற பக்கமுமாக நிறுத்திவை” என்றார்.
6 அவ்வாறு தண்ணீரை தங்கள் கைகளால் அள்ளி நாயைப்போல நாக்கால் நக்கி குடித்தவர்கள் முந்நூறுபேர். எஞ்சியோர் தங்கள் முழங்கால்களை ஊன்றி வாயைத் தண்ணீரில் வைத்துக் குடித்தனர்.
7 யெகோவா கிதியோனிடம், “நக்கிக் குடித்த முந்நூறுபேருடனே நான் உங்களை மீட்டு மீதியானியரை உங்கள் கையில் தருவேன். மற்றெல்லோரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகட்டும்” என்றார்.
8 எனவே கிதியோனும், முந்நூறுபேரும் உணவுப் பொருட்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டு, எஞ்சியிருந்த இஸ்ரயேலரை அவர்களுடைய கூடாரத்திற்கு அனுப்பிவிட்டார்கள். அப்பொழுது மீதியானியரின் முகாம் கீழே பள்ளத்தாக்கில் இருந்தது.
9 அதே இரவில் யெகோவா கிதியோனிடம், “இப்பொழுதே நீ எழுந்து அவர்களுடைய முகாமிற்கு எதிராக போ, ஏனெனில் நான் அதை உன் கையில் கொடுக்கப்போகிறேன்.
10 தாக்குவதற்கு நீ பயந்தால், உனது பணியாளான பூராவுடன் மீதியானியரின் முகாமுக்குப்போ.
11 அங்கே அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று நீ கேள். அதற்குப்பின் அந்த முகாமைத் தாக்குவதற்கு நீ துணிவுகொள்வாய்” என்றார். அவ்வாறே அவனும் அவன் பணியாளன் பூராவும் முகாமின் காவல் அரண் இருக்கும் இடம்வரைக்கும் போனார்கள்.
12 அந்தப் பள்ளத்தாக்கிலே மீதியானியர், அமலேக்கியர், கிழக்கு நாட்டு மக்கள் எல்லோரும் வெட்டுக்கிளிக் கூட்டம்போல தங்கியிருந்தனர். அவர்களுடைய ஒட்டகங்கள் கணக்கிடமுடியாத கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தன.
13 கிதியோன் முகாமை வந்துசேர்கையில் ஒருவன் தான் கண்ட கனவை தன் சிநேகிதனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். “நான் ஒரு கனவு கண்டேன்; கனவில் சுடப்பட்ட ஒரு வட்டமான வாற்கோதுமை அப்பம் உருண்டு மீதியானியரின் முகாமின்மேல் வந்தது. அது மிகவும் வல்லமையுடன் வந்து கூடாரத்தைத் தாக்கியபோது கூடாரம் மறுபக்கமாக புரட்டி வீழ்த்தப்பட்டது,” எனச் சொன்னான்.
14 அப்பொழுது அவனுடைய சிநேகிதன், “இது இஸ்ரயேலனான யோவாசின் மகன் கிதியோனின் வாளேயல்லாமல் வேறொன்றுமல்ல. இறைவன் மீதியானியரையும், இந்த முகாம் முழுவதையுமே அவனுடைய கைகளில் ஒப்படைத்திருக்கிறார்” என்று சொன்னான்.
15 கிதியோன் இந்த கனவையும் அதன் விளக்கத்தையும் கேட்டபோது, இறைவனை வழிபட்டான். அவன் இஸ்ரயேலரின் முகாமுக்குள் திரும்பிப்போய், “எழும்புங்கள், யெகோவா மீதியானியருடைய முகாமை உங்கள் கைகளில் கொடுத்திருக்கிறார்” என்று கூப்பிட்டுச் சொன்னான்.
16 எனவே அவன் அந்த முந்நூறுபேரையும் மூன்று பிரிவாகப் பிரித்து அவர்கள் எல்லோருடைய கைகளிலும் எக்காளங்களையும், வெறுமையான பானைக்குள் தீப்பந்தங்களையும் வைத்துக் கொடுத்தான்.
17 பின் அவன் அவர்களிடம், “என்னைக் கவனித்து என் வழியைப் பின்பற்றுங்கள். நான் முகாமின் அருகில் சென்று செய்வதைப்போலவே ஒன்றும்விடாமல் நீங்களும் செய்யுங்கள்.
18 நானும் எனது பகுதியில் இருப்பவர்களும் எங்கள் எக்காளங்களை ஊதியவுடன், நீங்கள் எல்லோரும் முகாமைச் சுற்றி உங்கள் எக்காளத்தை ஊதி, ‘யெகோவாவுக்காவும் கிதியோனுக்காகவும்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொன்னான்.
19 நள்ளிரவு காவல் தொடங்கும் நேரத்தில், அவர்கள் காவலர்களை மாற்றிய சிறிது நேரத்தில், கிதியோனும் அவனுடன் நின்ற நூறுபேரும் முகாமின் அருகே போய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் தங்கள் எக்காளங்களை ஊதி, கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள்.
20 அந்த மூன்று பிரிவினரும் எக்காளங்களை ஊதி பானைகளை உடைத்தார்கள். அவர்கள் தீப்பந்தங்களை இடதுகையில் இறுக்கி பிடித்துக்கொண்டு, தாங்கள் ஊதப்போகிற எக்காளங்களைத் தங்கள் வலதுகையில் பிடித்துக்கொண்டு, “யெகோவாவுக்கு ஒரு வாள் கிதியோனுக்கு ஒரு வாள்” என்று பெரிய சத்தமிட்டார்கள்.
21 ஒவ்வொருவனும் முகாமைச் சுற்றி தன் நிலையில் நின்றான். அப்பொழுது மீதியானியர் எல்லோரும் கதறிக்கொண்டு தப்பியோடினார்கள்.
22 முந்நூறுபேரும் எக்காளங்களை ஒலித்துக் கொண்டிருந்தபோதே யெகோவா முகாம் முழுவதிலும் உள்ள மனிதர் ஒருவரையொருவர் தாக்கும்படி செய்தார். செரேராவை நோக்கி பெத் சித்தாவுக்கும் சாபாத்திற்கும், தேபாவுக்கும் அருகேயுள்ள ஆபேல் மெகொலாவின் எல்லைவரைக்கும் மீதியானியரின் யுத்தபடை தப்பி ஓடியது.
23 நப்தலி, ஆசேர், மனாசே ஆகிய இஸ்ரயேலரும் அழைக்கப்பட்டு ஒன்றுகூடினர். அவர்கள் மீதியானியரைத் துரத்திச் சென்றனர்.
24 கிதியோன் எப்பிராயீம் மலை நாடெங்கும் தூதுவரை அனுப்பி, “மீதியானியருக்கு எதிராக இறங்கி வாருங்கள்; வந்து அவர்களுக்குமுன் பெத் பாராவுக்குப் போய் யோர்தானுக்கு முன்னே துறைகளைக் கைப்பற்றுங்கள்” என்றான். அதன்படி எப்பிராயீம் மனிதர்கள் எல்லோரும் வந்து, பெத் பாரா வரையிருக்கும் யோர்தானுக்கு முன்னேயுள்ள துறைகளை கைப்பற்றினார்கள்.
25 அதோடு அவர்கள் மீதியானியரின் இரண்டு தலைவர்களான ஓரேப், சேப் என்பவர்களையும் பிடித்தார்கள்; அவர்கள் ஓரேபை, ஓரேப் என்னும் கற்பாறையிலும், சேபை சேப் என்னும் திராட்சை ஆலையிலும் கொலைசெய்தார்கள். பின் மீதியானியரைத் துரத்திச்சென்று ஓரேப், சேப் ஆகியோரின் தலைகளை யோர்தான் அருகேயிருந்த கிதியோனிடம் கொண்டுபோனார்கள்.
×

Alert

×