English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Judges Chapters

Judges 2 Verses

1 யெகோவாவின் தூதனானவர் கில்காலில் இருந்து போகீமுக்குப் போய் சொன்னதாவது: “நான் உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்து உங்கள் முற்பிதாக்களுக்குத் தருவேன் என்று நான் வாக்களித்த நாட்டிற்கு, நான் உங்களை வழிநடத்தி வந்தேன். நான் உங்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறமாட்டேன் என்றும்,
2 இந்நாட்டு மக்களோடு எந்த உடன்படிக்கையையும் நீங்கள் செய்யவேண்டாம் என்றும், அவர்களுடைய பலிபீடங்களை உடைத்துப்போடும்படியும் நான் உங்களுக்குச் சொன்னேன். ஆனால் நீங்களோ அதற்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் ஏன் இப்படிச் செய்தீர்கள்?
3 அதனால் இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்களுக்கு முன்பாக நான் அவர்களைத் துரத்தமாட்டேன்; அவர்கள் உங்கள் விலாக்களுக்கு, குத்தும் முள்ளாக இருப்பார்கள். அவர்களின் தெய்வங்கள் உங்களுக்கு கண்ணியாகவும் இருக்கும்.”
4 யெகோவாவின் தூதனானவர் இவற்றை எல்லா இஸ்ரயேலர்களிடமும் சொன்னபோது மக்கள் சத்தமிட்டு அழுதார்கள்.
5 அவர்கள் அந்த இடத்தை போகீம் [*போகீம் என்பதன் பொருள் அழுகை என்று அர்த்தம்.] என்று அழைத்தார்கள். அங்கேயே அவர்கள் யெகோவாவுக்குப் பலிகளைச் செலுத்தினார்கள்.
6 முன்பு யோசுவா இஸ்ரயேலரைப் போக அனுமதித்தபோது, அவர்கள் அந்த நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும்படி போனார்கள். ஒவ்வொருவரும் தங்கள் உரிமைச்சொத்தைப் பெறும்படி போனார்கள்.
7 மக்கள் யோசுவாவின் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்குப் பணிசெய்தனர். யெகோவா இஸ்ரயேலருக்காகச் செய்த எல்லாப் பெரிய செயல்களையும் கண்டிருந்த, யோசுவாவுக்குப் பின் வாழ்ந்த சபைத்தலைவர்களின் காலத்திலும் மக்கள் யெகோவாவுக்கு சேவை செய்தார்கள்.
8 யெகோவாவின் அடியவனும், நூனின் மகனுமான யோசுவா நூற்றுப்பத்து வயதில் இறந்தான்.
9 அவர்கள் திம்னாத் ஏரேஸில் அவனுடைய உரிமைச்சொத்தான நிலத்தில் அவனுடைய உடலை அடக்கம்பண்ணினார்கள். இது காயாஸ் மலைக்கு வடக்கே எப்பிராயீம் மலைநாட்டில் இருக்கிறது.
10 அதன்பின்பு அந்த எல்லா தலைமுறையினரும் தங்கள் தந்தையருடன் சேர்க்கப்பட்டபின், யெகோவாவையும் அவர் இஸ்ரயேல் மக்களுக்குச் செய்தவற்றையும் அறியாத வேறு ஒரு தலைமுறை தோன்றியது.
11 அப்பொழுது இஸ்ரயேலர் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, பாகால் தெய்வங்களுக்குப் பணிசெய்தனர்.
12 அவர்கள் தங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த தங்கள் முற்பிதாக்களின் யெகோவாவாகிய இறைவனை கைவிட்டார்கள். தங்களைச் சுற்றியிருந்த மக்களின் பலவிதமான தெய்வங்களைப் பின்பற்றி வணங்கினார்கள். யெகோவாவுக்கு கோபமூட்டினார்கள்.
13 அவர்கள் யெகோவாவைக் கைவிட்டு பாகாலுக்கும், அஸ்தரோத்துக்கும் பணிசெய்ததினாலேயே யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்.
14 இஸ்ரயேலருக்கு விரோதமாக யெகோவா கோபங்கொண்டு அவர் அவர்களைக் கொள்ளைக்காரரிடத்தில் ஒப்படைக்க, அவர்களும் அவர்களைக் கொள்ளையடித்தார்கள். அவர் அவர்களைச் சுற்றிலுமிருந்த அவர்களுடைய பகைவர்களுக்கு விற்றுப்போட்டார், அந்தப் பகைவர்களைத் தொடர்ந்து அவர்களால் எதிர்க்க முடியவில்லை.
15 இஸ்ரயேலர் சண்டையிடப் போகும்போதெல்லாம், யெகோவா அவர்களுக்கு ஆணையிட்டபடி யெகோவாவின் கரம் அவர்களுக்கெதிராக இருந்து அவர்களைத் தோல்வியுறச் செய்தது. அவர்கள் பெரும் துயரத்திற்குள்ளானார்கள்.
16 அக்காலத்தில் யெகோவா நீதிபதிகளை நியமித்தார். அவர்கள் இஸ்ரயேல் மக்களை கொள்ளையரின் கைகளிலிருந்து மீட்டுக்கொண்டார்கள்.
17 ஆயினும் அவர்கள் அந்த நீதிபதிகளுக்கு செவிகொடுக்க மறுத்து, அந்நிய தெய்வங்களை வணங்கி விபசாரம் செய்தார்கள். யெகோவாவின் கட்டளைக்கு கீழ்படிந்த அவர்களின் முன்னோரின் வழியில் நடக்காமல், அவர்கள் விரைவில் வழிவிலகினார்கள்.
18 யெகோவா அவர்களுக்காக நீதிபதியை நியமித்தபோதெல்லாம், அவர் அந்த நீதிபதியோடுகூட இருந்து, அவர்களுடைய எதிரிகளிடமிருந்து நீதிபதியின் வாழ்நாளெல்லாம் அவர்களைப் பாதுகாத்தார். அவர்கள் தங்கள் பகைவர்களினால் ஒடுக்கப்பட்ட வேதனைக் குரலைக் கேட்டு யெகோவா அவர்களுக்கு இரங்கினார்.
19 ஆனால் அந்த நீதிபதி இறந்தவுடன், இஸ்ரயேல் மக்கள் திரும்பவும் தங்கள் முன்னோரைவிட தூய்மையற்ற வழியில் நடந்தார்கள். அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி வணங்கி அதற்கு சேவை செய்தார்கள். அவர்கள் இப்படி தங்கள் தீய நடத்தைகளிலிருந்தும் பிடிவாதமான வழிகளிலிருந்தும் விடுபட மறுத்தார்கள்.
20 அப்பொழுது யெகோவா இஸ்ரயேலின்மேல் கோபம் மூண்டவராகி, “இந்த மக்கள் நான் அவர்களின் முற்பிதாக்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறிவிட்டார்கள். எனக்குச் செவிகொடுக்கவில்லை.
21 அதனால் யோசுவா இறக்கும்போது, அழிக்காமல் விட்டுச்சென்ற எந்த நாட்டையும் இவர்களுக்கு முன்பாக துரத்திவிடமாட்டேன்.
22 ஆனால் நான் இவர்களைக்கொண்டு இஸ்ரயேலர்கள் தங்கள் முற்பிதாக்கள் நடந்ததுபோல, யெகோவாவின் வழியைக் கைக்கொண்டு அதில் நடக்கிறார்களோ, இல்லையோ என இஸ்ரயேலரைச் சோதிப்பேன்” என்றார்.
23 எனவே யெகோவா அந்த நாடுகளை அப்படியே தொடர்ந்து இருக்க விட்டிருந்தார்; அவர்களை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடுக்கவோ, உடனே துரத்திவிடவோ இல்லை.
×

Alert

×