ஆத்சோர் அரசன் யாபீன் இந்த வெற்றிகளைப்பற்றிக் கேள்விப்பட்டதும், அருகிலுள்ள பட்டணங்களின் அரசர்களுக்கு ஒரு அவசரசெய்தி அனுப்பினான். அவர்கள்: மாதோனின் அரசன் யோபாப், சிம்ரோனின் அரசன், அக்சாபின் அரசன்,
அத்துடன் கிழக்கிலும், மேற்கிலும் இருந்த கானானியர், எமோரியர், ஏத்தியர், பெரிசியர், மலைநாட்டிலுள்ள எபூசியர், மிஸ்பா என்னும் பகுதியில் எர்மோன் மலையடிவாரத்தில் வாழ்ந்த ஏவியர் ஆகியோரிடத்திற்கும் செய்தி அனுப்பினான்.
அவர்கள் தங்கள் எல்லாப் படைகளோடும், குதிரைகளோடும், இரதங்களோடும் புறப்பட்டுவந்து ஒன்றுகூடினர். இந்த பெரும்படை கடற்கரை மணலைப்போல எண்ணிக்கையில் அதிகமாயிருந்தது.
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “நீ அவர்களுக்குப் பயப்படாதே. நாளை இந்நேரத்தில் நான் அவர்கள் அனைவரையும் கொல்லப்பட்டவர்களாக இஸ்ரயேலரிடம் ஒப்படைப்பேன். நீ அவர்களுடைய குதிரைகளின் பின்கால் நரம்புகளை வெட்டி, அவர்களுடைய இரதங்களையும் எரித்துவிடவேண்டும்” என்றார்.
யெகோவா எதிரிகளை இஸ்ரயேலரிடம் ஒப்படைத்தார். இஸ்ரயேலர் அவர்களை முறியடித்து பெரிய சீதோன், மிஸ்ரபோத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பே பள்ளத்தாக்கு ஆகிய இடங்கள்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்கள். அவர்களில் ஒருவரையும் தப்பவிடவில்லை.
அங்குள்ள ஒவ்வொருவரும் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள். இஸ்ரயேலர் சுவாசமுள்ள ஒன்றையும் தப்பவிடாமல், அவர்கள் எல்லோரையும் முழுவதும் அழித்துப்போட்டார்கள். யோசுவா முழு ஆத்சோரையுமே எரித்துப்போட்டான்.
யோசுவா அந்த அரசர்கள் வாழும் எல்லாப் பட்டணங்களையும் கைப்பற்றி, அவற்றின் அரசர்களை வாளுக்கு இரையாக்கினான். யெகோவாவின் அடியானாகிய மோசே கட்டளையிட்டபடி அவற்றையெல்லாம் யோசுவா முழுவதும் அழித்தான்.
இந்த நகரங்களிலிருந்து கொள்ளைப்பொருட்களையும் மிருகங்களையும் இஸ்ரயேலர் தங்களுக்கெனக் கொண்டுசென்றார்கள். ஆனால் சுவாசமுள்ள ஒருவரையும் தப்பவிடாமல் அம்மக்கள் எல்லோரும் முற்றுமாக அழியும்வரை, அவர்களைத் தங்கள் வாள்களுக்கு இரையாக்கினார்கள்.
இவை சேயீர் நோக்கி உயர்ந்துசெல்லும் ஆலாக் மலையிலிருந்து, எர்மோன் மலைக்குக் கீழே இருக்கும் லெபனோன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பாகால்காத்வரை பரந்திருந்தது. யோசுவா இப்பிரதேசங்களை ஆண்ட அரசர்கள் அனைவரையும் சிறைப்பிடித்து, அவர்களை வெட்டிக்கொன்றான்.
யெகோவாவே இஸ்ரயேலருடன் போர்புரியும்படி அவர்களுடைய இருதயங்களைக் கடினப்படுத்தினார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடி அவர்களை இரக்கமின்றி அழிக்கும்படிக்கே இப்படிச் செய்தார்.
அக்காலத்தில் யோசுவா போய் மலைநாட்டிலிருந்த ஏனாக்கியரை அழித்தான்: அவர்கள் எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய பகுதிகளிலும், யூதா மலைநாடுகளிலும், இஸ்ரயேல் மலைநாடுகளிலும் வாழ்ந்துவந்தனர். யோசுவா அவர்களையும், அவர்கள் பட்டணங்களையும் முற்றிலும் அழித்தான்.
இவ்வாறாக யெகோவா மோசேக்கு அறிவுறுத்தியிருந்தபடியே யோசுவா முழு நாட்டையும் கைப்பற்றி, இஸ்ரயேலருக்கு அவர்கள் கோத்திரப் பிரிவுகளின்படி அவற்றைச் சொத்துரிமை நிலமாகக் கொடுத்தான். அதன்பின் நாட்டில் போர் ஓய்ந்து அமைதி நிலவியது.