‘அறிவில்லாமல் எனது ஆலோசனையை மறைக்கிறவன் யார்?’ என நீர் கேட்டீரே; உண்மையாக நான் எனக்கு விளங்காதவற்றையும், என் அறிவுக்கெட்டாத புதுமையான காரியங்களையும் குறித்துப் பேசினேனே.
யெகோவா யோபுவுடன் இவற்றைப் பேசி முடித்தபின்பு தேமானியனான எலிப்பாசிடம் பேசினார். “நான் உன்மீதும், உன் இரண்டு நண்பர்கள்மீதும் கோபமாயிருக்கிறேன். ஏனெனில் எனது அடியவன் யோபு பேசியதுபோல நீங்கள் என்னைப்பற்றிச் சரியானவற்றைப் பேசவில்லை.
ஆகையால் இப்பொழுது நீங்கள் ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் அடியவன் யோபுவிடம் போய், உங்களுக்காகத் தகனபலியிடுங்கள். எனது அடியவன் யோபு உங்களுக்காக வேண்டுதல் செய்வான். நான் அவன் வேண்டுதலைக் கேட்டு, உங்கள் மூடத்தனத்திற்குத்தக்கதாக நான் உங்களைத் தண்டிக்கமாட்டேன். என் அடியவன் யோபு என்னைப்பற்றிச் சரியானதைப் பேசியதுபோல நீங்கள் பேசவில்லை” என்றார்.
யோபு தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தபின், யெகோவா அவனுக்கு முன்பு இருந்தவற்றைப்போல், இருமடங்கு அதிகமான செல்வத்தைக் கொடுத்து, திரும்பவும் அவனைச் செல்வந்தனாக்கினார்.
அப்பொழுது யோபுவின் சகோதரர்களும், சகோதரிகளும், முன்பு அவனை அறிந்திருந்த அனைவரும் அவனுடைய வீட்டிற்கு வந்து அவனோடு விருந்து சாப்பிட்டார்கள். அத்துடன் அவர்கள் யெகோவா அவன்மேல் கொண்டுவந்த எல்லாத் துன்பங்களுக்காகவும், அவனைத் தேற்றி ஆறுதலளித்தார்கள். ஒவ்வொருவரும் பணத்தையும், ஒரு தங்கமோதிரத்தையும் யோபுவுக்குக் கொடுத்தார்கள்.
யெகோவா யோபுவின் பிற்கால வாழ்க்கையை, அவனுடைய ஆரம்ப நாட்களைவிட அதிகமாக ஆசீர்வதித்தார். அவனுக்கு பதினாலாயிரம் செம்மறியாடுகளும் ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் நுகம் பூட்டும் எருதுகளும், ஆயிரம் கழுதைகளும் இருந்தன.
நாடெங்கிலும் யோபுவின் மகள்களைப்போல் அழகான பெண்கள் யாரும் இருந்ததில்லை. அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு அவர்கள் சகோரதர்களுடன் உரிமைச்சொத்துக்களைக் கொடுத்தான்.