அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.
பின்பு யெகோவா சாத்தானிடம், “எனது அடியான் யோபுவைக் கவனித்தாயோ? பூமியில் அவனைப்போல் யாருமே இல்லை; அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு நடக்கிற மனிதனுமாய் இருக்கிறான். காரணமில்லாமல் அவனை அழிப்பதற்கு நீ என்னை அவனுக்கெதிராகத் தூண்டின போதிலும், இன்னும் அவன் தனது உத்தமத்திலே நிலைத்திருக்கிறானே” என்றார்.
யோபுவுக்கு நேரிட்ட இடர்களையெல்லாம் தேமானியனான எலிப்பாஸ், சூகியனான பில்தாத், நாகமாத்தியனான சோப்பார் ஆகிய மூன்று நண்பர்களும் கேள்விப்பட்டார்கள். அவர்கள் யோபுவிடம் போய் அவனுக்கு அனுதாபங்காட்டி ஆறுதல் கூறுவதற்காக, தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு ஒன்றுகூடி வந்தார்கள்.
அவர்கள் தூரத்திலிருந்து யோபுவைக் கண்டபோது, அவர்களால் அவனை இன்னார் என்று அறியமுடியவில்லை. அவர்கள் கதறி அழத்தொடங்கி தங்கள் மேலங்கிகளைக் கிழித்து, தங்கள் தலைகளில் தூசியை வாரியிறைத்தார்கள்.
அவனுடைய வேதனையின் கொடுமையை அவர்கள் கண்டதால், ஏழு பகல்களும் ஏழு இரவுகளும் அவனுடன் தரையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒருவனும் அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை.