English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Job Chapters

Job 1 Verses

1 ஊத்ஸ் என்னும் நாட்டில் யோபு என்றொரு மனிதன் வாழ்ந்தான். அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனுமாய் இருந்தான். அவன் இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடந்தான்.
2 அவனுக்கு ஏழு மகன்களும், மூன்று மகள்களும் இருந்தார்கள்.
3 அவனுக்கு ஏழாயிரம் செம்மறியாடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஜோடி ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளும் இருந்தன, அநேகம் வேலைக்காரர்களும் இருந்தார்கள். கிழக்குப் பகுதியில் இருந்த மக்கள் எல்லோரிலும் யோபு மிக முக்கியமான மனிதனாய் இருந்தான்.
4 அவனுடைய மகன்கள் ஒவ்வொருவரும், தன்தன் வீட்டில் முறையே விருந்து கொடுப்பது வழக்கம். அத்துடன் தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களுடன் விருந்துக்கு அழைப்பார்கள்.
5 ஒவ்வொரு முறையும் விருந்து முடிந்தவுடன் யோபு, “என் பிள்ளைகள் ஒருவேளை தங்கள் இருதயங்களில் பாவம் செய்து, இறைவனைத் தூஷித்திருக்கலாம்” என நினைத்து அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவான். அதிகாலையில் ஒவ்வொருவருக்காகவும் தகனபலிகளையும் செலுத்துவான். இவ்வாறு செய்வது யோபுவின் வழக்கமான நடைமுறையாய் இருந்தது.
6 ஒரு நாள் இறைவனின் தூதர்கள் யெகோவாவின் சமுகத்தில் கூடிவந்தார்கள், சாத்தானும் அவர்களுடன் வந்து நின்றான்.
7 யெகோவா சாத்தானிடம், “நீ எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்டார். சாத்தான் யெகோவாவுக்கு மறுமொழியாக, “நான் பூமியெங்கும் சுற்றித்திரிந்து, அங்குமிங்கும் போய் வருகிறேன்” என்றான்.
8 அப்பொழுது யெகோவா சாத்தானிடம், “நீ எனது அடியவன் யோபுவைக் கவனித்தாயா? அவனைப்போல் பூமியில் ஒருவனும் இல்லை. அவன் குற்றமில்லாதவனும், நேர்மையானவனும், இறைவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி நடக்கிறவனுமாய் இருக்கிறான்” என்றார்.
9 சாத்தான் யெகோவாவுக்குப் பதிலாக, “யோபு வீணாகவா இறைவனுக்குப் பயந்து நடக்கிறான்?
10 நீர் அவனையும் அவன் வீட்டையும், அவனுக்கு உள்ள எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? நீர் அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்திருக்கிறீர்; அதினால் அவனுடைய ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் நாட்டில் பெருகியிருக்கின்றன.
11 ஆனாலும் இப்பொழுது நீர் உமது கரத்தை நீட்டி அவன் வைத்திருக்கும் எல்லாவற்றையும் அடியும். அப்பொழுது நிச்சயமாக அவன் உமது முகத்துக்கு நேராகவே உம்மைச் சபிப்பான்” என்றான்.
12 அதற்கு யெகோவா சாத்தானிடம், “சரி, இதோ, அவனிடத்தில் இருப்பதெல்லாம் உன் கையிலிருக்கின்றன; ஆனால் அவனை மட்டும் தொடாதே” என்றார். உடனே சாத்தான் யெகோவாவின் சமுகத்தினின்று வெளியேறினான்.
13 ஒரு நாள் யோபுவின் மகன்களும், மகள்களும், தங்கள் மூத்த சகோதரனுடைய வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
14 ஒரு தூதுவன் யோபுவிடம் வந்து, “உமது எருதுகள் உழுது கொண்டிருந்தன; அருகில் கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன.
15 அவ்வேளையில் சபேயர் வந்து தாக்கி அவற்றைக் கொண்டுபோய்விட்டார்கள்; அத்துடன் உமது பணியாட்களையும் வாளால் வெட்டிப் போட்டார்கள். நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான்.
16 அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னொரு தூதுவன் வந்து, “ஆகாயத்தில் இருந்து இறைவனின் அக்கினி விழுந்து உமது செம்மறியாடுகளையும் பணியாட்களையும் எரித்துப்போட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி இதைச் சொல்லவந்தேன்” என்றான்.
17 அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே வேறொரு தூதுவன் வந்து, “கல்தேயர் மூன்று கூட்டமாக வந்து, உமது ஒட்டகங்களை ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். வேலையாட்களையும் வாள் முனையில் வீழ்த்தினர், நான் ஒருவன் மட்டுமே தப்பி இதை உம்மிடம் சொல்லவந்தேன்” என்றான்.
18 அவன் சொல்லிக்கொண்டிருக்கையில் இன்னுமொரு தூதுவன் வந்து, “உமது மகள்களும், மகன்களும் அவர்களுடைய மூத்த சகோதரன் வீட்டில் விருந்துண்டு, திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தார்கள்.
19 அப்பொழுது திடீரென வனாந்திரத்திலிருந்து பெருங்காற்று உண்டாகி, வீட்டின் நான்கு மூலைகளையும் மோதியடித்தது. வீடு அவர்கள்மேல் விழுந்ததால் அவர்கள் இறந்துபோனார்கள். நான் மட்டும் தப்பி இதை உமக்குச் சொல்லவந்தேன்” என்றான்.
20 அப்பொழுது யோபு எழுந்து, துக்கத்தில் தன் மேலாடையைக் கிழித்து, தலையை மொட்டையடித்து, தரையில் விழுந்து வணங்கி சொன்னதாவது:
21 “என் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தேன்; நிர்வாணியாகவே திரும்புவேன். யெகோவா கொடுத்தார், யெகோவா எடுத்துக்கொண்டார்; யெகோவாவின் பெயர் துதிக்கப்படுவதாக.”
22 இவையெல்லாவற்றிலும் யோபு இறைவன் தனக்குத் தீங்கு செய்தார் எனக் குறைகூறி பாவம் செய்யவில்லை.
×

Alert

×