English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Jeremiah Chapters

Jeremiah 49 Verses

1 அம்மோனியரைப் பற்றியது: யெகோவா கூறுவது இதுவே: “இஸ்ரயேலுக்கு மகன்கள் இல்லையோ? அவளுக்கு வாரிசுகள் இல்லையோ? அப்படியானால், மோளேக் [*மோளேக் என்றால் அம்மோனிய தெய்வம், இதை வணங்குபவர்கள் மில்க்கோம் என்று அழைக்கப்பட்டனர்] தெய்வம் காத் நாட்டை உரிமையாக்கிக் கொண்டது ஏன்? அதனை வணங்குகிறவர்கள் ஏன் அதன் பட்டணங்களில் வாழ்கின்றனர்?
2 ஆயினும், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அம்மோனியரின் ரப்பா பட்டணத்துக்கெதிராக நான் போரின் முழக்கத்தை எழுப்புவேன். அந்த இடம் இடிபாடுகளின் குவியலாகும். அதைச் சுற்றியுள்ள கிராமங்களும் நெருப்பினால் எரிக்கப்படும். அப்பொழுது தங்களை வெளியே துரத்திவிட்டவர்களை, இஸ்ரயேலர் வெளியே துரத்திவிடுவார்கள்” என்று யெகோவா சொல்கிறார்.
3 “எஸ்போனே! புலம்பி அழு! ஏனெனில், ஆயி பட்டணம் அழிக்கப்பட்டது. ரப்பாவின் குடிகளே! கதறியழுங்கள். துக்கவுடை உடுத்தித் துக்கங்கொண்டாடுங்கள். வேலிகளுக்குள்ளே இங்கும் அங்கும் விரைந்தோடுங்கள். ஏனெனில், மோளேகு தெய்வம் தனது பூசாரிகளுடனும் அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும்.
4 உண்மையற்ற மகளே! உன் பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமையாய்ப் பேசுகிறாய்? உன் வளம் நிறைந்த பள்ளத்தாக்குகளைப் பற்றி ஏன் பெருமை பேசுகிறாய்? நீ உன் செல்வங்களில் நம்பிக்கை வைத்து, ‘என்னைத் தாக்குபவன் யார்’ என்கிறாயே!
5 உன்னைச் சுற்றியுள்ள எல்லோரிடமிருந்தும், உனக்குப் பயங்கரத்தைக் கொண்டுவருவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “உங்களில் ஒவ்வொருவரும் வெளியே துரத்தப்படுவீர்கள். தப்பியோடுகிறவர்களை ஒன்றுசேர்ப்பார் ஒருவருமில்லை.
6 “இருந்தும் பிற்பாடு அம்மோனியரின் செல்வங்களை நான் திரும்பவும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
7 ஏதோமைப் பற்றியது: சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “தேமானிலே ஞானம் இல்லையோ? விவேகமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனை இல்லாமல் போயிற்றோ? அவர்களுடைய ஞானம் சிதைந்து போயிற்றோ?
8 தேதானில் குடியிருப்பவர்களே! திரும்பி தப்பியோடுங்கள். பள்ளங்களின் நடுவிலே ஒளிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஏசாவை நான் தண்டிக்கும் காலத்தில் அவன்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்.
9 திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுச்செல்லமாட்டார்களோ? இரவுவேளையில் திருடர்கள் வந்தால், தங்கள் மனம் விரும்பிய அளவு மட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவா?
10 ஆனால் நானோ ஏசாவை வெறுமையாக்குவேன். அவன் தன்னை மறைத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவேன். அவனுடைய பிள்ளைகளும், உறவினர்களும், அயலவர்களும் அழிந்துபோவார்கள். அவனும் இல்லாமற்போவான்.
11 ‘நீ உன் அநாதைகளை விட்டுவிடு; நான் அவர்களைப் பாதுகாப்பேன். உன்னுடைய விதவைகளும் என்னில் நம்பிக்கையாய் இருக்கலாம்.’ ”
12 யெகோவா கூறுவது இதுவே: “தண்டனையின் பாத்திரத்தில் குடிக்க வேண்டியதல்லாதவர்களும், அதில் கட்டாயமாய் குடிக்க வேண்டியிருக்கும்போது, நீ மட்டும் தண்டனையின்றி தப்பலாமோ? நீ தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டாய்; நீ கண்டிப்பாக குடிக்கவேண்டும்.
13 போஸ்றா பாழாக்கப்பட்டு, பயங்கரத்திற்கும், நிந்தைக்கும், சாபத்திற்கும் உள்ளாகும். அதன் பட்டணங்கள் யாவும் என்றும் பாழாகவே கிடக்கும் என்று நான் என்னைக்கொண்டு ஆணையிடுகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
14 நான் யெகோவாவிடமிருந்து ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். ஜனங்களிடம் ஒரு தூதுவன், “அதைத் தாக்குவதற்கு நீங்கள் ஒன்றுகூடுங்கள்! யுத்தம் செய்ய எழும்புங்கள்!” என்று சொல்லுவதற்காக அனுப்பப்பட்டான்.
15 இப்பொழுது நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதும், மனிதரால் அவமதிக்கப்பட்டதுமாக்குவேன்.
16 கற்பாறை பிளவுகளில் வாழ்ந்து, மேடுகளின் உயரங்களில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற உன்னை, நீ விளைவிக்கும் பயங்கரமும், உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது. நீ கழுகின் கூட்டைப்போல் உன் கூட்டை மிக உயரத்தில் கட்டினாலும், அங்கிருந்தும் நான் உன்னை கீழே விழத்தள்ளுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
17 ஏதோம் ஒரு பாழான பொருளாகும். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள்.
18 சோதோமும், கொமோராவும் அவைகளுக்கு அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்க்கப்பட்டதுபோல, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா சொல்கிறார்.
19 யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, ஏதோமை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நான் நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? என்னை எதிர்க்கக் கூடியவன் யார்? எந்த மேய்ப்பன் எனக்கெதிராக நிற்பான்?
20 ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.
21 அவைகளின் விழுகையின் சத்தத்தால் பூமி நடுங்கும். அவைகளின் அழுகுரல் செங்கடல்வரை எதிரொலிக்கும்.
22 இதோ! ஒருவன் கழுகைப்போல உயரப் பறந்து, போஸ்றாவின் மேலாக தனது சிறகுகளை விரித்து, அதை தாக்கும்படி கீழே வருகிறான். அந்த நாளில் ஏதோமின் போர்வீரருடைய இருதயங்கள் பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப்போல் இருக்கும்.
23 தமஸ்குவைப் பற்றியது: “ஆமாத்தும், அர்பாத்தும், கெட்ட செய்தியைக் கேட்டதினால் மனமுடைந்து போயின. அவர்கள் மனந்தளர்ந்து, அமைதியற்ற கடலைப்போல் குழப்பமடைந்து இருக்கிறார்கள்.
24 தமஸ்கு தளர்ந்துவிட்டது. அது தப்பி ஓடுவதற்குத் திரும்பி விட்டது. திகில் அதைப்பற்றிப் பிடித்துக்கொண்டது. பிரசவிக்கும் பெண்ணின் வேதனையைப்போன்ற வேதனையும், துக்கமும் அதை ஆட்கொண்டன.
25 புகழ்ப்பெற்ற பட்டணம் கைவிடப்படாமல் இருப்பதேன்? நான் மகிழ்ச்சிகொள்ளும் நகரம் ஏன் கைவிடப்படாமல் இருக்கிறது.
26 நிச்சயமாக அதன் வாலிபர்கள் தெருக்களில் விழுவார்கள். அந்நாளில் எல்லாப் போர்வீரர்களும் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
27 நான் தமஸ்குவின் மதில்களுக்கு நெருப்பு வைப்பேன். அது பெனாதாத்தின் கோட்டைகளை எரிக்கும்.”
28 பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தாக்கிய கேதாரையும், காத்சோர் அரசுகளையும் பற்றியது: யெகோவா கூறுவது இதுவே: “நீ எழுந்து கேதாரைத் தாக்கி கிழக்கிலுள்ள மக்களை அழித்துவிடு.
29 அவர்களுடைய கூடாரங்களும், அவர்களுடைய மந்தைகளும் எடுத்துச் செல்லப்படும்; அவர்களுடைய எல்லா பொருட்களுடனும் ஒட்டகங்களுடனும் அவர்களுடைய குடிமனைகள் எடுத்துச் செல்லப்படும். மனிதர் அவர்களைப் பார்த்து, ‘எல்லாப் பக்கங்களிலும் பயங்கரம்’ என்று சொல்லிக் கூக்குரலிடுவார்கள்.
30 “காத்சோரில் வாழ்பவர்களே நீங்கள் விரைவாகத் தப்பி ஓடுங்கள்; ஆழமான குகைகளிலே தங்குங்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார். ஏனெனில், “பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் உனக்கெதிராகச் சதித்திட்டமிட்டிருக்கிறான்; அவன் உனக்கெதிராகத் திட்டமிட்டு சூழ்ச்சி செய்திருக்கிறான்.
31 “தன்னம்பிக்கையுடன் சுகவாழ்வு வாழ்கிற நாட்டை எழுந்து தாக்கு” என்று யெகோவா அறிவிக்கிறார். “அது கதவோ, தாழ்ப்பாளோ இல்லாத ஒரு இனம். அதன் மக்கள் தனிமையாய் வாழ்கிறார்கள்.
32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளைப்பொருளாகும். அவர்களுடைய பெரும் மந்தைகளும் சூறைப்பொருளாகும். தூரமான இடங்களில் இருக்கிறவர்களை நான்கு திசைகளிலும் சிதறடித்து, ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் பேராபத்தைக் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
33 “காத்சோர், நரிகளுக்கு உறைவிடமாகி என்றைக்கும் பாழடைந்திருக்கும். ஒருவரும் அங்கு வாழமாட்டார்கள். ஒரு மனிதரும் அங்கு குடியிருக்கவுமாட்டார்கள்.”
34 யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், ஏலாமைக் குறித்து இறைவாக்கினன் எரேமியாவுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே:
35 சேனைகளின் யெகோவா கூறுவதாவது: “பாருங்கள், நான் ஏலாமின் வில்லை முறிப்பேன்; அவர்களின் பலத்தின் ஆதாரத்தையும் முறிப்பேன்.
36 நான் வானத்தில் நான்கு திசைகளிலிருந்தும், நான்கு காற்றுகளை ஏலாமுக்கு எதிராகக் கொண்டுவருவேன். நான் அவர்களை நான்கு திசைகளிலும் சிதறடிப்பேன். ஏலாம் மக்கள் நாடுகடத்தப்பட்டு போகாத ஒரு நாடும் இருக்கமாட்டாது.
37 தங்கள் உயிரை வாங்கத் தேடுகிற எதிரிகளுக்கு முன்பாக நான் ஏலாமை நொறுக்குவேன். என்னுடைய கடுங்கோபத்தினால் பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்வரை வாளுடன் அவர்களைப் பின்தொடர்வேன்.
38 நான் ஏலாமில் என்னுடைய அரியணையை அமைப்பேன்; அதன் அரசர்களையும், அதிகாரிகளையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
39 “ஆனாலும் வரும் நாட்களில், ஏலாமின் செல்வங்களை மீண்டும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
×

Alert

×