மோவாபைப் பற்றியது: இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “நேபோ நாட்டுக்கு ஐயோ கேடு! அது பாழாக்கப்படும். கீரியாத்தாயீம் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு கைப்பற்றப்படும். அதன் பலத்த அரண் அவமதிக்கப்பட்டு தகர்க்கப்படும்.
மோவாப் இனி ஒருபோதும் புகழப்படமாட்டாது; அதனுடைய அழிவுக்காக, எஸ்போனில் உள்ள மனிதர் சதித்திட்டம் போடுவார்கள்: ‘வாருங்கள் நாம் அந்த நாட்டிற்கு ஒரு முடிவை உண்டாக்குவோம்.’ மத்மேனே பட்டணமே, நீயும் அழிக்கப்படுவாய்; வாள் உன்னைப் பின்தொடரும்.
லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில் மனங்கசந்து அழுதுகொண்டே போகிறார்கள். ஒரொனாயீமுக்கு இறங்கிப் போகும் வீதியில் அழிவின் நிமித்தம் அழுகுரல் கேட்கப்படுகிறது.
மோவாபே நீ உன் சொந்தத் திறமையிலும், செல்வத்திலும் நம்பிக்கை வைத்திருப்பதினால், நீயும் சிறைப்பிடிக்கப்படுவாய். உன் தெய்வமான கேமோஷ் அதன் பூசாரிகளுடனும், அலுவலர்களுடனும் நாடுகடத்தப்படும்.
“மோவாப் தன் வாலிப காலத்திலிருந்து ஆறுதலாய் இருக்கிறாள். ஒரு பாத்திரத்திலிருந்து மற்றொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல், மண்டி கலக்காமல் இருக்கும் திராட்சரசத்தைப்போல் இருக்கிறாள். அவள் நாடுகடத்தப்பட்டுப் போகவில்லை. ஆகையால் அவளது சுவை அப்படியே இருந்தது. அவளுடைய வாசனையும் மாறுபடவில்லை.
ஆனால், நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது ஜாடிகளிலிருந்து ஊற்றும் மனிதர்களை அனுப்புவேன். அவர்கள் அவளை வெளியே ஊற்றுவார்கள். அவளது ஜாடிகள் வெறுமையாக்கப்படும். அவளுடைய பாத்திரங்களும் உடைத்துப் போடப்படும்.
மோவாப் அழிக்கப்பட்டு, அவளுடைய பட்டணங்கள் தாக்கப்படும். அங்குள்ள திறமைமிக்க வாலிபர் கொலைசெய்யப்படுவார்கள்” என்று, சேனைகளின் யெகோவா என்னும் பெயருடைய அரசர் அறிவிக்கிறார்.
அவளைச்சுற்றி வசிப்பவர்களும், அவளின் புகழை அறிந்தவர்களுமான நீங்கள் அவளுக்காக அழுது புலம்புங்கள். ‘வலிமைமிக்க செங்கோல் எப்படி முறிந்தது, மகிமையான கோலும் எப்படி முறிந்தது’ என்று சொல்லி அழுங்கள்.
“தீபோன் மகளின் குடிகளே! நீங்கள் உங்கள் மேன்மையிலிருந்து கீழிறங்கி வறண்ட நிலத்தில் உட்காருங்கள். ஏனெனில் மோவாபை அழிப்பவன் உங்களுக்கெதிராய் வந்து உங்கள் அரணுள்ள பட்டணங்களை அழித்துப் போடுவான்.
மோவாபே! இஸ்ரயேல் உனது கேலிப்பொருளாக இருக்கவில்லையோ? நீ அவளைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இகழ்ச்சியுடன் உன் தலையை அசைக்கிறாயே; அவள் என்ன கள்ளர்களோடுகூட பிடிக்கப்பட்டவளோ!
சிப்மா நாட்டிலுள்ள திராட்சைக் கொடிகளே! யாசேர் அழுவதைப்போல் நான் உங்களுக்காக அழுவேன். உங்கள் கிளைகள் கடல்வரை பரவி யாசேர் வரையும் எட்டியுள்ளன. உன்னுடைய பழுத்த பழங்கள் மீதும், திராட்சைப்பழ அறுப்பின் மீதும் அழிக்கிறவன் வந்துவிட்டான்.
மோவாப் நாட்டின் வயல்களிலிருந்தும், பழத்தோட்டங்களிலிருந்தும், மகிழ்ச்சியும் களிப்பும் நீங்கிப்போயின. ஆலைகளிலிருந்து திராட்சரசம் வழிந்தோடுவதையும், நான் நிறுத்திவிட்டேன். மகிழ்ச்சியின் ஆரவாரத்தோடு அவைகளை மிதிப்பார் யாருமில்லை. சத்தங்கள் அங்கு இருந்தாலும், அவை மகிழ்ச்சியின் சத்தங்கள் அல்ல.
“ஆகவே என் இருதயம் மோவாபிற்காக புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. கிர் ஹெரெஸ் மனிதருக்காக அது ஒரு புல்லாங்குழலைப்போல் புலம்புகிறது. ஏனெனில் அவர்கள் சேமித்த செல்வம் போய்விட்டது.
மோவாபிலுள்ள எல்லா வீட்டுக் கூரைகளின்மேலும், பொதுச் சதுக்கங்களிலும் துக்கங்கொண்டாடுதலே அல்லாமல் வேறொன்றுமில்லை. ஏனெனில் நான் மோவாபை ஒருவரும் விரும்பாத ஜாடியைப்போல் உடைத்துப் போட்டேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“மோவாப் எவ்வளவாய் சிதறடிக்கப்பட்டிருக்கிறாள்! மக்கள் எவ்வளவாய் புலம்புகிறார்கள்! மோவாப் எவ்வளவாய் வெட்கத்தினால் தலைகுனிந்து நிற்கிறாள்! மோவாப் ஒரு கேலிப்பொருளானாள்; அவள் தன்னைச் சுற்றியுள்ள யாவருக்கும் திகிலூட்டும் பொருளானாள்.”
கீரியோத் கைப்பற்றப்பட்டு அதன் பலத்த அரண்களும் பிடிக்கப்படும். அந்நாளில் மோவாபின் போர் வீரர்களின் இருதயங்கள் பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப் போலிருக்கும்.
“பயங்கரத்துக்குத் தப்பி ஓடுகிறவன், படுகுழிக்குள் விழுவான். குழியிலிருந்து வெளியே ஏறிவருகிறவன், கண்ணியில் அகப்படுவான். ஏனெனில் மோவாபுக்குரிய தண்டனையின் வருடத்தை நான் அதன்மீது கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
மோவாபே, உனக்கு ஐயோ கேடு! கேமோஷ் [*கேமோஷ் என்றால் மோவாபியர் வணங்கும் தெய்வம்] தெய்வத்தின் மக்கள் அழிக்கப்பட்டிருக்கிறார்கள்; உன் மகன்கள் நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள், உன் மகள்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
“இருந்தும் பின்வரும் நாட்களில் நான் மோவாபின் செல்வங்களைத் திரும்பவும் கொடுப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். மோவாபின் நியாயத்தீர்ப்பு இத்துடன் முடிகிறது.