ஏழாம் மாதத்தில் எலிசாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனும், அரச குலத்தைச் சேர்ந்தவனும், அரசனின் அதிகாரிகளில் ஒருவனுமாயிருந்த இஸ்மயேல், பத்து மனிதரோடு மிஸ்பாவிலிருந்த அகீக்காமின் மகன் கெதலியாவிடம் வந்தான். அங்கே அவர்கள் எல்லோரும் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது நெத்தனியாவின் மகன் இஸ்மயேலும், அவனோடிருந்த பத்து மனிதரும் எழும்பி, சாப்பானின் மகனான அகீக்காமின் மகன் கெதலியாவை வாளால் வெட்டிக்கொன்றார்கள். கொல்லப்பட்டவன் பாபிலோன் அரசனால் அந்த நாட்டின் தலைவனாக நியமிக்கப்பட்டவன்.
சீலோ, சீகேம், சமாரியா ஆகிய இடங்களிலிருந்து, எண்பது மனிதர் தங்களுடைய தாடிகளைச் சிரைத்து, கிழிந்த உடைகளை அணிந்து தங்கள் உடல்களைக் கீறிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் தங்கள் கைகளில் தானிய பலிகளையும், நறுமண தூபங்களையும் எடுத்துக்கொண்டு யெகோவாவின் ஆலயத்திற்குப் போவதற்காக வந்தார்கள்.
ஆனால் அவர்களில் பத்துபேர் இஸ்மயேலை நோக்கி, “நீர் எங்களைக் கொல்லவேண்டாம். நாங்கள் கோதுமையும், வாற்கோதுமையும், எண்ணெயும், தேனும் ஒரு வயலில் மறைத்து வைத்திருக்கிறோம்” என்றார்கள். எனவே அவன், இவர்களை மற்றவர்களுடன் சேர்த்து கொலைசெய்யாமல் விட்டுவிட்டான்.
இஸ்மயேல் தான் கொலைசெய்த மனிதருடைய சடலங்களையும் கெதலியாவையும் ஒரு குழிக்குள் எறிந்தான். அந்த குழியானது இஸ்ரயேல் அரசனான பாஷாவுக்கு விரோதமாக, ஆசா அரசனால் தனது பாதுகாப்புக்காக வெட்டப்பட்டவற்றில் ஒன்றாகும். அதை நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் சடலங்களினால் நிரப்பினான்.
மிஸ்பாவில் மீதியாயிருந்த எல்லா மக்களையும் இஸ்மயேல் சிறைப்பிடித்தான். அவர்கள் மெய்க்காவலர் தளபதியான நேபுசராதானால், அகீக்காமின் மகனான கெதலியாவின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட அரசனின் மகள்களும், அங்கு விடப்பட்டிருந்த மற்றவர்களுமே. அவ்வாறு நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் அவர்களைச் சிறைப்பிடித்துக்கொண்டு, அம்மோனியருடன் சேர்ந்துகொள்வதற்காகப் போனான்.
கரேயாவின் மகனான யோகனானும், அவனுடன் இருந்த எல்லா இராணுவத் தளபதிகளும், நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் செய்த எல்லாக் கொடுமைகளையும் குறித்துக் கேள்விப்பட்டார்கள்.
அப்பொழுது அவர்கள் தங்கள் மனிதர் அனைவரையும் கூட்டிக்கொண்டு, நெத்தனியாவின் மகன் இஸ்மயேலுடன் சண்டையிடுவதற்காகச் சென்றார்கள். அவர்கள் கிபியோனிலிருந்த பெரிய குளத்தண்டையில் நின்ற அவனை நெருங்கினார்கள்.
{#1எகிப்திற்கு ஓடிப்போகுதல் } அப்பொழுது மிஸ்பாவிலிருந்து இஸ்மயேல் கொண்டுபோயிருந்தவர்களை, கரேயாவின் மகன் யோகனானும், அவனோடிருந்த இராணுவ அதிகாரிகள் அனைவரும் அழைத்துக்கொண்டு போனார்கள். இவர்கள் யோகனானினால் கிபியோனிலிருந்து மீட்கப்பட்ட, படைவீரர், பெண்கள், பிள்ளைகள், அரச அதிகாரிகளுமாய் இருந்தார்கள். இது அகீக்காமின் மகன் கெதலியாவை, நெத்தனியாவின் மகன் இஸ்மயேல் கொலைசெய்தபின் நடந்தது.
பாபிலோனியருக்கு தப்புவதற்காகவே இவர்கள் எகிப்திற்குப் போகப் புறப்பட்டார்கள். நெத்தனியாவின் மகன் இஸ்மயேல், பாபிலோன் அரசன் நாட்டுக்கு ஆளுநனாக நியமித்த அகீக்காமின் மகன் கெதலியாவைக் கொன்றதினால், அவர்கள் பாபிலோனியருக்குப் பயந்தார்கள்.