English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Jeremiah Chapters

Jeremiah 4 Verses

1 இஸ்ரயேலே, “நீ திரும்பிவர விரும்பினால் என்னிடம் திரும்பி வா” என்று யெகோவா அறிவிக்கிறார். “நீ என் பார்வையிலிருந்து உன் அருவருப்பான விக்கிரகங்களை அகற்றி, இனி ஒருபோதும் வழிவிலகாதிருந்து,
2 உண்மையும், நீதியும், நேர்மையுமான வழியில் நடந்து ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று நீ ஆணையிடுவாயானால், எல்லா நாட்டினரும் அவரால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவரில் அவர்கள் மகிழ்ச்சிகொள்வார்கள்” என்கிறார்.
3 யூதாவின் மனிதருக்கும், எருசலேமின் மனிதருக்கும் யெகோவா கூறுவது இதுவே: “உழப்படாத உங்கள் நிலத்தைப் பண்படுத்துங்கள். முட்களுக்குள்ளே விதைக்காதிருங்கள்.
4 யூதாவின் மனிதரே, எருசலேமின் மக்களே, யெகோவாவுக்கென்று உங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள், உங்கள் இருதயங்களை விருத்தசேதனம் பண்ணுங்கள். இல்லையெனில் நீங்கள் செய்திருக்கிற தீமையினால், என்னுடைய கோபம் வெளிப்பட்டு, அணைப்பாரில்லாத நெருப்பைப்போல் எரியும்.
5 {#1வடக்கிலிருந்து வரும் பேரழிவு } “யூதாவில் அறிவித்து, எருசலேமில் பிரசித்தப்படுத்திச் சொல்லுங்கள்: ‘நாடு முழுவதும் எக்காளம் ஊதுங்கள்!’ சத்தமிட்டு: ‘ஒன்றுகூடுங்கள்! பாதுகாப்பான பட்டணங்களுக்கு ஓடுவோம்!’ என்று சொல்லுங்கள்.
6 சீயோனுக்குப் போவதற்குக் கொடியேற்றுங்கள்! பாதுகாப்புக்காக தாமதியாது ஓடுங்கள்! ஏனென்றால் நான் வடக்கிலிருந்து பேராபத்தையும், மிகப்பெரிய அழிவையும் கொண்டுவருகிறேன்.”
7 ஒரு சிங்கம் தன் குகையிலிருந்து வெளியே வந்திருக்கிறது. நாடுகளை அழிக்கிறவன் புறப்பட்டு விட்டான். உன்னுடைய நாட்டைப் பாழாக்குவதற்காக, தனது இருப்பிடத்தைவிட்டுப் புறப்பட்டு விட்டான். உன்னுடைய பட்டணங்கள் குடியிருப்பவர்கள் இன்றி பாழாய்க்கிடக்கும்.
8 எனவே துக்கவுடை உடுத்துங்கள். அழுது புலம்புங்கள். ஏனெனில் யெகோவாவின் பயங்கர கோபம் எங்களைவிட்டு இன்னும் திரும்பாமல் இருக்கிறதே.
9 அந்த நாளில், “அரசனும், அதிகாரிகளும் மனம் சோர்ந்துபோவார்கள். ஆசாரியர்கள் திகிலடைவார்கள். இறைவாக்கினர் அதிர்ச்சியடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
10 அப்பொழுது நான், “ஆண்டவராகிய யெகோவாவே! வாள் எங்கள் தொண்டையில் வைக்கப்பட்டிருக்கும்போது, ‘உங்களுக்குச் சமாதானம் இருக்கும்’ என்று கூறி, இந்த மக்களையும், எருசலேமையும் நீர் எவ்வளவாய் ஏமாற்றிவிட்டீர்” என்று கூறினேன்.
11 அந்த வேளையில் இந்த மக்களுக்கும், எருசலேமுக்கும் சொல்லப்படுவதாவது, “பாலைவனத்திலுள்ள வறண்ட மேடுகளிலிருந்து ஒரு எரிக்கும் காற்று என் மக்களை நோக்கி வீசுகிறது. ஆனால் அது தூற்றுவதற்கோ அல்லது சுத்தப்படுத்துவதற்கோ ஏற்றதல்ல.
12 அதையும்விட, மிகவும் பலமான ஒரு காற்றாக அது என்னிடமிருந்து வருகிறது. இப்பொழுது நான் அவர்களுக்கு விரோதமாக என் தீர்ப்பை அறிவிக்கிறேன்.”
13 பார்! அவன் மேகங்களைப்போல் முன்னேறி வருகிறான். சுழல் காற்றைப்போன்ற இரதங்களுடனும், கழுகுகளைப் பார்க்கிலும் வேகமான குதிரைகளுடனும் அவன் வருகிறான். எங்களுக்கு ஐயோ கேடு! நாங்கள் அழிந்தோம்!
14 எருசலேமே, உன் இருதயத்திலிருந்து தீமையைக் கழுவி இரட்சிப்பை பெற்றுக்கொள். தீமையான சிந்தனைகளை எவ்வளவு காலத்திற்குத் தேக்கி வைப்பாய்?
15 தாண் பட்டணத்திலிருந்து ஒரு குரல் அறிவிக்கிறது. எப்பிராயீமின் குன்றுகளிலிருந்து அழிவு வரும் என்று அது பிரசித்தப்படுத்துகிறது.
16 “நாடுகளுக்கு அதைச் சொல்லுங்கள். எருசலேமுக்கு அதைப் பிரசித்தப்படுத்துங்கள். ‘யூதாவின் பட்டணங்களுக்கு எதிராக போர் முழக்கத்தை எழுப்பிக்கொண்டு, முற்றுகையிடும் இராணுவம் ஒன்று தூரமான ஒரு நாட்டிலிருந்து வருகிறது.
17 எருசலேம் எனக்கெதிராகக் கலகம் உண்டாக்கியபடியினால், ஒரு வயலைக் காவல்காத்து நிற்பதுபோல அந்த இராணுவவீரர் எருசலேமைச் சூழ்ந்துகொள்கிறார்கள்,’ ” என்று யெகோவா சொல்கிறார்.
18 “உன்னுடைய நடத்தையும் செயல்களுமே உன்மீது இவைகளைக் கொண்டுவந்திருக்கின்றன. இதுதான் உன்னுடைய தண்டனை. அது எவ்வளவு கசப்பானது! அது இருதயத்தை எவ்வளவாய் குத்துகிறது!”
19 ஆ, நான் வேதனைப்படுகிறேன், நான் வேதனைப்படுகிறேன்! என் வலியில் துடிக்கிறேன். என் இருதயம் தாங்கமுடியாத துயரமடைகிறது, என் இருதயம் எனக்குள் படபடக்கிறது, என்னால் அமைதியாயிருக்க முடியாது. ஏனெனில் நான் எக்காள சத்தத்தைக் கேட்டேன்; போர் முழக்கத்தையும் கேட்டேன்.
20 பேரழிவின் மேல் பேரழிவு தொடர்கிறது; நாடு முழுவதுமே அழிந்து கிடக்கிறது. நொடிப்பொழுதில் என் கூடாரங்கள் அழிந்தன. கணப்பொழுதில் என் புகலிடம் அழிந்தது.
21 நான் எவ்வளவு காலத்திற்கு போர்க் கொடியைப் பார்த்துக்கொண்டும், போரின் எக்காள தொனியைக் கேட்டுக்கொண்டும் இருக்கவேண்டும்?
22 “என் மக்கள் மூடர்கள், அவர்கள் என்னை அறியவில்லை. அவர்கள் உணர்வற்ற பிள்ளைகள்; அவர்களுக்கு விளங்கிக்கொள்ளும் ஆற்றல் இல்லை. அவர்கள் தீமை செய்வதில் திறமைசாலிகள்; எப்படி நன்மை செய்வது என்று அவர்கள் அறியமாட்டார்கள்.”
23 நான் உலகத்தை உற்றுப் பார்த்தேன். அது உருவமற்று வெறுமையாயிருந்தது. வானங்களைப் பார்த்தேன். அவைகளின் வெளிச்சம் போய்விட்டது.
24 மலைகளை உற்றுப் பார்த்தேன். அவை நடுங்கிக் கொண்டிருந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்துகொண்டிருந்தன.
25 நான் உற்றுப் பார்த்தேன். அங்கு மக்கள் இருக்கவில்லை. ஆகாயத்துப் பறவைகளெல்லாம் பறந்துவிட்டன.
26 நான் உற்றுப் பார்த்தேன். செழிப்பான நாடு பாலைவனமாகிக் கிடந்தது. யெகோவாவுக்கு முன்பாக அவருடைய கடுங்கோபத்தினால் அதன் பட்டணங்கள் யாவும் பாழாகிக்கிடந்தன.
27 யெகோவா சொல்வது இதுவே: “நாடு முழுவதும் பாழாய்ப்போகும். ஆயினும் நான் அதை முற்றிலும் அழிக்கமாட்டேன்.
28 ஆகையால் பூமி துக்கங்கொள்ளும். மேலேயுள்ள வானங்கள் இருளடையும். ஏனெனில் நான் சொல்லிவிட்டேன், நான் மனம் மாறமாட்டேன்; நான் தீர்மானித்து விட்டேன், அதைச் செய்யாமல் விடவுமாட்டேன்.”
29 குதிரைவீரருடைய, வில் வீரருடைய சத்தம் கேட்டு ஒவ்வொரு பட்டணத்திலுள்ளவர்களும் தப்பி ஓடுகிறார்கள். சிலர் காடுகளுக்குள் ஓடுகிறார்கள்; சிலர் பாறைகளுக்கிடையே ஏறுகிறார்கள். எல்லாப் பட்டணங்களும் கைவிடப்பட்ட நிலையிலுள்ளன; ஒருவரும் அங்கு வசிக்கவில்லை.
30 பாழாய்ப் போனவளே! நீ என்ன செய்கிறாய்? இரத்தாம்பர உடையை அணிந்து தங்க ஆபரணங்களால் உன்னை அலங்கரிப்பது ஏன்? நீ உன் கண்களுக்கு மையிடுவது ஏன்? நீ வீணாகவே அலங்கரிக்கிறாய்; உன் காதலர் உன்னை வெறுத்து உன் உயிரை வாங்கத் தேடுகிறார்கள்.
31 பிரசவ வேதனைப்படும் ஒரு பெண்ணின் அழுகுரலைப் போலவும், தன் முதற்பிள்ளையைப் பெற்றெடுக்கும் ஒரு பெண்ணின் வேதனைக் குரலைப் போலவும் ஒரு அழுகுரலைக் கேட்கிறேன். இளைத்து மூச்சு வாங்குகிற சீயோன் மகளின் அழுகுரலே அது. அவள் தன் கைகளை நீட்டி, “ஐயோ நான் மயக்கமடைகிறேன்; என் உயிர் கொலைகாரரிடம் கொடுக்கப்பட்டு விட்டது” என்கிறாள்.
×

Alert

×