மக்கள் எல்லோருக்கும் எரேமியா சொல்வதை மாத்தானின் மகன் செபதியா, பஸ்கூரின் மகன் கெதலியா, செலேமியாவின் மகன் யூகால், மல்கியாவின் மகன் பஸ்கூர் ஆகியோர் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவன் சொன்னது என்னவென்றால்,
“யெகோவா கூறுவது இதுவே: ‘இந்தப் பட்டணத்தில் தங்கியிருக்கிற எவனும் வாளாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான். ஆனால் பாபிலோனியரிடம் போகிற எவனும் வாழ்வான். அவன் உயிர் தப்பி வாழ்வான்.’
அப்பொழுது அதிகாரிகள் அரசனிடம், “இந்த மனிதன் சாகவேண்டும். இவன் பட்டணத்தில் மீதியாயிருக்கும் போர்வீரரையும், எல்லா மக்களையும் தான் சொல்கிற வார்த்தைகளால் அதைரியப்படுத்துகிறான். இந்த மனிதன் மக்களின் நன்மையை அல்ல, அவர்களின் அழிவையே நாடுகிறான்” என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் எரேமியாவைக் காவற்கூட முற்றத்திலிருந்த அரசனின் மகன் மல்கியாவின் குழிக்குள் போட்டார்கள். அவர்கள் எரேமியாவை கயிறுகளினால் கட்டி அதற்குள் இறக்கினார்கள். அதில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எரேமியா சேற்றிற்குள்ளே புதைந்து கொண்டிருந்தான்.
அரச அரண்மனையில் இருந்த ஒரு எத்தியோப்பிய அதிகாரியான எபெத்மெலேக் எரேமியா குழிக்குள் போடப்பட்டதைக் கேள்விப்பட்டான். அரசன் பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தபோது,
“அரசனே, தலைவனே இறைவாக்கினன் எரேமியாவை இந்த அதிகாரிகள் தங்கள் எல்லா செயல்களினாலும் கொடுமையாய் நடத்தியிருக்கிறார்கள். அவனை அவர்கள் ஒரு குழிக்குள் எறிந்துவிட்டார்கள். பட்டணத்தில் அப்பம் இல்லாமல் போகையில் பட்டினியால் அவன் அங்கே சாவானே” என்றான்.
அதற்கு அரசன் எத்தியோப்பியனான எபெத்மெலேக்கிடம், “உன்னோடு முப்பது மனிதரைக் கூட்டிக்கொண்டுபோய் இறைவாக்கினன் எரேமியா இறப்பதற்குமுன் அவனை குழியிலிருந்து வெளியே தூக்கியெடு” என்று கட்டளையிட்டான்.
அப்படியே எபெத்மெலேக் அந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு அரண்மனை பொக்கிஷ அறையின் கீழிருந்த அந்த இடத்திற்குப் போனான். அங்கிருந்து பழைய சீலைகளையும், பழைய உடைகளையும் எடுத்து அவைகளைக் கயிற்றின் வழியாய் எரேமியா இருந்த குழிக்குள் இறக்கினான்.
எத்தியோப்பியனான எபெத்மெலேக், எரேமியாவிடம், “நீ இந்த பழைய உடைகளையும், பழைய துணிகளையும் உனது அக்குள்களில் கயிறு வெட்டிவிடாதபடி வைத்துக்கொள்” என்று சொன்னான். எரேமியா அவ்வாறே செய்தான்.
பின்பு சிதேக்கியா அரசன், இறைவாக்கினன் எரேமியாவை யெகோவாவினுடைய ஆலயத்தின் மூன்றாம் வாசலுக்குக் கொண்டுவரச் செய்தான். அரசன் அவனிடம், “நான் உன்னிடம் ஒரு காரியத்தைக் கேட்கப்போகிறேன். எதையும் மறைக்காமல் எனக்குச் சொல்” என்றான்.
அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “நான் அவ்வாறே பதில் சொன்னால் என்னைக் கொலைசெய்வீர் அல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும் நீர் எனக்குச் செவிகொடுக்கமாட்டீரே” என்றான்.
ஆனால் சிதேக்கியா அரசனோ, எரேமியாவிடம் இரகசியமாக ஆணையிட்டு, “நமக்கு சுவாசத்தைக் கொடுத்திருக்கும் யெகோவா இருப்பது நிச்சயம் என்றால், நான் உன்னைக் கொல்வதோ, உன் உயிரை வாங்கத் தேடுகிறவர்களிடம் உன்னை ஒப்புக்கொடுப்பதோ இல்லை என்பதும் நிச்சயம்” என்று சத்தியம் செய்தான்.
அதற்கு எரேமியா சிதேக்கியாவிடம், “இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனுடைய அதிகாரிகளிடம் நீ சரணடைந்தால், நீ உன் உயிரைக் காத்துக்கொள்வாய். இப்பட்டணமும் எரித்து அழிக்கப்படமாட்டாது. உன் குடும்பமும் உயிர்வாழும்.
ஆனால் நீ பாபிலோன் அரசனின் அதிகாரிகளிடம் சரணடையாவிட்டால், இப்பட்டணம் பாபிலோனியரின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். அவர்கள் இப்பட்டணத்தைச் சுட்டெரிப்பார்கள். நீயும் அவர்களுடைய கையிலிருந்து தப்பமாட்டாய்’ என்றான்.”
அதற்கு சிதேக்கியா அரசன் எரேமியாவிடம், “நான் பாபிலோனியரிடம் முன்பே போய்ச் சேர்ந்த யூதருக்குப் பயப்படுகிறேன். ஏனெனில் பாபிலோனியர் என்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்கள் என்னைத் துன்புறுத்தக்கூடும்” என்று சொன்னான்.
அதற்கு எரேமியாவோ, “அவர்கள் உன்னை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள். நான் உனக்குச் சொல்வதின்படி செய்து யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திரு. அப்பொழுது உனக்கு எல்லாம் நன்மையாயிருக்கும். நீயும் உயிருடன் தப்புவாய்.
அதிகாரிகள் நான் உன்னுடன் பேசியதைக் கேள்விப்பட்டு உன்னிடம் வந்து, ‘அரசனுக்கு நீ கூறியது என்ன? அரசன் உனக்குக் கூறியது என்ன? எங்களுக்கு அதை மறைக்காதே, மறைத்தால் உன்னை நாங்கள் கொல்வோம்’ என்று சொன்னால்,
அதுபோலவே அதிகாரிகளெல்லாரும் எரேமியாவிடம் வந்து, கேள்வி கேட்டார்கள்; அரசன் தனக்குக் கட்டளையிட்ட இந்த வார்த்தைகளுக்கேற்ப அவன் பதில் கூறினான். அரசனுடன் எரேமியா பேசியதை அவர்கள் ஒருவரும் அறிந்திராதபடியால், அவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்கள்.