நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான்.
இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது.
எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்:
நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள்.
யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன்.
உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்.
நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
ஆனால் யெகோவா கூறுவதாவது: தாவீதின் அரியணையிலிருக்கிற அரசனைக் குறித்தும், உங்களுடன் நாடுகடத்தப்படாமல் இந்த பட்டணத்திலேயே தங்கியிருக்கும் உங்கள் நாட்டினரான எல்லா மக்களைக் குறித்தும்
சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “ஆம், நான் வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிப்போன கெட்ட அத்திப்பழங்களைப் போலவே அவர்களை ஆக்குவேன்.
நான் அவர்களைப் பிடிப்பதற்கு வாளுடனும், பஞ்சத்துடனும், கொள்ளைநோயுடனும் பின்தொடர்வேன். அவர்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாகும்படி செய்வேன். மேலும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா நாடுகளின் மத்தியிலும் அவர்களை சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், பழிக்கும், நிந்தைக்கும் உள்ளாக்குவேன்.
ஏனெனில் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என் ஊழியக்காரர்களான இறைவாக்கினர்மூலம் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களாகிய நீங்களுங்கூட, அதற்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
கோலாயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசெயாவின் மகன் சிதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “இவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் அவர்களைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
ஏனெனில் இந்த மனிதர் இஸ்ரயேலில் மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; தங்கள் அயலவரின் மனைவியருடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் செய்யும்படி சொல்லாதவற்றை, என் பெயரினால் பொய்களாகப் பேசியிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். அதற்கு நானே சாட்சி” என்று யெகோவா அறிவிக்கிறார்.
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: நீ எருசலேமிலுள்ள எல்லா மக்களுக்கும் உன் பெயரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறாய். ஆசாரியன் மாசெயாவின் மகனுமாகிய செப்பனியாவுக்கும், மற்ற எல்லா ஆசாரியருக்குங்கூட அவைகளை அனுப்பியிருக்கிறாய். நீ செப்பனியாவுக்கு எழுதியிருந்ததாவது:
‘யெகோவாவின் ஆலயத்தில் பொறுப்பாயிருக்கும்படி, யோய்தாவுக்குப் பதிலாக யெகோவா உன்னை ஆசாரியனாக நியமித்திருக்கிறார்; இறைவாக்கினனைப்போல் நடிக்கும் எந்தவொரு பைத்தியக்காரனையும் நீ கால் விலங்குகளிலும், கழுத்து விலங்குகளிலும் போடவேண்டுமே.
இந்த எரேமியாவோ பாபிலோனில் இருக்கும் நமக்கு, உங்கள் சிறையிருப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். அதுவரை வீடுகளைக் கட்டிக் குடியிருங்கள். தோட்டங்களை நாட்டி அதன் பலனைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறானே” என்பதே அந்தக் கடிதம்.
“நாடுகடத்தப்பட்ட யாவருக்கும் நீ இந்தச் செய்தியை அனுப்பு. நெகெலாமியனான செமாயாவைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: நான் செமாயாவை அனுப்பாதபோதும் அவன் இறைவாக்கு கூறி நீங்கள் பொய்யை நம்பும்படி செய்திருக்கிறான்.
ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார்.