English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Jeremiah Chapters

Jeremiah 25 Verses

1 யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீம் அரசாண்ட நான்காம் வருடத்தில், யூதா மக்கள் எல்லோரையும் குறித்து எரேமியாவுக்கு வார்த்தை வந்தது. இது பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் முதலாம் வருடமாகும்.
2 இறைவாக்கினன் எரேமியா, எல்லா யூதா மக்களுக்கும், எருசலேமில் வாழும் எல்லோருக்கும் சொன்னதாவது:
3 யூதாவின் அரசன், ஆமோனின் மகன் யோசியா அரசாண்ட பதிமூன்றாம் வருடத்திலிருந்து, இந்நாள்வரை இந்த இருபத்துமூன்று வருடங்களாக யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது. அதைக்குறித்து நான் மீண்டும், மீண்டும் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் அவற்றிக்குச் செவிகொடுக்கவில்லை.
4 மேலும் யெகோவா இறைவாக்கினர்களான எல்லா ஊழியக்காரரையும் மீண்டும், மீண்டும் உங்களிடம் அனுப்பியும், நீங்கள் செவிகொடுக்கவோ, கவனிக்கவோ இல்லை.
5 அவர்கள் உங்களிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீமையான வழியிலிருந்தும், தீமையான உங்கள் வழக்கங்களிலிருந்தும் திரும்புங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் முற்பிதாக்களுக்கு என்றென்றைக்குமென யெகோவா கொடுத்த நாட்டில் வாழலாம்.
6 நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பணிவிடை செய்யவோ, அவைகளை வணங்குவதற்காக அவைகளைப் பின்பற்றவோ வேண்டாம். உங்கள் கைகளினால் செய்தவற்றால் எனக்குக் கோபமூட்ட வேண்டாம். அப்பொழுது நான் உங்களுக்குத் தீமைசெய்யமாட்டேன்” என்று உங்களுக்குச் சொல்லியிருந்தார்கள்.
7 “ஆனால் நீங்களோ எனக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “உங்கள் கைகள் செய்தவற்றைக் கொண்டு எனக்குக் கோபமூட்டியிருக்கிறீர்கள். நீங்களே உங்கள்மேல் தீங்கைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்.”
8 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “என் வார்த்தைகளுக்கு நீங்கள் செவிகொடுக்காதபடியால்,
9 நான் வடக்கேயிருக்கும் எல்லா மக்கள் கூட்டங்களையும், என் பணியாளனாகிய பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரையும் வரவழைப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “அவர்களை இந்த நாட்டிற்கும், அதன் குடிகளுக்கும், அவர்களைச் சுற்றியுள்ள எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் விரோதமாகவே நான் கொண்டுவருவேன். நான் அவர்களை முழுவதும் அழித்து, அவர்களை வெறுப்புக்குரியவர்களாகவும், பழிப்புக்குரியவர்களாகவும், நித்திய அழிவுக்குரியவர்களாகவும் ஆக்குவேன்.
10 நான் அவர்களிடமிருந்து ஆனந்த சத்தத்தையும், மகிழ்ச்சியையும் நீக்கிவிடுவேன். மணமகனின் குரலையும், மணமகளின் குரலையும் நீக்கிவிடுவேன். இயந்திரங்களின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் எடுத்துப்போடுவேன்.
11 இந்த நாடு முழுவதும் கைவிடப்பட்ட பாழ்நிலமாகும். இந்த நாடுகள் பாபிலோன் அரசனுக்கு எழுபது வருடங்களுக்குப் பணிசெய்வார்கள்.
12 “ஆனால் எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்னரோ, பாபிலோன் அரசனையும், அவர்களுடைய நாட்டையும், கல்தேயருடைய தேசத்தையும் அவர்களுடைய குற்றத்திற்காகத் தண்டிப்பேன். அவர்களுடைய நாட்டையும் என்றென்றும் பாழாக்குவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
13 “அந்த நாட்டிற்கு எதிராய் நான் பேசிய எல்லாவற்றையும் அதன்மேல் கொண்டுவருவேன். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள யாவற்றையும், எல்லா நாடுகளுக்கும் விரோதமாக எரேமியாவினால் இறைவாக்காகக் கூறப்பட்டவற்றையும் கொண்டுவருவேன்.
14 அவர்களும் அநேக நாட்டினராலும், பெரிய அரசர்களாலும் அடிமைகளாக்கப்படுவார்கள். இவ்வாறு அவர்களின் செயல்களுக்கு ஏற்றதாகவும், அவர்களின் கைகளின் வேலைக்கு ஏற்றதாகவும் நான் அவர்களுக்குப் பதில் செய்வேன்.”
15 மேலும் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “என்னுடைய கடுங்கோபமாகிய திராட்சரசம் நிரம்பிய பாத்திரத்தை, நீ என் கையிலிருந்து எடுத்து, நான் உன்னை அனுப்பும் இடங்களிலுள்ள எல்லா நாடுகளையும் அதைக் குடிக்கும்படி செய்.
16 அதை அவர்கள் குடிக்கும்போது, நான் அவர்கள் மத்தியில் அனுப்பும் வாளின் நிமித்தம் அவர்கள் தள்ளாடி பைத்தியமாய்ப் போவார்கள்” என்றார்.
17 அப்பொழுது யெகோவாவின் கையிலிருந்து நான் அந்தப் பாத்திரத்தை எடுத்து, யெகோவா என்னை அனுப்பிய எல்லா இடங்களிலுள்ள நாடுகளையும் அதைக் குடிக்கும்படி செய்தேன்.
18 எருசலேமுக்கும், யூதாவின் பட்டணங்களுக்கும், அதன் அரசர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன். இன்று அவர்கள் இருக்கிறது போலவே அவர்களைப் பாழாக்கவும், வெறுப்புக்கும், பழிப்புக்கும், சாபத்திற்கும் உள்ளாக்கவுமே இப்படிக் குடிக்கக் கொடுத்தேன்.
19 எகிப்தின் அரசன் பார்வோனையும், அவனுடைய உதவியாளரையும், அவனுடைய அதிகாரிகளையும், அவனுடைய எல்லா மக்களையும்
20 அங்குள்ள எல்லா அந்நிய மக்களையும், ஊத்ஸ் நாட்டின் எல்லா அரசர்களையும், அஸ்கலோன், காசா, எக்ரோன் ஆகிய பெலிஸ்திய அரசர்கள் அனைவரையும் அஸ்தோத்தில் மீந்திருப்பவர்களையும் குடிக்கப்பண்ணினேன்.
21 மேலும் ஏதோம், மோவாப், அம்மோன் ஆகியோரையும்,
22 தீருவிலும் சீதோனிலும் இருக்கும் எல்லா அரசர்களையும் கடலுக்கு அப்பால் உள்ள கரையோர நாடுகளின் அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.
23 தேதானையும், தேமாவையும், பூஸையும் தூர இடங்களிலுள்ள எல்லோரையும்,
24 அரேபியா நாட்டு எல்லா அரசர்களையும், பாலைவனத்தில் வசிக்கும் அந்நிய நாட்டு மக்களின் எல்லா அரசர்களையும் குடிக்கப்பண்ணினேன்.
25 சிம்ரி, ஏலாம், மேதியா நாடுகளிலுள்ள அரசர்களையும்,
26 வடக்கிலும், அருகேயும், தூரமாயும் இருக்கும் எல்லா அரசர்களையும், பூமியிலுள்ள எல்லா அரசுகளையும் ஒன்றன்பின் ஒன்றாகக் குடிக்கப்பண்ணினேன். இவர்கள் எல்லோரும் குடித்த பின்பு, சேசாக்கு [*சேசாக்கு என்பது பாபிலோனின் இரகசியப் பெயர் ஆகும்.] அரசனும் குடிப்பான்.
27 “மேலும் அவர்களிடம், ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: குடியுங்கள், வெறித்து வாந்தி பண்ணுங்கள். நான் உங்களுக்குள் அனுப்பப்போகிற வாளின் நிமித்தம் எழும்பாதபடிக்கு விழுங்கள்.’
28 ஆனால், அவர்கள் உன் கையிலிருந்து பாத்திரத்தை எடுத்துக் குடிக்க மறுத்தால், நீ அவர்களிடம், ‘நீங்கள் அதைக் குடிக்கவே வேண்டும் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார் என்று சொல்.
29 ஏனெனில், பாருங்கள், என் பெயரைக்கொண்ட பட்டணத்தின்மேல் என் அழிவைக் கொண்டுவர ஆரம்பிக்கிறேன். நீங்கள் மாத்திரம் தண்டிக்கப்படாமல் விடப்படுவீர்களோ? நீங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டீர்கள். நான் பூமியில் வாழும் எல்லாக் குடிகளின்மேலும் வாளை வரப்பண்ணப் போகிறேன் என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்’ என்று சொல் என்றார்.
30 “இந்த வார்த்தைகளை எல்லாம் நீ அவர்களுக்கு விரோதமாக இறைவாக்காகச் சொல்: “ ‘உயரத்திலிருந்து யெகோவா சத்தமிட்டு, தமது பரிசுத்த இடத்திலிருந்து முழங்குவார். தன் நாட்டுக்கு எதிராகப் பலமாய் சத்தமிட்டு, திராட்சைப் பழங்களை மிதிக்கிறவர்களின் சத்தத்தைப்போல், பூமியில் வசிக்கும் எல்லோருக்கெதிராகவும் அவர் ஆர்ப்பரிப்பார்.
31 நாடுகளுக்கு விரோதமாகவும் யெகோவா குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருவதால், பூமியின் கடைசிவரை கொந்தளிப்பு எதிரொலிக்கும். அவர் எல்லா மனுக்குலத்தின்மீதும் நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார். கொடியவர்களையோ வாளுக்கு ஒப்புக்கொடுப்பார்’ ” என்று யெகோவா அறிவிக்கிறார்.
32 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “பார்! நாட்டிலிருந்து நாட்டுக்கு பேராபத்து பரவுகிறது, பூமியின் கடைசி எல்லையிலிருந்து ஒரு பலத்த புயல் எழும்புகிறது.”
33 அக்காலத்தில் யெகோவாவினால் கொலையுண்டவர்கள் பூமியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை எங்கும் சிதறுண்டு கிடப்பார்கள். அவர்களுக்காக யாரும் புலம்பமாட்டார்கள். அவர்கள் ஒன்றுசேர்த்து புதைக்கப்படவும் மாட்டார்கள். நிலத்தின்மேல் குப்பையைப்போல் கிடப்பார்கள்.
34 மேய்ப்பர்களே, அழுது புலம்புங்கள். மந்தையின் தலைவர்களே! புழுதியில் புரளுங்கள். நீங்கள் கொல்லப்படும் காலம் வந்துவிட்டது. மிக மெல்லிய மண்பாத்திரத்தைப்போல் நீங்கள் விழுந்து நொறுங்குவீர்கள்.
35 மேய்ப்பர்கள் ஓடுவதற்கு இடமிருக்காது. மந்தையின் தலைவர்கள் தப்புவதற்கும் இடமிருக்காது.
36 மேய்ப்பர்களின் அழுகையைக் கேளுங்கள்; மந்தையின் தலைவர்களின் புலம்பலைக் கேளுங்கள். யெகோவா அவர்களுடைய மேய்ச்சல் இடத்தை அழிக்கிறார்.
37 யெகோவாவின் பயங்கரமான கோபத்தினால் அமைதி நிறைந்த பசும்புல்வெளிகள் பாழாய் விடப்படும்.
38 பதுங்குமிடத்தைவிட்டு இரைதேடப் புறப்படும் சிங்கத்தைப்போல் அவர் புறப்படுவார். அவர்களுடைய நாடு பாழாக்கப்படும். ஒடுக்குகிறவனுடைய வாளினாலும், யெகோவாவின் பயங்கரமான கோபத்தினாலும் இப்படியாகும்.
×

Alert

×