English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

James Chapters

James 2 Verses

1 பிரியமானவர்களே, நமது மகிமையுள்ள கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கிறவர்களாகிய நீங்கள் பாரபட்சம் காட்டக்கூடாது.
2 உங்களுடைய திருச்சபை கூடும்போது, ஒருவன் தங்கமோதிரத்தையும், பளபளப்பான உடைகளையும் அணிந்துகொண்டு வந்திருக்கிறான் என்றும், இன்னொரு ஏழை கந்தையான உடை அணிந்து அங்கு வந்திருக்கிறான் என்றும் வைத்துக்கொள்வோம்.
3 நீங்கள் பளபளப்பான உடை அணிந்துவந்த அந்த மனிதனைப் பார்த்து, “இங்குள்ள நல்ல இருக்கையில் வந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று, அவனுக்கு விசேஷ கவனிப்பைக் கொடுத்து, அந்த ஏழையைப் பார்த்தோ, “நீ அங்கே நில்” அல்லது, “எனது காலடியில், தரையில் உட்கார்ந்துகொள்” என்றும் சொன்னால்,
4 நீங்கள் உங்களுக்குள்ளே வேறுபாடு காண்பிக்கிறீர்கள் அல்லவா? இதனால் நீங்கள் அவர்களைத் தீய எண்ணத்துடன் மதிப்பிடுகிறீர்களே!
5 எனக்கு பிரியமானவர்களே, கேளுங்கள்: உலகத்தாரின் பார்வையில் ஏழைகளாய்க் காணப்பட்டவர்களை, விசுவாசத்தில் செல்வந்தர்களாய் இருக்கும்படி, இறைவன் தெரிந்துகொள்ளவில்லையா? அவர்கள் இறைவனில் அன்பாயிருக்கிறவர்களுக்கு வாக்குப்பண்ணிய அரசை உரிமைச்சொத்தாகக் கொடுக்கும்படியும், ஏழைகளையே தெரிந்துகொண்டாரே.
6 ஆனால் நீங்களோ, ஏழைகளை அவமதிக்கிறீர்கள். செல்வந்தர்கள் அல்லவா உங்களை அடக்கி ஒடுக்குகிறார்கள்? அவர்கள் அல்லவா உங்களை நீதிமன்றத்துக்கு இழுத்துச்செல்கிறார்கள்?
7 உங்களை உரிமையாகக் கொண்டிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய சிறப்பான பெயருக்கு அவர்கள் அல்லவா அவமதிப்பைக் கொண்டுவருகிறார்கள்.
8 “உன்னில் அன்பாயிருப்பதுபோல், உன் அயலவனிலும் அன்பாயிரு” [*லேவி. 19:18] என்று வேதவசனத்தில் கூறப்பட்டிருக்கின்ற, இந்த அரச சட்டத்தை நீங்கள் உண்மையாகக் கைக்கொள்வீர்களானால், நீங்கள் நல்லதைச் செய்கிறவர்களாய் இருப்பீர்கள்.
9 ஆனால் நீங்கள் பாரபட்சம் காட்டுவீர்களானால், நீங்கள் பாவம் செய்கிறீர்கள்; சட்டத்தை மீறியவர்கள் என்று மோசேயின் சட்டத்தினால் குற்றவாளிகளாய்த் தீர்க்கப்படுவீர்கள்.
10 ஏனெனில், யாராவது ஒருவன் மோசேயின் சட்டத்தை முழுவதும் கைக்கொண்டு, ஒன்றில் மட்டும் தவறினால், அவன் முழு சட்டத்தையும் மீறிய குற்றவாளியாகிறான்.
11 “விபசாரம் செய்யாதே” [†யாத். 20:14; உபா. 5:18] என்று சொன்னவர், “கொலை செய்யாதே” [‡யாத். 20:13; உபா. 5:17] என்றும் சொல்லியிருக்கிறார். எனவே நீ விபசாரம் செய்யாவிட்டாலும், கொலை செய்தால், நீ மோசேயின் சட்டத்தை மீறியவனாகின்றாய்.
12 விடுதலை அளிக்கும் சட்டத்தின் அடிப்படையிலேயே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படப் போகிறபடியால் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.
13 ஏனெனில், இரக்கம் காட்டாமல் நடந்து கொள்கிறவனுக்கு, இரக்கமற்ற நியாயத்தீர்ப்பே கிடைக்கும். நியாயத்தீர்ப்பிற்கு மேலாக, இரக்கமே வெற்றிபெறும்.
14 பிரியமானவர்களே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லிக்கொண்டு, அதற்கேற்ற செயலைச் செய்யாதிருந்தால், அதனால் பயன் என்ன? அப்படிப்பட்ட விசுவாசம் அவனை இரட்சிக்குமா?
15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது உடையின்றியும் அன்றாட உணவின்றியும் இருக்கும்போது,
16 உங்களில் யாராவது அவர்களைப் பார்த்து, “சமாதானத்தோடு போய்வா; குளிர்காய்ந்துகொள், திருப்தியாகச் சாப்பிடு” என்று சொல்லியும், அவனது உடலுக்குரிய தேவைகளைக் கொடுத்து உதவாவிட்டால், அதனால் பயன் என்ன?
17 இவ்விதமாய் விசுவாசமும் அதற்கேற்ற செயலற்றதாய் வெறுமனே இருந்தால், அது செத்துப்போன விசுவாசமே.
18 ஒருவன், “உங்களிடம் விசுவாசம் இருக்கிறது; என்னிடமோ, செயல்கள் இருக்கின்றது” என்று சொல்வானாகில், அதற்கு நான், “செயலில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காட்டு என்றும், நான் என்னுடைய விசுவாசத்தை என்னுடைய செயல்களின் மூலமாய் உனக்குக் காட்டுவேன்” என்றும் சொல்வேன்.
19 ஒரே ஒரு இறைவன்தான் இருக்கிறார் என்று நீ விசுவாசிக்கிறாய். அது நல்லதுதான். பிசாசுகளுங்கூட அதை விசுவாசிக்கின்றனவே, விசுவாசித்து நடுங்குகின்றனவே.
20 புத்தியில்லாத மனிதனே, செயலற்ற விசுவாசம் வீணானது என்பதைக் காண்பிக்க உனக்கு ஆதாரம் வேண்டுமோ?
21 நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாம், தன்னுடைய மகனாகிய ஈசாக்கை, பலிபீடத்தின்மேல் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபோது, தன்னுடைய செயலினால் அல்லவோ நீதிமான் என்று எண்ணப்பட்டான்?
22 ஆபிரகாமினுடைய விசுவாசமும் அவனுடைய செயல்களும் ஒன்றாகச் செயலாற்றின. அவன் செய்த செயலினாலேயே, அவனுடைய விசுவாசம் முழுநிறைவு பெற்றது.
23 இவ்விதமாய், “ஆபிரகாம் இறைவனை விசுவாசித்தான். அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது” [§ஆதி. 15:6] என்று வேதவசனம் சொல்கிறபடி நிறைவேறிற்று. ஆபிரகாம் இறைவனின் நண்பன் எனவும் அழைக்கப்பட்டான்.
24 எனவே, ஒருவன் விசுவாசத்தினால் மாத்திரமல்ல, அவன் செய்கின்ற செயலினாலும் நீதிமானாக்கப்படுகிறான் என்று பார்க்கிறீர்கள்.
25 அவ்வாறே, வேசியாகிய ராகாபும் இஸ்ரயேல் ஒற்றர்களுக்குத் தங்குவதற்கு இடமளித்து, வேறு வழியாய் அவர்களை அனுப்பிவைத்த செயலினால் நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா?
26 உயிரற்ற உடல் செத்துப்போன ஒன்றே; அதுபோலவே, செயலற்ற விசுவாசமும் செத்துப்போனதே.
×

Alert

×