பின்பு நான் என் மனைவியாகிய இறைவாக்கு உரைப்பவளுடன் சேர்ந்தேன்; அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா என்னிடம், “அவனுக்கு மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்று பெயரிடு.
அவன் ‘என் அப்பா’ அல்லது ‘என் அம்மா’ என்று சொல்ல அறியுமுன் தமஸ்குவின் செல்வமும், சமாரியாவின் கொள்ளைப்பொருளும், அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
“இந்த மக்கள், அமைதியாக ஓடும் ஷீலோவாமின் தண்ணீரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ரேத்சீனுக்கும் ரெமலியாவின் மகனுக்கும் என்ன நடக்கும் என்பதில் களிகூர்ந்தார்கள்.
ஆதலால் யெகோவா, ஐபிராத்து நதியின் பெருவெள்ளத்தை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்போகிறார். அசீரிய அரசனே கம்பீரத்துடன் அந்த வெள்ளத்தைப்போல் வருவான். அது வாய்க்கால்களை நிரப்பி கரைபுரண்டு பாயும்.
அது யூதா நாட்டிற்குள் பாய்ந்து, அதற்கு மேலாகப் பெருக்கெடுத்து அதன் கழுத்தளவுக்குப் பாயும். இம்மானுயேலே, உனது நாட்டின் அகன்ற பரப்பை வெள்ளத்தின் அகல விரிந்த சிறகுகள் மூடுமே!”
நாடுகளே, போர் முழக்கமிடுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்! தூர தேசங்களே, கேளுங்கள். போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்! போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
உங்கள் போர் முறையைத் திட்டமிடுங்கள், ஆனால் அது முறியடிக்கப்படும்; கூடிப்பேசி முடிவெடுங்கள், ஆனால் அதுவும் நிலைக்காது; ஏனெனில் இறைவன் நம்மோடு இருக்கிறார்.
அவர் உனக்குப் பரிசுத்த இடமாயிருப்பார்; ஆனால் இஸ்ரயேல், யூதாவாகிய இரு குடும்பங்களுக்கும் அவர், இடறச்செய்யும் கல்லாகவும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருப்பார். எருசலேம் மக்களுக்கு அவர் கண்ணியாகவும், பொறியாகவும் இருப்பார்.
நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம். நாங்கள் சீயோன் மலையில் வசிக்கும் எல்லாம் வல்ல யெகோவாவினால் இஸ்ரயேலில் அடையாளங்களும் அறிகுறிகளுமாய் இருக்கிறோம்.
பின்பு அவர்கள் பூமியை நோக்கிப்பார்த்து துன்பத்தையும், இருளையும், பயங்கர அந்தகாரத்தையும் மட்டுமே காண்பார்கள். அவர்கள் காரிருளுக்குள்ளே தள்ளப்படுவார்கள்.