“யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள். இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே, யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே, யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்; நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்; ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை.
முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன். பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று.
ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்; அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன். ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன; எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’ என்று நீ சொல்லமுடியாது.
இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி. இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ? “இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன், இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள்.
அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன; நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’ என்று உன்னால் சொல்லமுடியாது.
நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை. நீ எவ்வளவு துரோகி, பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன்.
நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்; எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்; நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன்.
“நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்: உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது? யெகோவாவுக்குப் பிரியமானவன் அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்; அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும்.
“நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்: “முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை; அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.” இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார்.
என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்; உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும்.
உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்; உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்; அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும், அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.”
பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள், பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்! ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப் பிரசித்தப்படுத்துங்கள்! யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி, அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்;
அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை; அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார். அவர் பாறையைப் பிளந்தார், தண்ணீர் பொங்கி வழிந்தது.