பேல் [*பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன்.] தெய்வம் தலை கவிழ்கிறது; நேபோ தெய்வம் குப்புற விழுகிறது. அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன; ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள் இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன.
“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன், நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன்.
சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி, தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்; அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்; பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள்.
அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள். அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள். அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது. ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை; ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது.
நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர், முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர். ‘என் நோக்கம் நிலைநிற்கும்; நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன்.
நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன். தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன். நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்; நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன்.
நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன், அது வெகுதூரத்தில் இல்லை; எனது இரட்சிப்பு தாமதம் அடையாது. நான் சீயோனுக்கு இரட்சிப்பையும், இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன்.