Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 45 Verses

1 “அபிஷேகம் செய்யப்பட்ட கோரேசைப்பற்றி யெகோவா சொல்கிறதாவது, அவனுக்கு முன்பாக நாடுகளை அடக்கும்படியும், அரசர்களின் போர் ஆயுதங்களை களையப்பண்ணும்படியும், அவனுக்கு முன்பாக வாசல்கள் மூடாதபடி கதவுகள் திறக்கப் பண்ணும்படியும் நான் அவனுடைய வலதுகையை தாங்கிப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்வதாவது:
2 நான் உனக்கு முன்சென்று, மலைகளைத் தரைமட்டமாக்குவேன்; நான் வெண்கலக் கதவுகளை உடைத்து, இரும்புத் தாழ்ப்பாள்களையும் தகர்ப்பேன்.
3 நான் இருளில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும், மறைவிடங்களில் சேகரிக்கப்பட்ட புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; அப்பொழுது உன்னைப் பெயர்சொல்லி அழைத்த இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா நானே என்பதை நீ அறிந்துகொள்வாய்.
4 என் அடியவன் யாக்கோபின் நிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலின் நிமித்தமும் நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும், நான் உனக்குப் பெயரையும் புகழையும் வழங்கினேன்.
5 நானே யெகோவா, வேறு எவருமில்லை; என்னைத்தவிர இறைவனும் இல்லை. நீ என்னை ஏற்றுக்கொள்ளாத போதிலும், நான் உன்னைப் பெலப்படுத்துவேன்.
6 அப்பொழுது சூரியன் உதிக்கும் இடத்திலிருந்து, அது மறையுமிடம் வரையுமுள்ள மனிதர் எல்லோரும், எனக்கிணையானவர் யாரும் இல்லை என்பதை அறிந்துகொள்வார்கள். நானே யெகோவா, வேறு யாரும் இல்லை.
7 ஒளியையும் இருளையும் படைக்கிறவர் நானே, சமாதானத்தையும் கஷ்டங்களையும் ஏற்படுத்துகிறவரும் நானே; நான் யெகோவா, நானே இவை எல்லாவற்றையும் செய்கிறேன்.
8 “மேலேயுள்ள வானங்களே, நீதியைப் பொழியுங்கள்; மேகங்கள் அதைப் பொழியட்டும். பூமி அகலமாய்த் திறந்து, இரட்சிப்பின் கனியைத் தந்து, நீதி அதனுடன் துளிர்க்கட்டும்; யெகோவாவாகிய நானே அதைப் படைத்தேன்.
9 “தன்னைப் படைத்தவருடன் வாதாடுபவனுக்கு ஐயோ, கேடு! அவன் அவருக்கு முன்பாகத் தரையில் கிடக்கும் மண்ணோடுகளில் ஒரு ஓடுதானே. களிமண் குயவனைப் பார்த்து, ‘நீ என்னத்தை உருவாக்குகிறாய்?’ எனக் கேட்கலாமோ? நீ செய்யும் பொருள் உன்னிடம், ‘உனக்குக் கைத்திறன் இல்லை’ என்று சொல்லலாமோ?
10 தன் தகப்பனிடம், ‘நீ ஏன் என்னைப் பிறப்பித்தாய்?’ என்றும், தன் தாயிடம், ‘நீ ஏன் என்னைப் பெற்றெடுத்தாய்?’ என்றும் கேட்பவனுக்கு ஐயோ, கேடு!
11 “இஸ்ரயேலின் பரிசுத்தரும், அதைப் படைத்தவருமாகிய யெகோவா சொல்வது இதுவே; இனி நடக்கப்போவதைக் குறித்து, எனது பிள்ளைகளைப்பற்றி என்னிடம் கேள்வி கேட்கிறீர்களா? எனது கைகளின் வேலையைப்பற்றி எனக்குக் கட்டளையிடுகிறீர்களா?
12 நானே பூமியை உருவாக்கி, அதன்மேல் மனுமக்களையும் படைத்தேன். எனது சொந்தக் கரங்களே வானங்களை விரித்தன; நட்சத்திர சேனைகளையும் நானே அதினதின் இடத்தில் நிலைநிறுத்தினேன்.
13 நான் எனது நியாயத்தின்படி கோரேசை எழுப்புவேன்; அவனுடைய வழிகளையெல்லாம் நேராக்குவேன். அவன் திரும்பவும் என் நகரத்தைக் கட்டுவான், நாடுகடத்தப்பட்ட எனது மக்களை விலையோ, வெகுமானமோ பெறாமல் விடுதலையாக்குவான்” என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
14 யெகோவா இஸ்ரயேலுக்கு கூறுவதாவது: “எகிப்தின் உற்பத்திப் பொருட்களும், எத்தியோப்பியாவின் வியாபாரப் பொருட்களும் வரும்; இவற்றுடன் வளர்த்தியில் உயரமான சபேயரும் உன்னிடம் வந்து, உன்னுடையவர்கள் ஆவார்கள். அவர்கள் சங்கிலிகளால் கட்டப்பட்டு, உன் பின்னால் வருவார்கள். அவர்கள் உன் முன்னால் விழுந்து வணங்கி, ‘இறைவன் நிச்சயமாகவே உன்னுடன் இருக்கிறார்; அவரைத்தவிர வேறு எவருமில்லை. வேறெந்த தெய்வமும் இல்லை’ என்று சொல்லி தங்களுக்கு இரங்கும்படி கேட்பார்கள்.”
15 இஸ்ரயேலின் இரட்சகரும் இறைவனுமானவரே, உண்மையாகவே உம்மை நீர் மறைத்துக்கொள்கிற இறைவன்.
16 விக்கிரகங்களை உருவாக்கும் அனைவரும் வெட்கமடைந்து அவமானத்திற்கு உள்ளாவார்கள்; அவர்கள் அனைவரும் ஒன்றாய் கலங்கிப் போவார்கள்.
17 ஆனாலும் யெகோவாவினால் இஸ்ரயேல் நித்திய இரட்சிப்புடன் பாதுகாக்கப்படும். நீங்கள் நித்திய காலங்களுக்கு வெட்கப்படாமலும், அவமானத்திற்கு உட்படாமலும் இருப்பீர்கள்.
18 யெகோவா கூறுவதாவது: அவர் வானங்களை உருவாக்கினார், அவரே இறைவன்; அவர் பூமியை உருவமைத்துப் படைத்தார்; அவரே அதை அமைத்தார். அது வெறுமையாயிருக்க அவர் படைக்கவில்லை, குடியிருப்புக்காகவே அதை உருவாக்கினார். அவர் கூறுவதாவது: “நானே யெகோவா, என்னையன்றி வேறொருவருமில்லை.
19 இருளின் நாட்டில் எங்கேயாகிலும் இருந்து நான் இரகசியமாய்ப் பேசவில்லை, ‘வீணாக என்னைத் தேடுங்கள்’ என்று நான் யாக்கோபின் வழித்தோன்றல்களுக்குச் சொல்லவுமில்லை; நான் யெகோவா, உண்மையையே பேசுகிறவர்; சரியானதையே நான் அறிவிக்கிறேன்.
20 “ஒன்றுசேர்ந்து வாருங்கள்; பிற நாடுகளிலிருந்து வந்த அகதிகளே, ஒன்றுகூடுங்கள். மரச்சிலைகளைச் சுமந்து செல்வோரும், இரட்சிக்க முடியாத தெய்வங்களிடம் மன்றாடுகிறவர்களும் அறிவீனர்.
21 நடக்கப்போவது என்ன? சொல்லுங்கள்; ஒன்றுகூடி ஆலோசித்து அதை அறிவியுங்கள். வெகுகாலத்திற்குமுன் இதை முன்னறிவித்தவர் யார்? ஆதியிலிருந்தே அதை அறிவித்தவர் யார்? அது யெகோவாவாகிய நான் அல்லவோ! என்னையன்றி வேறே இறைவன் இல்லை. நீதியான ஒரு இறைவன், ஒரு இரட்சகர்; என்னையன்றி வேறொருவரில்லை.
22 “பூமியின் எல்லைகளிலுள்ளவர்களே, நீங்கள் எல்லோரும் என்னிடமாகத் திரும்பி இரட்சிப்படையுங்கள். ஏனெனில், நானே இறைவன், வேறு ஒருவரும் இல்லை.
23 என்னைக்கொண்டே நான் ஆணையிட்டேன், இதை உத்தமத்தோடு எனது வாய் பேசியிருக்கிறது. அந்த வார்த்தை ஒருபோதும் மாறாது: ஒவ்வொரு முழங்காலும் எனக்கு முன்பாக முடங்கும்; ஒவ்வொரு நாவும் என் பெயரிலேயே ஆணையிடும்.
24 ‘யெகோவாவிடம் மட்டுமே நீதியும் வல்லமையும் இருக்கிறது’ என்று என்னைப்பற்றி அவர்கள் சொல்வார்கள்.” அவருக்கு எதிராக எழுந்த அனைவரும் அவரிடம் வந்து வெட்கத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்.
25 ஆனால் இஸ்ரயேலின் வழித்தோன்றல்கள் யாவரும் யெகோவாவிடம் நீதியானவர்களாகக் காணப்பட்டு மேன்மையடைவார்கள்.
×

Alert

×