{#1நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு } நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும்.
யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார்.
வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். வானசேனை அனைத்தும் திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.
யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார்.
காளைக் கன்றுகளும், பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.
அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள்.
பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார்.
அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும்.
யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார்.
அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.