அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே, ஐயோ உனக்குக் கேடு! காட்டிக்கொடுக்கப்படாதிருந்த துரோகியே, ஐயோ உனக்குக் கேடு! நீ அழிப்பதை நிறுத்தும்போது, நீ அழிக்கப்படுவாய்; நீ காட்டிக்கொடுப்பதை நிறுத்தும்போது, நீ காட்டிக்கொடுக்கப்படுவாய்.
அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்; அவர் இரட்சிப்பும், ஞானமும், அறிவும் நிறைந்த ஒரு செல்வக் களஞ்சியமுமாயிருப்பார். யெகோவாவுக்குப் பயந்து நடத்தலே இந்தத் திரவியத்தை அடைவதற்கான திறவுகோல்.
பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன; தெருக்களிலே பிரயாணிகளைக் காணவில்லை. உடன்படிக்கை மீறப்பட்டிருக்கிறது, அதன் சாட்சிகள் [*சாட்சிகள் அல்லது பட்டணங்கள் எனப்படும்] அவமதிக்கப்பட்டார்கள், மதிக்கப்படுவார் ஒருவரும் இல்லை.
அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்; கன்மலைகளின் கோட்டையே அவர்களுடைய புகலிடமாய் இருக்கும். அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும், அவர்களுக்குத் தண்ணீரும் குறைவில்லாமல் இருக்கும்.
நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து: “அந்த பிரதான அதிகாரி எங்கே? வருமானத்தை எடுத்தவன் எங்கே? கோபுரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி எங்கே?” என்று கேட்பீர்கள்.
நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்; உங்கள் கண்கள் அமைதி நிறைந்த இருப்பிடமும், அசைக்கப்படாத கூடாரமுமாகிய எருசலேமைக் காணும். அதன் முளைகள் ஒருபோதும் பிடுங்கப்படமாட்டாது, அதன் கயிறுகள் ஒன்றாவது அறுக்கப்படவுமாட்டாது.
யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார். அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும். துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ, பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை.