English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Isaiah Chapters

Isaiah 30 Verses

1 “பிடிவாதமுள்ள என் பிள்ளைகளுக்கு ஐயோ கேடு!” என்று யெகோவா அறிவிக்கிறார். “ஏனெனில் அவர்கள் என்னுடையதல்லாத திட்டங்களைச் செயல்படுத்துகிறார்கள். என் ஆவியானவரினாலன்றி உடன்படிக்கை செய்து, பாவத்திற்குமேல் பாவத்தைக் குவிக்கிறார்கள்.
2 என்னிடம் அறிவுரை கேளாமல் எகிப்திற்குப் போகிறார்கள். அவர்கள் பார்வோனின் பாதுகாப்பின்கீழ் உதவிகோரி, எகிப்தின் நிழலில் அடைக்கலம் தேடுகிறார்கள்.
3 ஆனால் பார்வோனின் பாதுகாவல் உங்களுக்கு வெட்கமாகும்; எகிப்தின் நிழல் உங்களுக்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
4 சோவானில் அவர்களுக்கு தலைவர்கள் இருந்தாலும், அவர்களுடைய பிரதிநிதிகள் ஆனேஸ்மட்டும் வந்து சேர்ந்தாலும்,
5 அவர்களுக்குப் பயனற்ற நாடான எகிப்தின் நிமித்தம் ஒவ்வொருவரும் வெட்கத்திற்குட்படுவார்கள். அவர்களால் யாதொரு உதவியோ, நன்மையோ கிடைப்பதில்லை; வெட்கமும் அவமானமுமே கிடைக்கும்.”
6 [*நெகேவ் என்பது இஸ்ரயேலின் தெற்கு பகுதி] நெகேவ் பாலைவனத்தின் மிருகங்களைப் பற்றிய இறைவாக்கு: பெண் சிங்கங்களும், ஆண்சிங்கங்களும், விரியன் பாம்பும், பறக்கும் பாம்பும் இருக்கின்ற, துன்பமும் வேதனையுமுள்ள நாட்டின் வழியாகத் தூதுவர் போகிறார்கள். அவர்கள் தமது செல்வங்களைக் கழுதைகள்மேலும், திரவியங்களை ஒட்டகங்கள்மேலும் ஏற்றிக்கொண்டு, பயனற்ற நாட்டவரிடம் போகிறார்கள்.
7 எகிப்தியர் செய்யும் உதவி பயனற்றது. ஆதலால் நான் எகிப்தை, ஆற்றலிழந்த ராகாப் என்று அழைக்கிறேன்.
8 இப்பொழுது நீ போய், அவர்களுக்காக அதை ஒரு பலகையில் எழுதி, ஒரு சுருளில் குறித்துவை; எதிர்காலத்தில் அது ஒரு நித்திய சாட்சியாய் இருக்கும்.
9 இவர்கள் கலகம் செய்யும் மக்கள், வஞ்சகம் நிறைந்த பிள்ளைகள்; யெகோவாவின் வேதத்தைக் கேட்க விருப்பமற்ற பிள்ளைகள்.
10 இவர்கள் தரிசனம் காண்போரிடம், “இனி தரிசனம் காணாதீர்கள்!” என்கிறார்கள். இறைவாக்கு உரைப்போரிடம், “எங்களுக்கு இனிமேல் யதார்த்தமாய் தரிசனங்களைச் சொல்லவேண்டாம்! இன்பமானவற்றை எங்களுக்குக் கூறி, போலியானவற்றை இறைவாக்காய் உரையுங்கள்.
11 எங்கள் வழியை விட்டுவிடுங்கள்; எங்கள் பாதையைவிட்டு விலகுங்கள்; இஸ்ரயேலின் பரிசுத்தரைப் பற்றி எங்கள் முன்பாக பேசுவதை நிறுத்துங்கள்!” என்றும் சொல்கிறார்கள்.
12 ஆகையால் இஸ்ரயேலின் பரிசுத்தர் சொல்வது இதுவே: “நீங்கள் இந்தச் செய்தியை நிராகரித்தீர்கள்; ஒடுக்குகிறதில் நம்பிக்கை வைத்து, வஞ்சகத்தை சார்ந்திருக்கிறீர்கள்.
13 ஆனால் உயர்ந்த மதிலில் இருக்கும் வெடிப்பு கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, திடீரென ஒரு நொடியில் சரிந்து விழுவதுபோல, இந்தப் பாவம் உங்களையும் வீழ்த்தும்.
14 நீங்கள் மண்பாத்திரம்போல் துண்டுகளாக உடைந்து போவீர்கள். அடுப்பிலிருந்து நெருப்புத்தணல் எடுக்கவோ, அல்லது தொட்டியிலிருந்து தண்ணீர் எடுக்கவோ, அந்தப் பாத்திரத்தின் ஒரு துண்டுகூட மீதியாய் இல்லாதிருப்பதுபோல, நீங்களும் இரக்கமில்லாத முறையில் நொறுக்கப்பட்டுப் போவீர்கள்.”
15 இஸ்ரயேலின் பரிசுத்தரும் ஆண்டவருமாகிய யெகோவா சொல்வது இதுவே: “மனந்திரும்பி, என்னில் அமர்ந்திருந்தால் உங்களுக்கு இரட்சிப்பு உண்டாகும்; அமைதியிலும் நம்பிக்கையிலுமே உங்களுக்கு பெலன் உண்டாகும், ஆனால் நீங்கள் அதில் ஒன்றையுமே ஏற்க விரும்பவில்லை.
16 நீங்களோ, ‘இல்லை, நாங்கள் குதிரைகளில் தப்பி ஓடுவோம்’ என்றீர்கள். ஆகையால் நீங்கள் தப்பி ஒடவே நேரிடும். ‘வேகமான குதிரைகளில் ஏறிச்செல்வோம்’ என்றீர்கள்; ஆகையால், உங்களைத் துரத்திப் பிடிப்பவர்களும் வேகமாகவே வருவார்கள்.
17 ஒருவனது பயமுறுத்தலுக்கு ஆயிரம்பேர் பயந்து ஓடுவார்கள்; ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் எல்லோரும் பயந்து ஓடுவீர்கள். மலை உச்சியில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிக்கம்பம் போலவும், குன்றில் தனித்து விடப்பட்டிருக்கும் கொடிபோலவும் சிலர் மட்டுமே மிஞ்சியிருப்பீர்கள்.”
18 அப்படியிருந்தும், யெகோவா உங்கள்மேல் கிருபை காட்ட ஆவலாய் இருக்கிறார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவதற்கு எழும்புகிறார். ஏனெனில், யெகோவா நீதியுள்ள இறைவன். அவருக்காக காத்திருப்பவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!
19 எருசலேமில் வாழும் சீயோன் மக்களே, இனிமேல் நீங்கள் அழமாட்டீர்கள்; நீங்கள் உதவிக்காகக் கூப்பிடும்போது, அவர் எவ்வளவு கிருபையுள்ளவராயிருப்பார்! அவர் அதைக் கேட்டவுடனேயே உங்களுக்குப் பதிலளிப்பார்.
20 யெகோவா உங்களுக்கு துன்பத்தின் அப்பத்தையும், இடுக்கணின் தண்ணீரையும் கொடுத்தாலும், உங்கள் போதகர்கள் இனி ஒருபோதும் மறைவாயிருக்கமாட்டார்கள். உங்கள் சொந்தக் கண்ணாலேயே நீங்கள் அவர்களைக் காண்பீர்கள்.
21 நீங்கள் வழிதவறி இடதுபுறமோ, வலதுபுறமோ திரும்பினாலும், “இதுதான் வழி, இதிலே நடவுங்கள்” என்று உங்கள் பின்னால் சொல்லும் ஒரு குரலை உங்கள் காதுகள் கேட்கும்.
22 அப்போது நீங்கள் வெள்ளித் தகட்டால் மூடிய சிலைகளையும், தங்கத்தகட்டால் மூடிய உருவச்சிலைகளையும் புறக்கணித்து விடுவீர்கள். அவைகளை தீட்டுத் துணிபோல எறிந்துவிட்டு, “தொலைந்து போங்கள்!” என்பீர்கள்.
23 யெகோவா, நீங்கள் நிலத்தில் விதைக்கும் விதைகளுக்காக உங்களுக்கு மழையையும் பெய்யப்பண்ணுவார். விளைச்சலில் வரும் உணவு, சிறந்ததாயும் அதிகமாயும் இருக்கும்; அந்த நாளிலே உங்கள் மந்தைகள் பரந்த புற்தரையில் மேயும்.
24 நிலத்தை உழுகிற எருதும் கழுதையும் முறத்தினாலும், தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட சுவையுள்ள தீனியைத் தின்னும்.
25 பெருங்கொலை நடக்கும் அந்த நாளிலே கோபுரங்கள் இடிந்துவிழும்; ஒவ்வொரு உயர்ந்த மலையிலும், ஒவ்வொரு உயரமான குன்றிலும் இருந்து நீரோடைகள் ஓடும்.
26 யெகோவா தமது மக்களுக்கு தாம் ஏற்படுத்திய காயங்களைக் கட்டும்போதும், அவர்களைக் குணமாக்கும்போதும், சந்திரன் சூரியனைப்போல் பிரகாசிக்கும். சூரிய வெளிச்சம் ஏழு மடங்காகப் பிரகாசிக்கும். அது ஏழு முழு நாட்களின் வெளிச்சம் ஒன்றுதிரண்டாற்போல் இருக்கும்.
27 இதோ, யெகோவாவின் பெயர் வெகுதூரத்திலிருந்து வருகிறது; அது எரியும் கோபத்துடனும், அடர்ந்த புகை மேகங்களுடனும் வருகிறது; அவருடைய உதடுகள் கடுங்கோபத்தால் நிறைந்திருக்கின்றன, அவருடைய நாவு எரிக்கும் நெருப்பு.
28 கழுத்துவரை உயர்ந்து, புரண்டோடும் வெள்ளம்போல அவருடைய மூச்சு இருக்கிறது. அவர் நாடுகளை அழிவென்னும் சல்லடையில் சலித்தெடுக்கிறார்; மக்கள் கூட்டங்களின் தாடைகளில் கடிவாளத்தை வைக்கிறார். அது அவர்களை வழிதவறப்பண்ணும்.
29 இரவில் ஒரு பரிசுத்த விழாவைக் கொண்டாடுவதுபோல, நீங்கள் பாடுவீர்கள். இஸ்ரயேலின் கற்பாறையாகிய யெகோவாவின் மலைக்கு மக்கள் புல்லாங்குழலுடன் போவதுபோல, உங்கள் உள்ளமும் மகிழும்.
30 யெகோவா தமது மாட்சிமையான குரலை மனிதர் கேட்கும்படி செய்வார்; அத்துடன் அவர் தம்முடைய கரம் கீழ்நோக்கி வருவதை அவர்கள் காணும்படி செய்வார். அது கடுங்கோபத்துடனும், சுட்டெரிக்கும் நெருப்புடனும், திடீர் மழையுடனும், இடி முழக்கத்துடனும், கல்மழையுடனும் வரும்.
31 யெகோவாவின் குரல் அசீரியாவைச் சிதறப்பண்ணும்; அவர் தமது செங்கோலால் அவர்களை அடித்து வீழ்த்துவார்.
32 யெகோவா யுத்த களத்திலே, தம் கரத்தால் அவர்களை அடித்து யுத்தம் செய்யும்போது, அவர்கள்மேல் தனது தண்டனைக் கோலால் அடிக்கும் ஒவ்வொரு அடியும், தம்புராவினதும் யாழினதும் இசைக்கேற்ப இருக்கும்.
33 தோபேத் வெகுகாலமாகவே ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது; அது அரசனுக்காகத் தயாராயிருக்கிறது. அதன் நெருப்புக்குழி ஆழமாகவும், அகலமாகவும் செய்யப்பட்டு, அதிலே ஏராளமான விறகும் நெருப்பும் இருக்கின்றன. யெகோவாவின் மூச்சு கந்தகச் சுவாலைப்போல் வந்து அதைப் பற்றியெரியச் செய்யும்.
×

Alert

×