English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 3 Verses

1 இப்பொழுது பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்: உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார்.
2 மாவீரனையும், போர்வீரனையும், நீதிபதியையும், இறைவாக்கினனையும், குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும்,
3 ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும், தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும், மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.
4 “நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்; விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”
5 மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்: ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும், இளையோர் முதியோருக்கு விரோதமாகவும், கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.
6 ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து, “உன்னிடம் மேலுடை இருக்கிறது; நீயே எங்களுக்குத் தலைவனாயிரு. பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான்.
7 ஆனால் அவனோ அந்நாளில், “என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது; இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை. என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.
8 எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, யூதா நாடு வீழ்ச்சியடைகிறது; அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது, அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள்.
9 அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது; சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள். அவைகளை மறைத்து வைக்கவில்லை. ஐயோ! அவர்களுக்குக் கேடு; அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.
10 நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்; ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
11 கொடியவர்களுக்கு ஐயோ கேடு! அவர்கள்மேல் பேராபத்து வரும். அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு அவர்களுக்குச் செய்யப்படும்.
12 வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள், பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்; அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.
13 யெகோவா வழக்காட ஆயத்தமாகி, மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார்.
14 யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும் விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார். “என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே; எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
15 நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன? ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
16 மேலும் யெகோவா சொன்னதாவது: “சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்; தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள், அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள். அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள்.
17 ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்; அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.”
18 அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,
19 காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்
20 தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,
21 மோதிரங்கள், மூக்குத்திகள்;
22 உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள்,
23 கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார்.
24 அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்; ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும். அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்; அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்; அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும்.
25 உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்; உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள்.
26 சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்; அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார்.
×

Alert

×