English Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Assamese

Books

Isaiah Chapters

Isaiah 28 Verses

1 எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ கேடு! அதன் மகிமையின் அழகான வாடும் மலருக்கு ஐயோ கேடு! செழிப்பான பள்ளத்தாக்கின் முகப்பில் இருக்கின்ற பட்டணத்திற்கு ஐயோ கேடு! மதுவால் வெறியுண்டு வீழ்ச்சியடைந்தவர்களின் பெருமையாகிய அந்த பட்டணத்திற்கும் ஐயோ கேடு!
2 பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார். அவன் கல்மழை போலவும் அழிக்கும் புயலைப் போலவும், பெருமழைபோலவும், வெள்ளப்பெருக்கு போலவும் அதைப் பலத்துடன் நிலத்தில் வீழ்த்துவான்.
3 எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையாகிய அந்த மலர் மகுடம் காலின்கீழ் மிதிக்கப்படும்.
4 செழிப்பான பள்ளத்தாக்கின் மேலுள்ள, அவளது மகிமையின் அழகாகிய அந்த வாடும் மலர், அறுவடை காலத்திற்கு முன் பழுக்கும் அத்திப்பழத்தைப் போலாகும். அதைக் காண்பவன் தன் கையில் கிடைத்ததும் விழுங்கி விடுகிறான்.
5 அந்த நாளிலே, சேனைகளின் யெகோவா தம் மக்களுள் மீதியாய் இருப்பவர்களுக்கு ஒரு அழகிய மலர் மகுடமும் மகிமையுள்ள ஒரு கிரீடமுமாய் இருப்பார்.
6 அவர் நியாயத்தீர்ப்பு வழங்க உட்காருபவனுக்கு நீதியின் ஆவியாய் இருப்பார்; பகைவரை வாசலிலேயே திருப்பி அனுப்புகிறவர்களுக்கு பலத்தின் ஆதாரமாய் இருப்பார்.
7 ஆனால் இப்பொழுதோ இஸ்ரயேலின் தலைவர்கள் திராட்சை இரசத்தினால் தடுமாறி, மதுபோதையினால் தள்ளாடுகிறார்கள். ஆசாரியரும் இறைவாக்கு உரைப்போரும் மதுவெறியால் தடுமாறுகிறார்கள். திராட்சை இரசத்தால் மயங்கி, மதுவெறியினால் தள்ளாடுகிறார்கள். அவர்கள் தரிசனம் காணும்போது தடுமாறி, தீர்மானம் எடுக்கும்போது இடறுகிறார்கள்.
8 மேஜைகள் யாவும் வாந்தியால் நிறைந்திருக்கின்றன. அழுக்குப்படியாத இடமே அங்கு இல்லை.
9 “யாருக்கு அவர் போதிக்க முயற்சிக்கிறார்? யாருக்கு அவர் செய்தியை விளங்கப்படுத்துகிறார்? பால் மறந்த பிள்ளைகளுக்கோ? அல்லது பால் குடிக்கையில் தாயின் மார்பின் அணைப்பிலிருந்து எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கோ?
10 அவர் படிப்பிக்கும் விதமோ: இதைச் செய், அதைச் செய்; கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை; இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என இருக்கும் என்கிறார்கள்.
11 அப்படியானால், அந்நிய உதடுகளாலும் விளங்காத மொழியினாலும் இறைவன் இந்த மக்களுடன் பேசுவார்.
12 அவர் அவர்களிடம், “இளைப்பாறும் இடம் இதுவே; களைப்புற்றோர் இளைப்பாறட்டும். ஓய்வு பெறுவதற்கான இடம் இதுவே” என்று சொல்லியிருந்தார். ஆனால் அவர்களோ அதைக் கேட்க மறுக்கிறார்கள்.
13 எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு, “இதைச் செய், அதைச் செய்; கட்டளைமேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என்றாகிவிடும். ஆயினும் அவர்கள் போய் பின்புறமாய்த் தடுமாறி விழுந்து, காயப்பட்டு, கண்ணியில் அகப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள்.
14 ஆதலால் எருசலேமில் இந்த மக்களை ஆளுகை செய்வோரே! இகழ்வோரே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
15 “நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது அது தாக்காது; பொய் நமக்கு அடைக்கலமாயும், வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள்.
16 ஆதலால், ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: “இதோ, நான் சீயோனில் ஒரு கல்லை வைக்கிறேன்; அது சோதித்துப் பார்க்கப்பட்ட கல், அது உறுதியான அஸ்திபாரத்துக்கான விலையேறப்பெற்ற மூலைக்கல்; அதில் நம்பிக்கை வைக்கும் எவரும் ஒருபோதும் பதறமாட்டார்கள்.
17 நான் நீதியை அளவு நூலாக்குவேன்; நியாயத்தைத் தூக்கு நூலாக்குவேன். உங்கள் பொய்யான அடைக்கலத்தை, கல்மழை அழிக்கும்; வெள்ளம் உங்கள் மறைவிடத்திற்கு மேலாகப் பெருக்கெடுக்கும்.
18 மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள்.
19 அது வரும்போதெல்லாம் உங்களை அடித்துச்செல்லும்; அது காலைதோறும், இரவும் பகலும் தண்டிப்பதற்காக வந்து வாரிக்கொண்டு போகும்.” இச்செய்தியை நீங்கள் விளங்கிக்கொள்வது உங்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கும்.
20 கால் நீட்டிப் படுக்கக் கட்டிலின் நீளம் போதாது; மூடிக்கொள்ள போர்வையின் அகலமும் போதாது.
21 யெகோவா பேராசீம் மலையில் எழுந்ததுபோல் எழும்புவார், கிபியோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல் எழும்புவார். அவர் தமது வேலையை, எதிர்பாராத வேலையைச் செய்வதற்கும், தமது கடமையை, தாம் விரும்பாத கடமையை நிறைவேற்றுவதற்கும் எழும்புவார்.
22 உங்கள் ஏளனத்தை இப்பொழுது நிறுத்துங்கள், இல்லையெனில் உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் இன்னும் பாரமாகும். யெகோவா, சேனைகளின் யெகோவா முழு நாட்டுக்கும் விரோதமாகத் திட்டமிட்டிருக்கும் அழிவை எனக்குச் சொல்லியிருக்கிறார்.
23 கேளுங்கள், என் குரலுக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
24 ஒரு விவசாயி பயிரிடுவதற்காக உழும்போது தொடர்ந்து உழுதுகொண்டே இருப்பானோ? நிலத்தைத் தொடர்ந்து கொத்தி மண்ணைப் புரட்டிக் கொண்டேயிருப்பானோ?
25 நிலத்தை மட்டமாக்கியபின் வெந்தயத்தை விதைத்து, சீரகத்தையும் தூவமாட்டானோ? கோதுமையை அதற்குரிய இடத்திலும், வாற்கோதுமையை அதற்குரிய பாத்தியிலும், கம்பை அதற்குரிய வயலிலும் விதைக்கமாட்டானோ?
26 அவனுடைய இறைவன் அவனுக்கு போதித்து, சரியான வழியை அவனுக்குக் கற்ப்பிக்கிறார் அல்லவோ?
27 வெந்தயம் சம்மட்டியால் அடிக்கப்படுவதுமில்லை, சீரகம் வண்டிச் சில்லால் மிதிக்கப்படுவதுமில்லை. வெந்தயம் கோலினாலும், சீரகம் தடியினாலுமே அடித்தெடுக்கப்படுகின்றன.
28 அப்பம் செய்வதற்குத் தானியம் அரைக்கப்படவேண்டும்; அதற்காகத் தொடர்ந்து ஒருவன் அதை அரைத்துக்கொண்டே இருப்பதில்லை. அவன் தனது சூடடிக்கும் வண்டிச் சில்லுகளை அதற்குமேல் செலுத்தியபோதிலும், அவனுடைய குதிரைகள் அதை அரைப்பதில்லை.
29 இந்த எல்லா அறிவும் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், ஞானத்தில் சிறந்தவர்.
×

Alert

×