மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும், வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும், வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும், இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும், கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும்.
பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து, நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள்.
ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள். மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள்.
அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும், திராட்சை அறுவடையின்பின் கிளைகளில் சில பழங்கள் மீந்திருப்பது போலுமே பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும் மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.
“நீதியுள்ளவருக்கே மகிமை” என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம். ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன் ஐயோ எனக்குக் கேடு! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்! துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன்.
பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது, அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது; மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால், ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.
இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல், அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள்.
சந்திரன் நாணமடையும், சூரியன் வெட்கமடையும்; ஏனெனில், சேனைகளின் யெகோவா சீயோன் மலையிலும் எருசலேமிலும் அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார்.