கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள்.
அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.
அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.
{#1யெகோவாவின் நாள் } யாக்கோபின் குடும்பமான உமது மக்களை நீர் கைவிட்டுவிட்டீர். அவர்கள் கிழக்குத் தேசத்தவர்களின் போதனைகளால் நிறைந்து, பெலிஸ்தியரைப்போல் குறிபார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள். வேற்று நாட்டு மக்களுடன் கைகோர்த்துத் திரிகிறார்கள்.
அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது; அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு அளவேயில்லை. அவர்களுடைய நாடு குதிரைகளால் நிறைந்திருக்கிறது; அவர்களிடத்தில் தேர்களும் ஏராளமாயிருக்கின்றன.
கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும், மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்; அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார்.
அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும், உயர்த்தப்பட்ட அனைத்திற்கும் சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்; அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள்.
அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் பெருச்சாளிகளுக்கும் வவ்வால்களுக்கும் எறிந்துவிடுவார்கள்.