Bible Languages

Indian Language Bible Word Collections

Bible Versions

English

Tamil

Hebrew

Greek

Malayalam

Hindi

Telugu

Kannada

Gujarati

Punjabi

Urdu

Bengali

Oriya

Marathi

Books

Isaiah Chapters

Isaiah 19 Verses

1 இது எகிப்தைப் பற்றிய ஒரு இறைவாக்கு: இதோ, யெகோவா விரைந்து செல்லும் மேகமொன்றில் ஏறி எகிப்திற்கு வருகிறார். எகிப்திய விக்கிரகங்கள் அவர்முன் நடுங்குகின்றன; எகிப்தியரின் இருதயங்கள் அவர்களுக்குள்ளேயே உருகுகின்றன.
2 “எகிப்தியனை எகிப்தியனுக்கு விரோதமாக நான் எழுப்பிவிடுவேன்; சகோதரன் சகோதரனுக்கு விரோதமாகச் சண்டையிடுவான். அயலான் அயலானை எதிர்ப்பான், பட்டணம் பட்டணத்தை எதிர்க்கும், அரசு அரசை எதிர்க்கும்.
3 அதனால் எகிப்தியர் இருதயத்தில் சோர்ந்துபோவார்கள்; நான் அவர்களுடைய திட்டங்களை நிறைவேறாதபடி செய்வேன். அவர்கள் விக்கிரகங்களிடமும், இறந்தோரின் ஆவிகளிடமும், குறிசொல்வோரிடமும், ஆவியுலகத் தொடர்புடையோரிடமும் ஆலோசனை கேட்பார்கள்.
4 நான் எகிப்தியரை கொடிய தலைவன் ஒருவனது வல்லமைக்கு ஒப்புக்கொடுப்பேன். அவர்களை கொடூரமான அரசன் ஒருவன் ஆளுவான்” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
5 ஆற்றின் வெள்ளம் வற்றிவிடும், ஆற்றின் அடித்தரை காய்ந்து வறண்டுவிடும்.
6 வாய்க்கால்கள் நாறும்; எகிப்தின் நீரோடைகள் வற்றி வறண்டுபோகும். கோரையும் நாணலும் வாடிவிடும்.
7 ஆற்றின் முகத்துவாரத்தில், நைல் நதியின் ஓரத்தில் வளரும் தாவரங்களும் வாடிவிடும். நதியோரம் விதைக்கப்பட்ட உலர்ந்து, பறந்து இல்லாமல் போகும்.
8 மீனவர்கள் புலம்புவார்கள், நைல் நதியில் தூண்டில்போடும் யாவரும் அழுவார்கள்; தண்ணீருள் வலை வீசுகிறவர்களும் கவலையால் வாடிப்போவார்கள்.
9 சணற்பட்டுத் தொழில் செய்வோரும் வெண்பருத்தி நூலினால் நெசவு செய்வோரும் வெட்கமடைவார்கள்.
10 துணி நெசவு செய்வோர் அனைவருமே சோர்வடைவார்கள்; கூலிக்கு வேலைசெய்யும் யாவரும் மனமுடைந்து போவார்கள்.
11 சோவானின் அதிகாரிகள் புத்தியீனரேயன்றி வேறு யாருமல்லர்; பார்வோனின் ஞானமுள்ள ஆலோசகர் அர்த்தமற்ற ஆலோசனை வழங்குகிறார்கள். “நான் ஞானிகளில் ஒருவன்; பூர்வகால அரசர்களின் வழிவந்தவன்” என்று நீங்கள் ஒவ்வொருவரும் எப்படி பார்வோனுக்குச் சொல்வீர்கள்?
12 இப்பொழுது உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் யெகோவா எகிப்திற்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதை, அவர்கள் உனக்கு வெளிப்படுத்திக் காட்டட்டும்.
13 சோவானின் அதிகாரிகள் புத்தியீனரானார்கள்; மெம்பிஸ் [*மெம்பிஸ் அல்லது நோப்] பட்டணத்தின் தலைவர்கள் ஏமாந்துபோனார்கள். மக்கள் கூட்டங்களின் மூலைக் கற்களாய் இருந்த அவர்கள் எகிப்தை வழிதவறிப் போகச் செய்தார்கள்.
14 யெகோவா அவர்களுக்குள் மயக்கத்தின் ஆவியை ஊற்றியிருக்கிறார். மதுபோதையில் தனது வாந்தியைச் சுற்றி தள்ளாடுபவனைப் போல், அவர்கள் எகிப்தை அதன் செயல்கள் அனைத்திலும் தள்ளாடப் பண்ணுகிறார்கள்.
15 அப்பொழுது எகிப்தின் தலையினாலோ, வாலினாலோ, ஓலையினாலோ, நாணலினாலோ செய்யக்கூடியது எதுவுமேயில்லை.
16 அந்த நாளில் எகிப்தியர் பெண்களைப் போலாவார்கள். சேனைகளின் யெகோவா, தமது உயர்த்திய கரத்தை அவர்களுக்கு விரோதமாக ஓங்கும்போது, அவர்கள் பயத்தால் நடுங்குவார்கள்.
17 யூதா நாடும் எகிப்தியரைத் திகிலடையச் செய்யும். சேனைகளின் யெகோவா அவர்களுக்கு விரோதமாகத் திட்டமிட்டிருப்பதின் நிமித்தம், யூதாவைக் குறித்துக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் திகிலடைவார்கள்.
18 அந்த நாளிலே, எகிப்திலுள்ள ஐந்து பட்டணங்கள் கானான் மொழியைப் பேசி, “சேனைகளின் யெகோவாவுக்கே உண்மையாயிருப்போம்” என ஆணையிடுவார்கள். அவைகளில் ஒன்று அழிவின் நகரம் என அழைக்கப்படும்.
19 அந்த நாளிலே எகிப்தின் மத்தியில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடமும், அதன் எல்லையில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னமும் இருக்கும்.
20 இது எகிப்து தேசத்திலே சேனைகளின் யெகோவாவுக்கு ஒரு அடையாளமாகவும், சாட்சியாகவும் இருக்கும். அவர்கள் தங்களை ஒடுக்குவோரினிமித்தம் யெகோவாவிடம் கதறியழும்போது, மீட்பரும் பாதுகாப்பவருமான ஒருவரை அவர்களிடம் அனுப்புவார்; அவர் அவர்களை விடுவிப்பார்.
21 இப்படியாக யெகோவா எகிப்தியருக்குத் தன்னை வெளிப்படுத்துவார்; அந்நாளில் அவர்கள் யெகோவாவை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் பலிகளாலும், தானிய பலிகளாலும் வழிபடுவார்கள்; அவர்கள் யெகோவாவுக்குப் பொருத்தனைகளைச் செய்து, அவைகளை நிறைவேற்றுவார்கள்.
22 யெகோவா எகிப்தைக் கொள்ளைநோயால் வாதிப்பார்; அவர் அவர்களை வாதித்துக் குணமாக்குவார். அவர்கள் யெகோவாவிடத்தில் மனந்திரும்புவார்கள். அவரும் அவர்களுடைய வேண்டுதலைக் கேட்டு, அவர்களைச் சுகமாக்குவார்.
23 அந்த நாளில், எகிப்திலிருந்து அசீரியாவரை ஒரு பெரும்பாதை இருக்கும். எகிப்தியர் அசீரியாவுக்கும், அசீரியர் எகிப்திற்கும் போவார்கள். எகிப்தியரும், அசீரியரும் ஒன்றுகூடி வழிபடுவார்கள்.
24 அந்த நாளில் இஸ்ரயேல், எகிப்தியருடனும், அசீரியருடனும் மூன்றாவது அரசாய், பூமியிலே ஒரு ஆசீர்வாதமாக இருக்கும்.
25 சேனைகளின் யெகோவா, “என் மக்களாகிய எகிப்தியரும், என் கைவேலையாகிய அசீரியரும், எனது உரிமைச்சொத்தான இஸ்ரயேலரும் ஆசீர்வதிக்கப்படட்டும்” என்று சொல்லி அவர்களை ஆசீர்வதிப்பார்.
×

Alert

×