“நீங்கள் ஆலோசனைபண்ணி, ஒரு தீர்மானம் எடுங்கள். நடுப்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்குங்கள். தப்பியோடி வருபவருக்கு மறைவிடம் கொடுங்கள். ஜனங்களைக் காட்டிக் கொடாதிருங்கள்.
மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும். அவர்களை அழிப்பவர்களிடமிருந்து தப்பும்படி அவர்களுக்குப் புகலிடமாயிருங்கள்.” ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு முடிவுவரும், அழிவும் ஓய்ந்துவிடும்; துன்புறுத்துபவன் நாட்டிலிருந்து இல்லாமல் போவான்.
அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும். தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த உண்மையுள்ள ஒருவர் அதில் அமர்ந்திருப்பார். அவர் நியாயத்தீர்ப்புச் செய்ய நீதியை நாடுவார்; தாமதியாமல் நியாயம் செய்வார்.
மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம். அவர்கள் ஆணவம் பெரிதே! அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்; அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே.
இப்பொழுதோ யெகோவா சொல்கிறதாவது: “வேலைசெய்ய ஒப்பந்தம் செய்த கூலியாள் தன் நாட்களைக் கணக்கிடுவது போல, மூன்று வருடங்களுக்குள் மோவாபியரின் சிறப்பும், அங்குள்ள பெருந்தொகையான மக்களும் அவமதிக்கப்படுவார்கள். அதில் தப்பியிருப்போர் மிகச் சிலராயும் பெலவீனராயும் இருப்பார்கள்.”