யெகோவா யாக்கோபின்மேல் இரக்கம்கொள்வார். இஸ்ரயேலை மீண்டும் ஒருமுறை தெரிந்துகொண்டு, அவர்களைத் தங்கள் சொந்த நாட்டில் குடியேற்றுவார்; பிறநாட்டினரும் அவர்களோடு சேர்ந்து, யாக்கோபின் குடும்பத்தாருடன் இணைந்துகொள்வார்கள்.
பிறநாடுகள் இஸ்ரயேலுக்கு உதவிசெய்து, அவர்களைத் தங்களுடைய சொந்த நாட்டுக்குக் கொண்டுவருவார்கள். இஸ்ரயேல் குடும்பத்தார் பல நாடுகளையும் தமக்குச் சொந்தமாக்கி, யெகோவாவினுடைய நாட்டில் வேலைக்காரர்களாகவும், வேலைக்காரிகளாகவும் கையாளுவார்கள். தங்களைச் சிறைப்படுத்தியவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கியவர்களை ஆளுவார்கள்.
அந்தக் கொடுங்கோல் மக்கள் கூட்டங்களைத் தன் கோபத்தில் ஓயாமல் அடித்து வீழ்த்தியது. அது நாடுகளைத் தன் கடுங்கோபத்தில் ஓயாது துன்புறுத்தி, அவர்களை அடக்கியது.
தேவதாரு மரங்களும், லெபனோனின் கேதுரு மரங்களும், உன் வீழ்ச்சியில் மகிழ்ந்து சொல்கிறதாவது: “பாபிலோனே, நீ கீழே வீழ்த்தித் தள்ளப்பட்டிருக்கிறாய். அதனால் இப்பொழுது எங்களை ஒரு மரவெட்டியும் அணுகவில்லை.”
கீழேயுள்ள பாதாளம் நீ வரும்போது, உன்னைச் சந்திக்க பரபரப்படைகிறது. அது உன்னை வரவேற்க மரித்தோரின் ஆவிகளை எழுப்புகிறது; அவர்கள் உலகத்தின் தலைவர்களாய் இருந்தவர்கள். அது அவர்களைத் தங்கள் அரியணைகளிலிருந்து எழும்பச் செய்கிறது; அவர்கள் மக்களுடைய அரசர்களாயிருந்தார்கள்.
நீ உன் இருதயத்தில், “நான் வானத்திற்கு ஏறுவேன்; இறைவனின் நட்சத்திரங்களுக்கு மேலாக என் அரியணையை உயர்த்துவேன். பரிசுத்த மலையின் மிக உயரத்தில், சபைக்கூடும் மலையில் நான் அரியணையில் அமர்ந்திருப்பேன்.
ஆனால் நீயோ ஒதுக்கப்பட்ட கிளையைப்போல் கல்லறைக்கு வெளியே எறியப்பட்டிருக்கிறாய். வாளால் வெட்டிக் கொல்லப்பட்ட பிரேதங்களால் நீ மூடப்பட்டிருக்கிறாய். நீயும் அவர்களுடன் கற்குழிக்குள் எறியப்பட்டிருக்கிறாய். நீ காலின்கீழ் மிதிபடும் பிணத்தைப் போலானாய்.
அந்த அரசர்களுடன் நீ அடக்கம் செய்யப்படமாட்டாய். ஏனெனில் உனது நாட்டையே நீ அழித்து உன் மக்களைக் கொன்றாய். கொடியவரின் சந்ததியினரைக் குறித்து இனியொருபோதும் சொல்லப்பட மாட்டாது.
அவர்களுடைய முற்பிதாக்களின் பாவங்களுக்காக அவர்களுடைய பிள்ளைகளைக் கொலைசெய்வதற்கு ஒரு இடத்தை ஆயத்தப்படுத்துங்கள்; அவர்கள் எழுந்து நாட்டை உரிமையாக்கவோ, பூமியைத் தங்கள் பட்டணங்களால் நிரப்பவோ கூடாது.
“நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “பாபிலோனின் பெயரையும், அங்கு தப்பியிருப்பவர்களையும், அவளுடைய சந்ததிகளையும் அகற்றிவிடுவேன்” என யெகோவா அறிவிக்கிறார்.
நான் அசீரியனை என் நாட்டிலேயே முறியடிப்பேன்; என் மலைகளிலேயே அவனை மிதித்துவிடுவேன். அவனுடைய நுகம் என் மக்களிடமிருந்து எடுக்கப்படும்; அவனுடைய சுமை அவர்களின் தோள்களிலிருந்து நீக்கப்படும்.”
பெலிஸ்தியரே, நீங்கள் எல்லோரும், உங்களை அடித்த கோல் முறிந்தது என்று மகிழவேண்டாம். அந்த பாம்பின் வேரிலிருந்து விரியன் பாம்பு தோன்றும். அதன் கனியோ பறக்கும் விஷப் பாம்பாய் இருக்கும்.
[*ஏழைகளின் தலைப்பிள்ளைகள்] ஏழைகளிலும் ஏழைகளாய் இருப்பவர்கள் உணவைப் பெற்றுக்கொள்வார்கள்; தரித்திரர் பாதுகாப்பாக இளைப்பாறுவார்கள். ஆனால் உன் வேரையோ பஞ்சத்தால் அழிப்பேன்; அது உன்னில் மீதமிருப்போரைக் கொன்றுவிடும்.
வாசலே, புலம்பு! பட்டணமே, கதறியழு! பெலிஸ்தியரே, நீங்கள் அனைவரும் உருகிப்போங்கள்! வடக்கிலிருந்து ஒரு புகைமேகம் வருகிறது; அதன் அணிவகுப்பிலிருந்து விலகுவோர் அங்கு ஒருவரும் இல்லை.