அவர்களின் தீமைகள் எல்லாவற்றையும் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்பதை அவர்கள் உணராதிருக்கிறார்கள். அவர்களின் பாவங்கள் அவர்களை மூடிப்போடுகின்றன; அவை எப்பொழுதும் என்முன் இருக்கின்றன.
அவர்கள் எல்லோரும் விபசாரக்காரர். அவர்கள் அப்பம் சுடும் அடுப்பைப்போல் எரிந்துகொண்டே இருக்கிறார்கள். மாவைப் பிசையும் நேரத்திலிருந்து, அது புளித்துப் பொங்கும் நேரம்வரைக்கும், அதன் நெருப்பை ஊதவேண்டிய அவசியம் இல்லை.
அவர்களின் இருதயங்கள் சதித்திட்டங்களினால் அடுப்பைப்போல் எரிகின்றன; இரவு முழுவதும் அவர்களின் கோபம், நெருப்புத் தணலைப்போல் எரிகிறது; காலையில் அது கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருக்கிறது.
அவர்கள் எல்லோரும் சூடேறிய அடுப்பைப்போலாகி, அவர்கள் தங்கள் ஆளுநர்களை அழிக்கிறார்கள். அவர்களுடைய அரசர்கள் அனைவரும் விழுகிறார்கள்; ஆனால் அவர்களில் ஒருவனும் என்னைக் கூப்பிடுகிறதில்லை.
“எப்பிராயீம் பேதையான புறாவைப் போன்றவன், அவன் புத்தியில்லாதவனாயும் இருக்கிறான். முதலில் அவன் எகிப்தை உதவிக்குக் கூப்பிடுகிறான்; பின் அசீரியாவினிடத்திற்கும் திரும்புகிறான்.
எப்பிராயீமியர் உதவிகேட்டுப் போகும்போது, நான் எனது வலையை அவர்கள்மேல் வீசுவேன்; ஆகாயத்துப் பறவைகள்போல், அவர்களை நான் இழுத்து வீழ்த்துவேன்; அவர்கள் ஒன்றாய்கூடும் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் அவர்களை எச்சரித்ததுபோல் தண்டிப்பேன்.
அவர்களுக்கு ஐயோ கேடு வருகிறது, ஏனெனில், அவர்கள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களுக்கு அழிவு வருகிறது. ஏனெனில், அவர்கள் எனக்கெதிராக கலகம் பண்ணியிருக்கிறார்கள். நான் அவர்களை மீட்பதற்கு விரும்புகிறேன், ஆனால், அவர்களோ எனக்கெதிராய் பொய் பேசுகிறார்கள்.
அவர்கள் தங்கள் படுக்கையிலிருந்து புலம்புகிறார்களே தவிர, தங்கள் இருதயத்திலிருந்து என்னை நோக்கி அழுவதில்லை. தானியத்திற்காகவும், புதுத் திராட்சை இரசத்திற்காகவும் மட்டுமே அவர்கள் பாகால் தெய்வத்திற்குமுன் ஒன்றுகூடுகிறார்கள். எனவே அவர்கள் என்னைவிட்டு வழிவிலகிப் போகிறார்கள்.
நானே அவர்களுடைய மகா உன்னதமான இறைவன்; ஆனால் அவர்கள் என் பக்கம் திரும்புகிறதில்லை. அவர்கள் வலுவிழந்த வில்லைப்போல் இருக்கிறார்கள்; அவர்களுடைய தலைவர்கள் தங்களது இறுமாப்பான பேச்சுகளின் நிமித்தம், வாளினால் விழுவார்கள். இதுவே எகிப்து நாட்டினால் அவர்களுக்கு ஏற்படும் நிந்தை.