{#1மனமாறாத இஸ்ரயேல் } வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். அவர் நம்மைக் காயப்படுத்தினார், ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். அவர் நம்மை நொறுக்கினார், ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. சூரியன் உதிப்பது நிச்சயம்போல, அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். அவர் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார்.
எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது.
கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள்.